எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்ப்பனர்களைப்பற்றி, அதன் ஆதிக்கம்பற்றி விடுதலை தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வருகிறது. இன்னும் சொல்லப் போனால் இந்த இயக்கத்திற்கே பார்ப்பனர் அல்லாதார் (Non-Brahmin Movement) இயக்கம் என்றே பெயர்!

நீண்ட காலமாக நடைபெற்றுவரும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் தொடர்ச்சி இது.

நாங்களாக இட்டுக் கட்டி வீண் வம்புக்குப் போவது எங்களின் வேலையும் அல்ல.

விடுதலை எழுதுவதில் குற்றம் கண்டால் தாராளமாக மறுப்புரை எழுதலாம் - விவாதிக்கலாம். வாய்மைப் போருக்கு என்றும் இளையார் என்று தந்தை பெரியார்பற்றி புரட்சிக்கவிஞர் எழுதியுள்ளாரே!

தினமலர் ஏட்டினைத் திரிநூல் ஏடு என்றும், பூணூல் ஏடு என்றும் நாம் எழுதினால், அதற்கு நோக்காடு வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், அதனைப் பச்சையாக ஏற்றுக்கொள்ளத் தயக்கம். பந்தை அடிக்க முடியவில்லை என்றால், காலை அடி என்கிற தப்பான விளையாட்டுக்கு (Foul Game) மட்டும் தயாராகவே இருக்கிறது.

தினமலருக்கு உண்மையிலேயே பூணூல் பாசம் இல்லையென்றால், தினத்தந்தி மாதிரிதானே நடந்துகொள்ள வேண்டும். ஏன் பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்கி நிற்கிறது.

ஒரு காவல்துறை அதிகாரி விசாரணைக்கு வருகிறார். யாரை விசாரிக்க வந்தாரோ அவரை அந்த வீட்டில் காண முடியவில்லை - அங்கு நின்று கொண்டிருந்த அவரின் மகனி டம், எங்கே உங்கள் அப்பா? என்று கேட்க, அந்த மகன் சொல்கிறான், எங்களப்பன் இந்தக் குதிருக்குள் இல்லை (பல குதிர்கள் அந்த வீட்டில் உண்டு) என்றானாம். சந்தேகப்பட்டுப் பார்த்தபோது, அந்த அப்பன் அதற்குள் ஒளிந்து கொண்டிருந்தானாம்.

அதுபோல, எத்தனையோ ஏடு களும், இதழ்களும் இருக்க, தின மலரும், துக்ளக்கும், தினமணியும் மட்டும் ஏன் துருத்திக் கொண்டு பூணூலை ஓர் உருவு உருவிக் கொண்டு முண்டா தட்ட வேண்டும்?

இதற்குப் பெயர்தான் எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்பது.

நேற்று தினமலரில் (2.11.2018) இது உங்கள் இடம்! என்ற பகுதியில் ஆர்.சேக்ஷாத்திரி என்பவர் எழுதிய கடிதம் ஒன்று வெளிவந்துள்ளது. சேக்ஷாத்திரி என்ற பெயரே அவர் யார் என்பதற்கான அடையாளம்தானே!

தினமலர் பத்திரிகை நடுநிலை நாளிதழ் - எல்லா ஜாதியினரும் அதைப் படிக்கின்றனர். ஆனால், பிராமணர் எதிர்ப்பு என்ற துருப்பிடித்த கத்தியை வைத்து, பார்ப்பான் பத்திரிகை என வீரமணி சொல்வதிலிருந்தே அவர் போலி பகுத்தறிவாளர் என்பது வெட்ட வெளிச்சம் என்று எழுதியதோடு நிறுத்தி இருந்தால்கூட அதன் அறி யாமை ஓர் எல்லைக்குள் நின்றிருக்கும்.

அந்தக் கடிதத்தின் இன்னொரு பகுதி என்ன சொல்லுகிறது?

நாட்டில் பிராமணர் என்ன செய்து விட்டனர்? சென்னை மாநகர பஸ்சில் பட்டாக் கத்தியைக் காட்டி பயணிய ரைப் பயமுறுத்தினரா... இல்லை வன்முறையைக் கிளப்பி காவல் துறையைக் கண்ணியம் இல்லாமல் பேசினரா இல்லையே...

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் அறிவிலார் என்பது வள்ளு வரின் குறள். அதுபோல், பிராமணர்கள், எல்லாரிடமும் நன்றாகப் பழகி, நல் உறவு வைத்து வாழ்கின்றனர்; அதை ஏன் கெடுக்கிறீர்கள்? என்று வினா தொடுக்கிறது தினமலர்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகுகின்றனரா பார்ப்பனர்கள்? இன்றைக்கும் மயிலாப் பூரில் பார்ப்பனர் பகுதிகளில் ஒரு பார்ப்பனரல்லாதாருக்குக் குடியிருக்க வீடு கிடைத்துவிடுமா?

அவ்வளவு தூரம் கூடப் போக வேண்டாம். இந்தக் கடிதம் வந்த அதே தேதியிலேயே தினமலர் 19 ஆம் பக்கத் திலே ஒரு விளம்பரம் வந்திருக்கிறதே!

சமையலுக்கு பிராமணப் பெண் தேவை என்று. இதுதான் பார்ப்பனர் கள் மாறி விட்டனர் என்பதற்கான விலாசமா?

இதே தினமலர் வார மலர் (13.6.2004) என்ன எழுதிற்று?

கேள்வி: தமிழ் மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் - ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும் - ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லா தவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் என்று எழுதிற்றா, இல்லையா?

தினமலருக்கு உண்மையிலேயே தமிழ்மீது பற்று இருந்தால், இதுபோன்ற பதில் வருமா? இதனைச் சுட்டிக்க ட்டினால், வீரமணி பொல்லாதவரா? விடுதலை ஏடு வேண்டாத ஒன்றா?

அதோடு நின்றதா தினமலர்? டவுட் தனபாலு என்ற பகுதியில் ஒரு செய்தி:

தமிழகப் பொதுப் பணித் துறை செயலாளர் ராமசுந் தரம்: தமிழகத்திற்குக் கரு நாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும், மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும்; கருநாடக அரசு குறித்த நேரத் தில் தண்ணீர் திறந்துவிடாததால், இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7ஆம் தேதிதான் திறந்துவிட் டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்னங்க. பெங்களூருல திரு வள்ளுவர் சிலை திறந்துவிட் டோமா இல்லையா? அதுக்கப் புறம் டெல்டாப் பகுதிகளில் முப் போகம் விளையாதா என்ன?

- தினமலர், 18.8.2009

திருவள்ளுவர் சிலை திறப்பை எதோடு ஒப்பிட்டு எழுதுகிறது பார்த்தீர் களா? இது நல்லெண்ணத்தின் அடிப் படையில் எழுதப்படும் எழுத்துக்களா?

கேலியும், கிண்டலும் கிளர்ந்தெழும் பார்ப்பனர் அல்லாதார் மீதான கொந் தளிக்கும் வெறுப்புணர்வு எப்படி எல் லாம் நெருப்புத் துண்டங்களாக எழுத் தில் வந்து விழுகிறது பார்த்தீர்களா?

இந்தப் பார்ப்பனர் புத்தியைத் தோலுரித்துக் காட்டினால் தினமலருக் குப் பற்றிக் கொண்டு எரிகிறது - இதுதானே உண்மை.

குடமுழுக்கையும், கும்பமேளாவை யும் சுட்டிக்காட்டி, தீபாவளியையும் எடுத்துக்காட்டி நாட்டில் மாதம் மும்மாரி பொழியப் போகிறது பாருங்கள்,  ஒவ் வொரு வீட்டிலும் பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டப் போகிறது பார்க்கத்தானே போகிறீர்கள் என்று எழுதிட எவ்வளவு நேரம் ஆகும்?

தினமலர் மட்டுமா? அதன் ஜோடிப் பொருத்தமான துக்ளக் என்ன எழுது கிறது?

கேள்வி: பெங்களூரில் திருவள் ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் - தமிழர் இடையே நல்லுணர்வு, நல்லிணக் கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள் ளாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவு தான். யாராவது கன்னட வெறி யர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக் காமல் இருந்தால் போதுமே!

(துக்ளக், 19.8.2009)

இதன் கவட்டு எண்ணம் என்ன? கன்னடியர்களால் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்படவேண்டும் என்பது தானே?

திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று கூறும் கூட்டமாச்சே!

திருவள்ளுவர் பகவன் என்ற பார்ப் பனருக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று எழுதியவர்தானே வ.வே.சு.அய்யர். (The Kural or the maxims of Thiruvalluvar).

திருவள்ளுவர் என்ற அறிஞர் பார்ப்பனரல்லாதவனுக்குப் பிறந்திருக்க முடியாது என்ற அந்த எண்ணத்தின் பின்னணியில் இருப்பது என்ன?

பார்ப்பன ஜாதிக் கர்வம்தானே!

இதனை எடுத்துச் சொன்னால், வீரமணி பார்ப்பன எதிர்ப்பு என்ற  துருப் பிடித்த கத்தியை எடுத்துக்கொண்டு உள்ளார் என்ற இழிதகைப் பேச்சா?

வன்முறையைத் தூண்டுவதுண்டா? பார்ப்பனர்கள் என்கிறதே தினமலர்? காந்தியாரைக் கொன்றவன் யார்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் வெள்ளி விழா மாநாடு என்று சொல்லி, சென்னை அண்ணா நகர் சிறீ கிருஷ்ணா தோட்ட த்தில் நடத்தப்பட்ட மாநாட்டில், எழுத் தாளர் சுஜாதா, இயக்குநர் பாலச்சந்தர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்க வில்லையா? அந்த மாநாட்டில் பார்ப்பனர் மேடையிலேயே பகிரங்கமாக அரிவாளைத் தூக்கிக் காட்டி வன் முறைக்குத் தயார் என்று காட்டுக் கூச்சல் போடவில்லையா?

பழனியிலே மாநாடு கூட்டி திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப் பாடை கட்டித் தூக்கிச் செல்லவில் லையா?

இன்னும் எவ்வளவோ உண்டு. எடுத்துரைத்தால் ஏடு தாங்காது. கடைசி பூணூல் உள்ளவரை - ஆதிக்கத்தின் நஞ்சு அழிக்கப்படும்வரை வீரமணிகள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். பெரியார் அலை ஓயவும் ஓயாது - எச்சரிக்கை!

குறிப்பு: வீரமணியும் ஜெகவீரபாண்டி யனும் பார்ப்பனர்களைப் பற்றி தேவை யில்லாமல் பேசுகிறார்களாம். ஜெகவீர பாண்டியன் இறந்து போனதுகூடத் தெரியாமல் தினமலருக்கு பித்தம் தலைக்கேறியது பரிதாபம்!

பார்ப்பனர்கள் வன்முறையை

தூண்டும் வகையில் பேசுவதில்லையா?

வன்முறையாக பார்ப்பனர்கள் பேவதுண்டா என்று எந்தத் தைரியத்தில் தினமலர் பேசுகிறது - பிஜேபி தேசிய செயலாளர் எச்.ராஜாவை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு, காவல்துறை கண்ணியமில்லாமல் பார்ப்பனர் பேசுவதுண்டா? என்று தினமலர் எழுதுகிறதே - உயர்நீதிமன்றத்தையே எவ்வளவுக் கீழ்த்தரமான வார்த்தையைக் கொண்டு அர்ச்சித்தார்! காவல்துறை அதிகாரிகளை எவ்வளவு கேவலமாகப் பேசினார். மக்கள் மறந்து விடுவர் என்ற மமதையோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner