எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

கழகத்தின் பாசறையாம் தந்தை பெரியார் அவர் களின் பாடி வீடான தஞ்சையம்பதியிலே வரும் 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் முறையே திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் சகல வகையான சிறப்பு மலர்கள் பூத்துக்குலுங்கும் - மணம் வீசும் மாநாடுகள் நடைபெற உள்ளன.

எத்தனை எத்தனையோ மாநாடுகளை நடத்தி தஞ்சைத் தன் முடியில் வாகை மலர்களைச் சூட்டிக் கொண்டுள்ளது.

தஞ்சை மாவட்டம்பற்றி தந்தை பெரியாரின் கணிப்பு என்ன?

‘‘எங்கும் இயக்கத் தோழர்கள் இருந்தாலும், என்னுடைய முயற்சிக்கும், போக்குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர் கழகமாக ஆன பிறகு மாத்திரமல்ல, நான் காங்கிரசில் இருந்த காலத்திலும், தஞ்சை பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்திலும், நடத்திய காலத்திலும் தஞ்சைதான் ஆதரவு அளித்துள்ளது. எதைச் சொல்கிறேனோ, எதை எதிர்பார்க்கிறேனோ, அதைத் தமிழ்நாடு முழுவதும் பகுதி செய்கிறது என்றால், தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும்.''

இந்த வரலாற்றுப் புகழாரத்தை தஞ்சைக்கு எந்த மாநாட்டில்  தந்தை பெரியார் சூட்டினார் தெரியுமா?

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் - உலகமே கண்டு அறியாத, கேட்டறியாத போராட்டத்தை தந்தை பெரியார் ஆயிரம் ஆயிரம் கரங்கள் உயர, கோடை இடியென முழக்கமிட்ட தஞ்சை ஜாதி ஒழிப்பு தனி (ஸ்பெஷல்) மாநாட்டில்தான் இந்தப் புகழாரத்தைச் சூட்டினார் - தஞ்சையின் உச்சி மோந்தார் (3.11.1957) உலகத் தலைவர் பெரியார்.

அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்ட போராட்டம் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் நடந்திராத புரட்சிப் போராட்டம்!

‘‘ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா?'' என்ற பொருள் பொதிந்த, உச்சிமுடியைப் பிடித்துக் குலுக்கும் வினாவை அந்த மாநாட்டில்தானே தந்தை பெரியார் எழுப்பினார்.

சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடம்பெறாத ஒரு மாபெரும் போராட்டத்தையல்லவா தந்தை பெரியார் அறிவித்தார்.

அவசர அவசரமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசியக் கவுரவ  சின்னங்களை எரித்தால், அவமதித்தால் மூன்றாண்டு தண்டனை என்று சட்டம் செய்யப்பட்டது.(Prevention of Insult to National Honour-1957)

இந்த அவசர சட்டம் கண்டு அஞ்சப் போகிறீர்களா கருஞ்சட்டையினரே - 30 ஆண்டுகள் தண்டனை என்றாலும், சட்ட எரிப்புப் போராட்டம் நடக்கும் என்று அறிவித்த அரிமா அல்லவா அய்யா பெரியார்.

10 ஆயிரம் கருஞ்சட்டையினர் குடும்பம் குடும்பமாக கொளுத்தி சாம்பலை அனுப்பி வைத்தார்களே - அந்த வரலாற்று மணி முடியைச் சூடிய அதே தஞ்சையில்தான் இப்பொழுது இருபெரும் மாநாடுகள்.

1957 நவம்பர் 3 அன்று தஞ்சையிலே நடைபெற்றதே அந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டில் எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் - நாணயத்தின் நாயகரான தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்டதே - அந்த விழா மாநாட்டுக்கு ‘‘ஈரோட்டுப் பாசறைக்கு வாரீர்!'' எனும் தலைப்பில், ‘விடுதலை'யில் எழுதியவர் யார் தெரியுமா?

அன்றைய கடலூர் மாணவர் - சட்டக் கல்லூரி மாணவர் மானமிகு வீரமணி அவர்கள்தான்.

என்ன எழுதினார்?

‘‘இதுவரை எந்தத் தலைவருக்கும் நடந்திராத சிறப்பு நடைபெறுகிறது. இதுவரை எந்தத் தலைவரும் கூறாத கருத்துகளை கூறியவர் - கூறுபவர் தந்தை பெரியார் அவர்கள்தானே - அதனால்தான் ஈரோட்டுப் பாசறைக்கு அழைப்பதாக'' நமது ஆசிரியர் அன்றே அழைப்புக் கொடுத்தார்.

அந்த மாணவர் வீரமணி, மாபெரும் சமூகப் புரட்சி இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவராக, தமிழர் தலைவராக, தமிழ்நாட்டை வழிநடத்தும் தலைவராக - உலகம் முழுவதும் நிறைந்த பகுத்தறிவாளர்கள் மதிக்கும் மானமிகு தலைவராக ஒளிரும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான் வரும் சனி, ஞாயிறு மாநாடுகளுக்கு அழைக்கிறார்! அழைக்கிறார்!! அழைக்கிறார்!!!

தோழர்களே வாருங்கள்!

குடும்பம் குடும்பமாக வாருங்கள்!!

குழந்தைச் செல்வங்களோடு வாருங்கள்!!!

உற்றார் உறவினரோடு வாருங்கள்!

நண்பர் குழாமுடன் வாருங்கள்!

இடையில் மூன்று நாள்கள்தான். நிதி வசூல் - உங்களுடைய இலக்கினை முடித்து விட்டீர்களா தோழர்களே!

நிதியுடன் வாரீர்! நீதி கேட்கும் மாநாடாயிற்றே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner