எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒரு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்படுகின்றனர்.

முற்பகல் 11.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 7 மணி நேரம் வைக்கப்படுகின்றனர். அந்த நேரத்தைக்கூட பயனுள்ள வகையில் கொள்கைப் பாசறையாக மாற்றி, கழகக் கொள்கைகளையும், இலட்சியங்களையும், இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட காரணாதிகளையும், இருபால் தொண்டர்கள் இயல்பாகப் பேசுவதும், அதைக் கழகத்தின் தலைவர் ஏழு மணி நேரம் அமர்ந்து செவிமடுப்பதும் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எங்கும் காண முடியாத உலக அதிசய காட்சி என்பதில் எள்ளளவு முனையும் அய்யமில்லை. இதற்கு என்ன காரணம் - பதவி, அரசியல், பக்கம் கால்களையும், கண்களையும் தாவவிடாமல் இலட்சிய நோக்கு ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டதாகும். அந்த இலட்சிய கர்த்தாவின் கருத்துகளையே சுவாசித்து வாழ்வியல் நடப்பாகக் கொண்டிருப்பது தான் இதற்குக் காரணமாகும். பெரியார் ஒரு வாழ்வியல் சிந்தனை, வாழ்க்கை முறையல்லவா! இன்னும் சிலரின் உரைகளைக் கேட்பீர்!

சி.மெர்சி ஆஞ்சலா மேரி

குடும்பத்தலைவர் ஆசிரியர் உட்பட அனைவருக்கும் வணக்கம்.

என் பெயர் சி.மெர்சி ஆஞ்சலா மேரி. இல்லாத முருகனுக்கு ஆறு வீடுகள். அதுல ஒரு வீடு பழநி. அந்தப் பழநி கழக மாவட்டத்தில் இருந்து ஆவடி மாவட்டத்திற்கு வந்துள்ளோம். எனக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அடுத்த மகள் L.L.B. படித்துக் கொண்டிருக்கிறாள். எங்களுக்கு திருமணம் 1989இல் ஜாதி மறுப்பு, கடவுள் மறுப்புடன் கூடிய காதல் திருமணம். திருமணம் என்று கூடசொல்ல முடியாது. ஏனென்றால் இயக்கத் தோழர்கள் நான்கு பேர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துகொண்டு மனமொத்த வாழ்க்கையைத் தொடங்கினோம்.

எனது வாழ்விணையர் பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டு இயக்கப் பணி ஆற்றக்காரணம் அமைப்பு செயலாளர்அண்ணன் பன்னீர்செல்வம் அவர்களே. எனது வாழ்விணையர் மிகவும் தைரியசாலி. பெரியாரையும், அவரின் கொள்கைகளையும், தமிழர் தலைவர் அவர்களையும் யாராவது விமர்சனம் செய்து விட்டால் அவர்கள் உயிருடன் செல்வார்களா  என்பது நிச்சயமல்ல. அது வன்முறைதான். சரியல்லதான். இருந்தாலும் பெரியாரின் மீதும் கொள்கையின் மீதும் அளவில்லா பற்றுக் கொண்டவர்.

எங்களது வாழ்க்கை ஆரம்பித்த பின்பும் கூடபெரியார் படிப்பகத்தில் இரவு 2 மணி வரை இருந்துவிட்டு தான் வருவார். ஒரு நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். நான் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து சென்ற ஆண்டில் பணி நிறைவு பெற்றேன். நான் பணியாற்றியதால் பொருளாதாரத்திற்கு குடும்பத்தில் ஒருவர் பணியாற்றினால் போதும் எனக்கூறி இல்வாழ்க்கையை ஆரம்பித்த சில மாதங்களிலேயே பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இயக்கப் பணி மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது. நான் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவள். மிகவும் பக்தியோடு எப்போதும் துதித்துக் (Prayer) கொண்டிருப்பேன். இப்போது நினைத்தாலும் எனக்கு அந்த நாட்கள் கேவலமாகவும் அருவருப்பாகவும் உள்ளன. நான் சார்ந்திருந்த ஆசிரியர் இயக்கம் கம்யூனிச சித்தாந்தமுடையது. நான் கம்யூனிச சிந்தனையில் இருந்தாலும் எனது வாழ்விணையர் என்னை திராவிடர் கழகத்தில் சேர வற்புறுத்தியதில்லை. படித்தவர்கள் பட்டறிவு பெற்று திருந்தட்டும் என்று விட்டு விடுவார்.

ஆனாலும் நான் பணியாற்றிய பள்ளியில் மாணவர்களுக்கிடையே அறிவியலையும் மூடநம்பிக்கை யையும் இணைத்தே பாடம் நடத்துவேன். இன்றும் கூட என்னைச் சந்திக்கும் மாணவர்கள் நீங்க கூறிய வடக்கே ஏன் தலை வைத்துப் படுக்க கூடாது என்ற கருத்தைமறக்க முடியாது என்று கூறுவார்கள். பழநியில் ஆர்.எப். ரோடு என்பதே தி.க பெல்ட்  என்று கூறுவார்கள். அன்றைய காலத்தில் கூட்டத்தில் சிறு வயது தம்பிகள் துண்டு விரித்து வசூல் செய்வார்கள். எனது வாழ்விணையர் 2010இல் மறைந்து விட்டார். மருத்துவமனையில் இருந்தபோதே தனக்கு கருப்பு சட்டை போட்டு - எவ்வித மூட சடங்குகளும் செய்யக் கூடாது என எனது மகள்களிடம் கூறியிருந்தார். எனது இளைய மகள் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். எனது வாழ்விணையரின்  உறவினர்கள் இந்து மத நம்பிக்கை உடையவர்கள். தேங்காய்ப் பழத்துடன் சடங்கு செய்ய வற்புறுத்தியபோது அதை செய்யக்கூடாது என எனது மகள் உறுதியுடன் நின்றாள். எவ்வித சடங்கு சம்பிரதாயங்களுமின்றி அவரது உடல் எரியூட்டப்பட்டது. அந்த நேரத்தில் எங்களை விட்டுச் சென்றவர்கள் இன்றுவரை எங்களோடு எந்தத் தொடர்பும் இல்லை. எனது மகள் இரத்த உறவுகள் தேவையில்லை கொள்கை  உறவுகளே போதும் என அன்று கூறியது போல் இன்றுவரை எங்களுக்கு கொள்கை உறவுகள் மட்டுமே சொந்தம். பழநியில் இயக்கப் பணி தற்போது ஆற்ற முடியவில்லை என்றாலும், ஆவடி பகுதியில் எங்களால் அன்று முடிந்த அளவிற்கு குடும்பமாக இணைந்து ஆசிரியர் தலைமையில் பணியாற்றுவோம் என்று உறுதிகூறி வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கிறேன்.

சட்டக்கல்லூரி மாணவி மதிவதனி

திராவிடர் கழக தலைவர் எங்கள் குடும்பத் தலைவர் ஆசிரியர் உட்பட அனைவருக்கும் வணக்கம்.

எனக்கு முன்னாடி மெர்சினு ஒருத்தங்க பேசுனப்போ சொன்ன 15 வயசு பொண்ணுதான் நான். பேசினவர் என் தாயார், என் 15 வயதில் மறைந்தவர் என் தந்தையார். என் தாயார் பேசியபோது சில செய்தியை குறிப்பிட மறந்துவிட்டார். என் தந்தை இறந்தபோது எந்தவிதமான சடங்கும் செய்யக்கூடாது என்று நான் தீவிரமாக, தெளிவாக சொன்னதால், தந்தை வழி உறவினர்கள் எல்லாம் அன்றைக்கு எங்களுடன் இருக்கும் உறவை முறித்துவிட்டு சென்றவர்கள் 8 ஆண்டுகள் ஆகியும் பேசுவது கூட இல்லை. அதைப்பற்றி ஒரு நாளும் நான் கவலை கொண்டது இல்லை. காரணம், என் தந்தை இறந்து இரண்டாவது மாதம், ஆசிரியர் தாத்தா என் தந்தையார் படத்திறப்பு நிகழ்வுக்கு பழநியில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்தார். அவர் பேசியபோது, சேதுவின் குடும்பத்தை நாங்கள் தத்து எடுத்துக் கொள்கிறோம். இந்த பிள்ளைகளின் கல்வி செலவோ, மற்ற எந்த தேவை இருந்தாலும் தலை மைக்குக் கடிதமோ, இல்லை, என்னை நேரில் சந்தித்தோ தகவல் சொல்லி, உதவி பெறலாம் என்று சொன்னார்.

அதன் பிறகு நாங்கள் எவ்வித உதவியும் கேட்கா விட்டாலும் கூட, தொண்டருக்குத் தொண்டராய் தனது தொண்டர்களுக்கு நான் இருக்கிறேன், இந்த இயக்கம் இருக்கிறது என்று கொடுத்த உணர்வுதான் இன்று வரை இரத்த உறவுகளை பற்றி எண்ணாமல், கொள்கை உறவுகள் மட்டும் போதும் என்று வாழ்ந்து வருகிறோம். இந்து மதத்தைத் தாண்டி பயங்கர ஜாதி வெறியால் ஊறிப்போன குடும்பம் என் தந்தையின் குடும்பம். ஒருவேளை என் தந்தை என்னை கொள்கைவாதியாக வளர்க்க வில்லை என்றால் இன்று என் நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. மற்ற குடும்பங்கள் போல் இல்லாமல் எங்கள் வீட்டில் அப்பா திராவிடர் கழகம், அம்மா கம்யூனிஸ்ட், நல்ல வாய்ப்பாக, என் அப்பா அவர் பக்கம் என்னைக் கொண்டு வந்து விட்டதால், இன்றைக்கு மதிவதனி இந்த நிலையில் இருக்கிறேன். பின், தந்தையின் மறைவுக்குப் பிறகு என் தாயும் திராவிடர் கழகப் பொறுப்பாளர் ஆகிவிட்டார். எனக்கு 3 வயதில் ஆசிரியர் தாத்தாவை சந்திக்க திருச்சி பெரியார் மாளிகைக்கு அப்பா அழைத்துச் சென்றார். அங்கு துரை.சக்கரவர்த்தி தாத்தாவும் உடன் இருந்தார். ஆசிரியர் தாத்தா என்னைப் பார்த்து உன் பெயர் என்னம்மா? என்று கேட்டார். நான் உடனே தாத்தா நீங்க தானே பெயர் வச்சீங்க. இப்ப நீங்களே என் பெயர் என்ன என்று கேட் குறீங்கனு கேட்டேன். சின்ன வயதல்லவா? சற்றுத்துடுக்கு தான். மற்ற தலைவராக இருந்தால், சற்று யோசித்திருப் பார்கள். என் தந்தை இறக்கும் வரை இந்த நிகழ்வை சொல்லிக்கொண்டே இருப்பார். ஆசிரியர் தாத்தா சற்றும் யோசிக்காமல் நான் நிறைய பேருக்கு ஒரே நாளில் பெயர் வைக்கிறேன், அதான் எனக்கு சரியாக ஞாபகம் இல்லன்னு சொல்லிட்டு, அவர் வைத்திருந்த சால்வையை எனக்குப் போர்த்தி விட்டார். அன்றிலிருந்து இதுவரைநான் அம்மா வழி தாத்தாவையும் பார்த்ததில்லை; அப்பா வழி தாத்தா வையும் பார்த்ததில்லை. ஆசிரியர் தாத்தா, கவிஞர் தாத்தா மட்டும்தான் நமக்கு தாத்தா என்று நினைத்தே வளர்ந்து விட்டேன். ஆசிரியருக்கு 86 வயது என்று யாராவது நினைவுபடுத்தினாலே என்னை அறியாமல் கண்ணில் நீர் வரும். எப்போது அவரைப் பார்த்தாலும் ஆசிரியருக்கு உடல்நலம் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து அழுவேன்.

கடந்த மாதம் அன்புராஜ் அண்ணாவை பார்த்தபோது, என்னை மீறி அவரிடம் சொன்னேன். அண்ணா எனக்கு அம்மா பிடிக்குமா? ஆசிரியர் பிடிக்குமா? என்று கேட்டால், ஆசிரியர் தாத்தா தான் பிடிக்கும்; அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று சொன்னேன். உடனே அவர் சொன்ன பதில்தான் - இந்த இயக்கம் நம்மை எப்படி வழிநடத்துகிறது என்பதற்கு ஆதாரம். அவர் சொன்னார் அம்மாவைத் தான் பிடிக்கும்னு நீ சொல்லணும், அம்மாவுக்குத் தான் நீ எல்லாம் செய்யனும்னு சொன்னாரு. மத்த கட்சியாக இருந்தால், பொண்ணு கொஞ்சம் நல்லா பேசுது, நம்ம கழகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பாங்க. ஆனா இங்க மட்டும் தான் முதல்ல நீங்க நல்லா படிங்க. அம்மாவை பார்த்துகுங்கனு சொல்ற ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டும்தான். சாமி நம்பிக்கை இல்லாததால, தேர்வில் 12 ஆம் வகுப்பு தேர்வில் நான் கோட்டைவிட்டுடுவேன்னு உறவினர்கள் எல்லாம் எதிர்பார்த்தாங்க. ஆனால் நான் +2வில் எடுத்த மதிப்பெண் 1125. இப்ப கல்லூரி வந்த பிறகும்கூட ஒரு நிமிடம் இரு, சாமி கும்பிட்டு வரேன்னு சொல்றவங்க எல்லாம் ஒரு பாடத்திலாவது நிலுவை (அரியர்) வச்சாங்க. நான் 11 பாடம் ஒரு சேர எழுதியதில் எல்லாத்துலயும் பாஸ் ஆகி விட்டேன். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா நாம நல்ல நிலைமையில் இருந்து, நம்ம கருத்தை சொன்னால் தான் ஏத்துப்பாங்க. அந்த நிலை மைக்கு நாம் வரணும். ஆசிரியருக்கு இயக்கத்தின் உயிர் நாடியாக தெரிவது பிரச்சாரமும், போராட்டமும் தான்.

அந்த வழியில் தொடர்ந்து மாநாடு, பொதுக்கூட்டம், வசூல்னு களைப்பு ஏற்படலாம். களைப்பு வரும்போது ஆசிரியரை நினைத்துப் பார்க்கணும். நேற்று டில்லி இன்னைக்கு சென்னையில் போராட்டம், கைது, நாளைக்கு மதுரை, இப்படி நாள்தோறும் இந்த சமூகத்திற்காக அலையும் தலைவரை நான்கு முறை அறுவை சிகிச்சைக்குப் பின்பும் அலையும் தலைவரை எங்கேயாவாது பார்க்க முடியுமா? கடந்த கும்பகோணம் மாணவர் கழக பவள விழா மாநாட் டிற்கு பேருந்து பிரச்சாரத்திற்கு சென்றோம். அப்போ பேருந்தில் ஒரு அம்மா, சின்ன பிள்ளையார் சிலையை வச்சு காசு கேட்டு வந்தாங்க. அவங்க என்னை பார்த்து என்னம்மா பிச்சை எடுக்க வந்துட்டியான்னு கேட்டாங்க நான் உடனே சிரிச்சிக்கிட்டே ஆமாம்மா நீங்க இல்லாதபிள்ளையாரை வைத்து பிச்சை கேக்குறீங்க, நானோ, நாட்டில்  உண்மையில் இருக்கும் நீட் பிரச்சினை, சமூகநீதி, பிரச்சினையை சொல்லி பிச்சை கேட்கிறேன்னு சொன்னேன். உடன் இருந்த மாணவர் கழக தோழர்கள் அஜிதன், யாழ்திலீபன் இருவரும் வாங்க போகலாம்னு சொன்னாங்க. இருங்க பார்ப்போம்னு சொல்லி  நின்னோம்.

பேருந்தில் இருந்த அனைவரும் நம் மாநாட்டுக்கு தான் அதிக பணம் கொடுத்தாங்க. எந்த வசூல் பணிக்குப் போனாலும் கவிஞர் தாத்தா அடிக்கடி கலந்துரையாடல்களில் சொல்லும் வார்த்தையை ஞாபகம் வச்சுக்கணும். இனமானம் காப்பவர்களுக்கு தன்மானம் பெரிதல்ல. அன்று மாலை ஆசிரியரைப் பார்த்து இந்த நிகழ்வை சொன்னோம். அய்யா சொன்னார், துண்டறிக்கையைக் கொடுங்க, பணம் கொடுத்தா நன்றி சொல்லுங்க, இல்லன்னு சொன்னா மிக்க நன்றினு சொல்லிட்டு வாங்க. நம்ம வேலை துண்டறிக்கையை கொண்டுபோய் சேர்ப்பதுதான் என்று சொன்னார். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பணியை கடமையை 51A(h) என்னும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் பரப்புரைக் கூட்டங்கள் நடத்த சொன்னார். அந்த அறிக்கையைப் பார்த்தவுடன் நானும் திராவிடர் மாணவர் கழக துணைச் செயலாளர் தோழர் திலீபனும் இணைந்து அய்ந்து (5) பள்ளிகளுக்குச் சென்று பரிணாம வளர்ச்சி குறித்துப் படம் போட்டு பிரச்சாரம் செய்தோம். அங்கு இருந்த 8 வயது சிறுமி எழுந்து "அக்கா இந்த கையில் உள்ள கயிறை எனக்கு கழட்டி விடுங்க, சாப்பிடவே இனி அருவருப்பாக இருக்கும்னு" சொன்னது. இதுதான் நம் வெற்றி! நாம் விதைப்பது விதைகள் - அது மரமாக கொள்கை மரமாக, ஒரு நாள் வளரும். ஆசிரியரைப் பார்த்து மாலை அணிவிப்பதோ, சால்வை அணிவிப்பதோ, பணம் தருவதோ எல்லாம் தாண்டி உண்மையான ஒரு கழகத்துக்காரரை உருவாக்கிக் காட்டினால்தான் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி. அதுதான் அவர் வாழ்நாளை நீட்டிக்கும்.எனவே தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அடுத்த தலைமுறைகளை உருவாக்கி ஆசிரியர் வழியில் அய்யாவின் பணி முடிப்போம். நன்றி!

- இந்த வயதில் இவ்வளவு முதிர்ச்சியான கருத்துகளா? என்று நினைக்கத் தோன்றுகிறதா? - தோன்றட்டுமே!

பசும்பொன் செந்தில்குமாரி

"இன்று (7.2.2019) மனுதர்ம எரிப்பு போராட்டத்தில் நான் கலந்து கொண்டு கைதாகி காவல்துறை வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது என்னுடைய திருமணம் நடந்த முறை என் நினைவிற்கு வந்தது. ஏனெனில் இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்குக் கருப்புக்கொடி காட்டிய வழக்கில் 9.11.1991 அன்று கைதாகி இருந்தபொழுது என்னுடைய திருமணம் இதேபோல்  சிறையில் நடைபெற்றது. மடிப்பாக்கத்தில் வீட்டில் இருந்த என்னை அவசர அவசரமாக அழைத்துச் சென்றனர். திருமண மண்டபத்தில் நமது தோழர்கள் கைது செய்து வைக்கப்பட்டு இருந்தனர். அங்குதான் எனக்கும், இசையின்பனுக்கும் திருமணம் நடந்தது. எந்த சடங்கு - சம்பிரதாயமும் இன்றி நேரம் காலம் பார்க்காமல் நடைபெற்றது ஆசிரியர்தான் நடத்தி வைத்தார். பத்திரிகையில் வெளிவந்த செய்தியைப் பார்த்துதான் என் பெற்றோர்களே தெரிந்து கொண்டார்கள். ஆனால் இப்படி திருமணம் நடந்ததால் எங்களுக்கும், எங்களது பிள்ளைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எங்களுக்கு ஒரு மகள் சீர்த்தி (சிவில் இன்ஜினியர்), ஒரு மகன் இனநலம் (ECE-II Year) உள்ளார்கள். இன்றுவரை ஒருவரையொருவர் மனம் ஒத்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துகிறோம். என் அத்தை திருமகள் இறையன் திருமண நிலையத் தின் இயக்குநராக இருந்தபொழுது அவருக்கு உதவி யாளராக பணியாற்றினேன். அவர்கள் 14.11.2015 அன்று மறைந்தார்கள். அதன்பிறகு நான் திருமண நிலைய இயக்குநர் பொறுப்பேற்றேன். அன்றிலிருந்து ஜாதி மறுப்பு, மத மறுப்பு, விதவை மறுமணம், மணமுறிவு என்று 498 இணையேற்புகளை நடத்தி வைத்து என்னுடைய பணியை தமிழர் தலைவர் வழிகாட்டுதலுடன் சிறப்புடன் செய்து வருகிறேன்." என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner