எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழா முத்திரை!

தொகுப்பு: மின்சாரம்

திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டின் (1943-2018) பொது மாநாடு குடந்தை, கடலங்குடி தெருவில் பிரம் மாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில், சமூக நீதிப் போராளி ரோகித் வெமுலா  நினைவரங்கில் தொடங்கப்பட்டது.

மாநாட்டுக்கு திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார். மாநாட்டுத்  தலைவரை காஞ்சி அ.அர்ஜூன் முன் மொழிய சென்னை எஸ்.பிரவீன்குமார் வழி மொழிந்து பேசினார்.

திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் குடந்தை அ.அஜிதன் வரவேற் புரையாற்றினார்.

திராவிட மாணவர் கழகம் பிறந்த மண்ணிலே நடைபெறும் பவள விழா மாநாட்டில் வரவேற்புரையாற்றும் வாய்ப்புக்காகப் பெருமைப்படுகிறேன் - நன்றி கூறுகிறேன்.

நம்மை அரக்கர் குலம் என்றார்கள். எந்த பொருளில் சொல்லியிருப்பினும் ஆரியத்துக்கு எதிர்ச்சொல்தான் - இந்த அரக்கர் குலம் -அந்த அரக்கர் குலத் தலைவர் எங்கள் ஆசிரியர் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதற்காக பெருமைப்படுகிறோம்.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை தமிழர் தலைவர், தலைமையில் நிறைவேற்றிட சூளுரைப்போம் என்று கூறி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கழகக் கொடி ஏற்றம்

கழகக் கொடியை கொள்கை முழக்கங்களுக்கும் வாழ்த்துக்குமிடையே திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் இலக்கியா ஏற்றினார். அவர் தன்னுரையில்:-நம் இனத்தை பிடித்த ஜாதி இழிவிலிருந்து விடுபட்டு, பெண்ணடிமையை தகர்த்து: தந்தை பெரியார் காண விரும்பிய புரட்சி சமுதாயம் மலர்ந்திட கழகக் கொடியை ஊருக்கு ஊர் கொண்டு சென்று ஏற்றுவோம். பெரியார் கொள்கையைப் பரப்புவோம் என்று உணர்ச்சி கொப்பளிக்க பேசினார்.

உரைக்களம்

உரைக்களத்தில் மாநில மாணவர் கழகக் கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி (சட்டக்கல்லூரி மாணவி) தொடக்கவுரையாற்றினார்.

மகாராட்டிர மாநிலத்தில் பொதுக் கிணற்றில் குளித்த இரு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அடித்து உதைக்கப்பட்டனர் என்ற செய்தியைப் படித்துப் பதறினோம். தந்தை பெரியார் பிறந்த இந்தப் பூமி, திராவிடர் கழகம் வீர உலாவரும் இந்தத் தமிழ் மண் இதற்கு இடம் கொடுக்காது என்று கூறினார்.

குடியாத்தம் தே.அ.ஓவியா தமிழனே இதை கேளாய்!  எனும் தலைப்பில் வீராவேசமாகப் பேசினார்.

ஜாதியின் காரணமாக இந்நாட்டு முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவரே கோயிலுக்குள் செல்ல முடியவில்லை - இந்த வெட்கக்கேட்டில் இந்தியா ஒரு சுதந்திர நாடு என்று கூறிக் கொள்கிறோம்.

இராமாயணம் என்ற புராணக் கற்பனைப் பெயரைச் சொல்லி மக்களின் வளர்ச்சி திட்டமான சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் முடக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டினார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் க.இ. இளம்பரிதி கல்விக் கண்ணைப் பறிக்காதே எனும் தலைப்பில் கருத்துகளை வழங்கினார். இப்படி ஒரு தலைப்பில் நாம் பேசும் அளவுக்கு இந்நாட்டின் நிலை இருந்து வருகிறது. 10 சதவிகித சி.பி.எஸ்.இ. மாணவர்களின் நலனுக்காக 90 சதவிகித மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை இருந்து வருகிறது.

மருத்துவக்கல்லூரி நீட் தேர்வில் தமிழில் 49 கேள்விகள் குறைபாடு உடையவை - தவறானவை. இந்த நிலையில் தகுதி -திறமை பற்றிப் பேசுகிறார்கள். பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களை விட தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையானது அதிகமாக இருக்கிறது. இது எப்படி சாத்தியம்?

இந்தத் தவறுகளுக்கும், குழப்பத்துக்கும் காரணமானவர் களே  தகுதி திறமை பற்றிப் பேசுபவர்கள்  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் - ஒதுக்கப்பட வேண் டியது நீட் என்று சிறப்பாக கருத்துகளை எடுத்து வைத்தார்.

இந்து என்று சொல்லாதே என்ற தலைப்பில் கோவை இரா.சி.பிரபாகரன் உரையாற்றினார்.

இந்து என்றால் பாரசீக மொழியில் திருடன் என்று  சொல்லப்பட்டுள்ளது. நாம் இந்து என்று ஒப்புக் கொண்டால் நம்மை நாம் சூத்திரன் என்று ஒப்புக் கொண்டாக வேண்டும்.  தன்மானமுள்ள ஒருவனால் இதனை ஏற்க முடியுமா? சூத்திரன் என்றால் வேசி மகன் என்ற பொருள் உட்பட ஏழு பொருள் சொல்லப்படுகிறது - அதனால்தான் சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டடி என்றார் தந்தை பெரியார் என்று கூறினார்.

மதம் பிடியாதிருக்கட்டும்  எனும் தலைப்பில் சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை மதம் மிருகங்களுக்கும் பிடிக்கட்டும் - மனிதர்களுக்குப் பிடிக்க வேண்டாம் என்றார்.

பிஜேபி இங்கு ஒரு மதவாத ஆட்சியை கொண்டு வரத் துடிக்கிறது. பொய்யான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. யார் தோளிலாவது ஏறிக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது. எந்த மதவாதமும் தந்தை பெரியார் பிறந்த இந்தத் தமிழ் மண்ணில் எடுபடாது- எடுபடவும் விடமாட்டோம் என்றார். 1930களில் அந்தக் காலத்தில் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப் பட்டவர்கள் வரக்கூடாது என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய ஊர்தான் இந்த கும்பகோணம் என்று பொருத்தமாக நினைவூட்டினார். ஜாதி இருக்கிறதென்பானும் இருக்கின்றானே எனும் தலைப்பில் மதுரை மாணவி அய்.கங்காதேவி உரை யாற்றினார்.

மூடநம்பிக்கையை விட இந்த நாட்டில் மோடி நம்பிக்கை ஆபத்தானது என்று நறுக்கு தெறிப்பது போல கூறினார்.

மனுநீதி மாய்த்து மனித நேயம் காப்போம் என்றும் சூளுரைத்தார்.

பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநாட்டுத் தலைவரும், மாநில திராவிட மாணவர் கழக செயலாளருமாகிய  பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை உரை நிகழ்த்தினார்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, நாள்தோறும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டிய அளவுக்கு நாளும் மக்கள் விரோதப் பிரச்சினைகள் வெடித்து கொண்டுள்ளன. 2016ஆம் ஆண்டில் மத்திய பிஜேபி அரசு புதிய கல்விக் கொள்கை ஒன்றை அறிவித்தது - தொடர்ந்து கல்வியை காவி மயமாக்கிக் கொண்டு வருகிறது. மதச்சார் பற்ற ஒரு நாட்டில் மதக் கல்வியைத் திணித் துக் கொண்டு வருகிறது. சமூக  நீதியை வீழ்த்த நீட் தேர்வைத் திணிக்கிறது. இதனை எதிர்த்து திராவிடர் கழக மாணவர்கள் டில்லி வரை சென்று போராட்டம் நடத்தினர் - நீட் ஒழிக்கும் வரை நம் போராட்டமும் தொடரும் என்றார்.

திராவிட மாணவர் கழகம் பிறந்த டிசம்பர் முதல் தேதியை திராவிட மாணவர் கழக தினமாக அறிவிக்க வேண்டும் என்று கழகத் தலைவரிடம்  கோரிக்கை ஒன்றையும் வைத்தார். (கழகத் தலைவர் அனுமதியும் தந்து விட்டார்)

படத்திறப்பு

திராவிட மாணவர் கழகம் தோற்று விக்கப்படுவதற்கு காரணமாக இருந்த - மறைந்த சுய மரியாதைச் சுடரொளிகள் தவமணி ராசன், கவிஞர் கருணானந்தம், பூண்டி கோபால்சாமி, (செங்குட்டு வன்), கோ.இலட்சுமணன்ஆகியோர் உருவப் படங்களை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்து உரையாற்றினார். மாநாட்டு நிறைவுரையை கழகத் தலைவர் வழங்கினார். (முழுஉரை பின்னர் வரும்) இரவு 10 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு நிறைவுற்றது. மக்கள் கடலெனத் திரண்டு மாநாட்டு உரைகளைக் கேட்டது குறிப்பிடத் தக்கது.  மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நாகசெந்தமிழன் நன்றி கூறினார்.

மாநாட்டுத்துளிகள்

* 96ஆம் ஆண்டு அகவை காணும் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள், கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்தார்.கழகத் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

* பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியாரும்  தமிழ் சமுதாயத்தின் விடுதலையும் என்ற தலைப்பில் ஆய்வுப்பட்டம்  பெற்ற (பி.எச்டி) திருப்பனந்தாள் வட்டம் கீரங்குடியைச் சேர்ந்த வரும், குமரி மாவட்ட நன்ன டத்தை அலுவலருமான தோழர் வெங்கட்ராமன் தன் ஆய்வுப் படைப்பை கழகத் தலைவரிடம் வழங்கி, சால்வையும் அணி வித்தார்..

*7ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் ஓசூர் நன்மதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் கழகத் தலைவர்.

*சட்ட எரிப்புப் போராட்டத் தில் சிறைக்குச் சென்ற தாராசுரம் ஜி.என். சாமியின் வாழ்விணையர் வாலாம்பாள் அவர்கள் சிறைச் சாலையில் ஈன்று எடுத்ததன் காரணமாக  சிறைவாணி என்று பெயர் சூட்டப்பட்டவர் மாநாட் டுக்கு வந்து கழகத் தலைவரிடம்  மாநாட்டு நன்கொடை வழங்கிய போது பலத்த கரவொலி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner