எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையில் பாரதியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 11.12.2018 அன்று நடைபெற்றது. அதில் பாரதியார் சிலை சென்னைத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்துப் பவனி வரச் செய்யப்பட்டது.

படம் ஒன்றைக் கவனியுங்கள்.

இதில் பல்லக்கினைத் தோளில் சுமப்பவர்கள் யார் யார்?

மாப்பிள்ளை போல பவனி வருபவர்கள் யார் யார் என்பதைக் கருத்தூன்றிக் கவனமாகப் பாருங்கள்.

எச்.ராஜா, இல.கணேசன், அதிமுகவைச் சேர்ந்த மயிலை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நட்ராஜ் ஆகிய பார்ப்பனர்கள் பல்லக்கினைத் தூக்கவில்லை என்பதும், நமது சூத்திரர்கள் (துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உட்பட) பாரதியாரின் பல்லக்கினைத் தூக்கிச் சுமந்து வருவதும் கவனிக்கத் தக்கதாகும்.

இவ்வாண்டு மட்டுமல்ல - கடந்தாண்டு பாரதியார் விழாவிலும் இதே கூத்துதான். (படம் இரண்டைக் கவனியுங்கள்).

பாரதியார் சிலை பல்லக்கில் பவனி வருவதும், அதற்கு முன் நடன மங்கையர் ஆடி வருவதும் - பக்கத்தில் பிஜேபியின் தேசிய செயலாளர் இல.கணேசன், ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. ஆகிய பார்ப்பனர்கள் நடந்து வருகிறார்கள்.

இப்பொழுது மூன்றாவது படத்திற்கு வாருங்கள்.

தூக்கி வரப்படும் பல்லக்குக் காணப்படுகிறது. இதில் 85 வயது நிறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் பல்லக்கினைச் சுமந்து வர, மேற்கண்ட பார்ப்பனர்கள் வழக்கம்போல ராஜ நடைதான் - ஒருவர் மிஸ்ஸிங்!

சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி என்று பாடிய பாரதியார் பிறந்த நாள் விழாவிலேயே அவர் பாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா இல்லையா?

இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் அப்படியில்லை - எவ்வளவோ திருந்தி விட்டனர் என்று கூறும் சூத்திர மேதா விலாச தமிழர்களின் கண்கள் திறக்குமா?

காஞ்சி மடத்துக்குச் சென்ற பார்ப்பனரான சுப்பிரமணிய சாமி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சரசுவதியின் பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருக்க, மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் (சூத்திரர்) தரையில் உட்கார்ந்திருந்ததையும், மூத்தவரான திருநாவுக்கரசர் பொடியன் திருஞானசம்பந்தனைப் பல்லக்கில் தூக்கி வந்ததையும் இந்த இடத்தில் நினைவு கூர்க!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner