எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"அந்த மூன்று நாட்களில்

கோயிலுக்குச் செல்வது

தீட்டாகவே இருக்கட்டும்

எந்த மூன்று நாட்களில்

பெண் தெய்வங்கள்

கோயிலுக்குள் இருக்காதெனக்

கொஞ்சம் சொல்லுங்களேன்"

என்று பொன்ராஜ் என்ற கவிஞர் சில ஆண்டுகளுக்கு முன் எழுதினார். அந்தக் கேள்விக்கு, பதில் இன்றுவரை எந்த ஆத்திக சிரோன்மணிகளின் வாய்ப் பொந்திலிருந்தும் வெளி வரவில்லை.

அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையில் உள்ள பெண்கள் போகக் கூடாது என்ற "ஆகமப் புலிகளின்" கூச்சலுக்கு எதிர்ப்பாக விமர்சன சர வெடிகள் எங்கு பார்த்தாலும் காதை செவிடாக்கிக் கொண்டிருக்கின்றன.

புதிய தலைமுறை விவாதத்திலும் இந்தத் தலைப்பு இடம் பெற்றது. நெறியாளரான கார்த்திகேயன், கவிஞர் பொன்ராஜ் எழுதியதை எடுத்துக் காட்டிக் கேட்டார்.

அப்பாடா கா(லி)விகள் கச்சையைக் கட்டிக் கொண்டு வார்த்தைச் சாக்கடைகளை அள்ளி வீச ஆரம்பித்து விட்டன. காரைக்குடி அம்பிப் பையனும் வழக்கம்போல வார்த்தை வஸ்தாத்து வேலையில் இறங்கினார்.

நெறியாளர் கார்த்திகேயனுக்கு நெருக்கடி சாத்துப்படிகள் ஒரு பக்கம். நிருவாகத்திலும் கூட!

வேறு வழியின்றி தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார் நெறியாளர் தோழர் கார்த்திகேயன்.

பெண்களுக்கு மாதவிடாய் இருப்பதால், அய்யப்பன் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்றால், பெண் தெய்வங்களே இருக்கின்றனவே. அந்தப் பெண் தெய்வங்களின் நிலைப்பாடு என்ன என்று புத்தியுள்ள எவரும் எழுப்பும் கேள்வியே! பகுத்தறிவு மனிதனுக்கு உண்டு என்று நம்புகிறவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக வெடித்தெழும் வினாதான்.

அதுவும் ஊடகத்தில் நெறியாளராகப் பணியாற்றக் கூடிய ஒருவர் கேட்டே தீர வேண்டிய ஒன்றே.

பெண் தெய்வங்களுக்கு வராத கோபக்கனல் இந்தப் பக்தவாள் கூட்டத்துக்கு ஏன் வருகிறது? இவர்கள் என்ன பெண் தெய்வங்களின் ஓசி வக்கீல்களா?

பெண் தெய்வம் இதில் அவமானப் பட்டிருந்தால், பெண் தெய்வத்துக்குச் சக்தியும் இருந்தால், நெறியாளரை நெரி கட்டச் செய்திருக்குமே!

அரசனை விஞ்சிய விசுவாசிகளாக சிலர் சிலம்பம் ஆடியதால், ஒரு நிறுவனத்தில் பணியாற்றித் தீர வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளான அருமைத் தோழர் கார்த்திகேயன், மிகுந்த பெருந்தன்மையின் உச்சத்திற்குச் சென்று தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார் (21.7.2018).

காயப்படுத்தும் எண்ணம் இல்லை. வருந்துகிறேன் என்று தலைப்பிட்டு அவர் பதிவு செய்திருப்பதாவது:

இரண்டு நாட்களுக்கு முன் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டிய (கவிஞர் பொன்ராஜ் எழுதிய அந்தக் கவிதைதான்) ஒரு சிலரின் மனதைக் காயப்படுத்தியிருக்கிறதை அறிகிறேன். ஒரு வார இதழில் வெளிவந்த அந்தக் கவிதையை குறிப்பிட்டதில் எந்த நோக்கமும் கிடையாது. யார் உணர்வுகளையும் காயப்படுத்தும் எண்ணமும் இல்லை எனினும், யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக முழு மனதுடன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தோழர் கார்த்திகேயன் பதிவு செய்துள்ளார்.

இது நெறியாளரின் உச்சக்கட்ட பெருந்தன்மையையும், இந்த நிலைக்கு அவரைத் தள்ளிவிட்ட அறிவு நாணயமற்ற மனிதர்களின் மட்ட ரகமான, சீர்கெட்ட மனப்பான்மையையும் தான் பச்சையாகப் படம் பிடித்துக் காட்டும்.

ஒரு தகவலை பக்தர்களும் சரி, வெகு மக்களும் சரி தெரிந்து கொள்வது அவர்களின் அறிவுத் துலக்கத்திற்குப் பயன்படும். கடவுளைக் கீழ்மைப்படுத்துபவர்கள் கறுப்புச் சட்டைக்காரர்கள் அல்லர் - கடவுள் மறுப்பாளர்களுமல்லர்.

பின் யார்? பக்தர்கள்தான், பாகவ தர்கள்தான், புராணங்களையும், இதிகாசங் களையும், சாஸ்திரங்களையும் சம்பிரதாயங் களையும், ஆகமங்களையும், ஆஸ்தீக சம்பந்தமாக எழுதிக் குவித்தவர்கள்தான்.

ஒழுக்கமான, ஆபாசமற்ற அறிவுக்குப் பூச்சூட்டும் வகையில் அவர்கள் எழுதிட வில்லையே! அவர்கள் எழுதிக் குவித்த வற்றை அறிவாளிகள், பகுத்தறிவுச் சிந்த னையாளர்கள், முற்போக்குத் திசையில் பயணிப்பவர்கள் எடுத்துக்காட்டும் பொழுது, அடேயப்பா, எரிதழல் ஆகி விட்டேனா பார் என்று மீசையை முறுக்கு கிறார்கள்.

பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கிறார்களே - சில பெண்கள் தலையில் வகிடு எடுக்கும் இடம் வரை நீட்டுவார்கள்.

அந்தக் குங்குமத்தின் கதை என்ன?

ஆன்மிக வாதியான திரு.செ.கணேச லிங்கன் எழுதுகிறார்.

மலட்டு நிலத்தை மாத விலக்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின், விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாத விலக்கு சினைப்படும் வளத்தை அறிமுகப்படுத்து வது என்பது உண்மையே. இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத் தில் மாத விலக்கு வேளையில் ஏற்படும் இரத்தக் கசிவை திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்னும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக, மங்கலச் சின்னமாக நாள்தோறும் பெண் களின் நெற்றியில் திகழ்வதைக் காண்கி றோம் (திரு செ.கணேசலிங்கன் எழுதிய பெண்ணடிமை தீர நூல்).

எழுதியவர் ஈரோட்டுக்காரரின் சீட ரல்ல. சாட்சாத் வைதீகப் புரியின் வாசகர் தான்.

மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் இரத்தக் கசிவுக்கு இப்படியொரு புண்ணிய சீலத்தை, வளத்தின் மேன்மையை இட்டுக் கட்டுபவர்கள் கடவுள் - மத - சாஸ்திரங் களை இழிவுபடுத்துபவர்களா - இதனை எடுத்துக்காட்டி சிந்தனைக்கு விருந்து வைப்பவர்கள் இழிவுபடுத்துபவர்களா?

இன்னும் ஒரு வேடிக்கை அல்லது வெட்கம் கெட்ட தன்மை உண்டு - கேரள மாநிலம் அலட்டி மாவட்டத்தில் செங் கண்ணூர் என்னும் ஊர். அந்த ஊரில் உள்ள பகவதி அம்மனுக்கு மாதம் தோறும் மாதவிடாய் வருகிறதாம்.

இதுகுறித்து மிர்ரர் என்னும் ஆங்கில இதழில் (ஏப்ரல் 1982) ஒரு விரிவான கட்டுரை வெளிவந்திருக்கிறது!

இதோ அந்த கட்டுரையின் முக்கிய பகுதி:

சென்ற 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கோவிலில் உதவியாளராகப் பணிபுரிந்துவரும் ஒரு வயது முதிர்ந்த, பாலகிருஷ்ண வர்மா என்பவரை இந்த குறிப்பிடத்தக்க பிரச்சினையைப்பற்றிக் கேட்டபோது புன்முறுவல் பூத்துக் கொண்டே கேட்டார். சிவன் ஒருசமயம் தன்னுடைய விருப்பம் இல்லாமலேயே சவமானார் என்று அதை நீங்கள் கேட்ட தில்லையா? என்று கேட்டுவிட்டு சௌந் தர்யலாகிரியினின்றும் ஒரு சுலோகத்தை எடுத்துக் கூறினார். அதன் நேரான பொருள் இதுதான்:-

பரமேஸ்வரன் சக்தியுடன் (தீ) கூடியிருக்கும் பொழுதுதான் இந்த அண்ட பிண்ட சராசரங்களை படைக்கமுடியும்! இல்லாவிடில் அவரால் எதுவுமே செய்ய இயலாது. உணர்வே இருக்காது சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், பார்வதி என்றும் வணங்கப்படும் பராசக்தியின், சக்தி இவ்வளவு மகத்தானது! அன்னபூரணி, ராஜ ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, லலிதாம்பிகா, துர்கா, பத்ர. காளி என்று இப்படிப்பட்ட இருபதுக்கும் - மேற்பட்ட பெயரினால் பக்தர்களால் வணங்கப்படும் பராசக்தியின் மகிமையே இதுதான். செங்கண்ணூர் பகவதி புவனேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இது சம்பந்தமாக, சிவனும் பார்வதியும் எப்படி செங்கண்ணூரில் வந்து தங்கினார் கள் என்பதற்கு மற்றும் ஒரு புராணக் கதையும் உண்டு! கைலாய மலையில் சிவன் - பார்வதி இருவருக்கும் திருமணம் நடை பெற்றது. திருமண நிகழ்ச்சியை காண்பதற் காக என்று முப்பத்து முக்கோடி தேவர்களும் அசுரர்களும் கைலாய மலைக்கு வந்து குழுமியதால் பாரம் தாங்காமல் வடக்குப் பகுதி பக்கமாக இந்த பூமி சாய்ந்தது. சிவனார் கவலையடைந்தார். உடனே அகஸ்திய முனியை அழைத்தார். இரு பக்கமும் சமமாகப் போவதற்காக அகஸ்திய முனியை தெற்கே போகச் சொன்னார். சிவன் சொன்ன வேண்டுகோளைக் காதில் வாங்கியவுடனேயே திருமண நிகழ்ச்சியைக் காண முடியாதே என்று அகஸ்தியன் மனம் ஏங்கினார். பரமேஸ்வரன் அகஸ்திய முனியின் உணர்வுகளைத் தெரிந்து கொண்டார். தான் தனது ஞானக்கண்ணால் யாவற்றையுமே அறிவேன் என்றும், திருமணம் முடிந்து தானும் பார்வதிதேவியும் தெற்கே வந்து அகஸ்தியனுக்கு தரிசனம் கொடுப்போம் என்ற உறுதி கூறி வழிய னுப்பி வைத்தார். அதன்படியே அகஸ்திய முனிவன் தெற்கு நோக்கி பயணம் புறப் பட்டார். சோனாத்தி (Sonatri) எனும் சயாத்ரி (Sahyatri) என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்தான். அகஸ்தியனுக்கு வாக்குக் கொடுத்தபடியே சிவனும் பார்வதியும் இருவருமாக ஒருங்கே சென்று அகஸ்தி யனுக்கு தரிசனம் கொடுத்தார்கள். தரிசனம் கொடுத்த அந்த தினம்தான் பார்வதி தேவிக்கு மாதவிடாய் (மாத விலக்கு) தினம். மாதவிடாய் முடிந்து பார்வதிதேவி குளித்து மூழ்கியவுடன் ஜோடிகள் இருவரும் 28 நாட்கள் அந்த இடத்திலேயே தங்கியிருந் தனர். இன்றும்கூட பஞ்சலோகத்தினால் ஆன தேவியின் சிலைக்கு மாதா மாதம் தவறாது மாதவிடாய் வருகிறதாம். மற்ற எந்தக் கோவிலிலும் இப்படிக் கேள்விப்பட் டிராத செய்தி. இந்தக் கோவிலில் மட்டும் தான் இப்படி மாதவிடாய் வருகிறதாம்! இந்தப்படி அந்தக் கோயிலின் தலைமை குருக்கள் கூறினார். மேலும் பழைய நாட்களில் ஒவ்வொரு மாதமும் இப்படி இந்த விக்ரகத்துக்கு தவறாது மாத விடாய் வரும். தற்பொழுது ஒரு ஆண்டில் மூன்று அல்லது நான்கு தடவைகளில்தான் மாத விடாய் இந்த அம்மனுக்கு வருகிறது! என்று அந்தக் கோவிலின் தலைமைக் குருக்களான மாதவன் நம்பூதிரி கூறினார் மேலும் கூறுகையில்,

விடியற்காலையில் கோயில் திறக்கப் பட்டதும் தலைமை குருக்களும், இஷு சாந்தி எனும் அவருடைய உதவியாளரும் முதல் நாள் சிலையில் அணிவிக்கப்பட்டி ருக்கும் ஆடைகளைக் (நிர்மாலயம்) களைவர். தலைமைக் குருக்கள் தான் கண்ணால் பாராமலேயே பகவதியம் மனுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் உள் பாவாடையை அருகில் நிற்கும் வாரியார் எனும் உதவியாளரிடம் கொடுப்பாராம். (குறைந்த பட்சம் இதற்கு ஒரு பெண் பூசாரியையாவது நியமிக்கக் கூடாதா?) வாரியார் அந்த உள் ஆடையை நன்கு பரிசீலிப்பார். அந்த உள் பாவாடையில் ஏதும் இரத்தக் கறை தென்பட்டால், அந்த ஆடையை, தாழமன் மதம் எனும் கோயில் தாந்திரீகன் இல்லத்துக்கு அனுப்பு வானாம். அங்கே வீட்டில் உள்ள இல்லக் கிழத்தி அந்த உள் பாவாடைகளை நன்கு பரிசோதித்துப் பார்ப்பாளாம். இரத்தக்கறை அதில் காணப்பட்டால், அந்த பகவதி சிலைக்கு மாதவிடாய் வந்துள்ளது என்று உறுதி செய்து அறிவிப்பாளாம்.

உடையாடி எனும் அந்த உள் பாவாடை உடனே பொதுமக்களுக்கு விற் பனைக்கு வரும். தேவசம் போர்டுஅதன் விலையை சாதாரணமாக பத்து ரூபாய் என் விலை நிர்ணயம் செய்திருப்பர். ஆனால் பக்தர்கள் அதை நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்குவர். இன்னும் சில பக்தர்கள் முன்கூட்டியே பணம் கட்டி புக்' செய்து வைத்திருப்பர், ஏன்? முன்னாள் திருவாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யர், முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி போன்றவர்கள் எல்லாம் இந்த உள் பாவாடைகளை வாங்கி இருக்கிறார்களாம். இவர்கள் எல்லாம் உலகம் போற்றும் அறிவாளி களாம் - சிரிக்காதீர்கள்

உலோகத்தினால் ஆன கடவுளச்சிக்கு மாதவிடாய் வருமா! என்பது பற்றிக்கூட சிந்திக்க மறுக்கும் மண்டூகங்களை என்ன என்று சொல்வதோ?

இப்படி எல்லாம் கோயில்களை எழுப்பி அதற்கு இவ்வளவுக் கழிசடைத் தனமாகத் தல புராணங்களை எழுதி வைத்திருப்பது குற்றமில்லையாம்.

இந்த ஆபாச ஊத்தைகளை நம்பி அறிவையும், ஒழுக்கத்தையும் இழக்கிறீர் களே என்று எடுத்துக் காட்டினால் மிகப் பெரிய குற்றமாம்.

எது சரி, சிந்தியுங்கள், மக்களே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner