எழுத்துரு அளவு Larger Font Smaller Font


- மின்சாரம் -

எந்தக்கட்சியாக இருந்தாலும், அங்கு நிலைக்காமல் திருவிழா வியாபாரிகள் போல டேரா தூக்கும் ஒரு கோமாளி நடிகர் - அவருக்கு பெயர் சேகர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை விமர்சிக்க முயற்சிக்கிறாராம். விமர்சிப்பது தவறு இல்லை, விவேகத்துடன் விமர்சிக்கும் புத்தி இருந்தால் அதனை தாராளமாக செய்ய முன் வரட்டும்!

நடிகர்களைப் பற்றிப் பேச கி.வீரமணிக்கு அருகதையில்லையாம். அடேயப்பா அதற்கான அருகதைகள் என்னென்ன என்று பட்டியலிட்டு இருந்தால், அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம். அவற்றையெல்லாம் இதுகளிடம் எதிர்பார்க்க முடியுமா? வீரமணியைப் பற்றிப் பேச உங்களுக்கு அருகதையில்லை என்று அதே பாணியில் கேட்க முடியாதா? என்னே சிறு பிள்ளைத் தனம்!

பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிக்கும் காலாடி போல கழிசடைத்தனமாக சேற்றை வாரி இறைக்கக் கூடாதல்லவா?

திராவிடர் கழகத் தலைவர் எந்த போராட்டத்திலாவது ஈடுபட்டதுண்டா? சிறை சென்றதுண்டா? அதுபற்றியெல்லாம் நான் படித்தது இல்லை என்று பல்லிளிக்கிறார்.

பத்திரிகைகளைப் படிக்காமல் வெறும் பஞ்சாங்கத்தையே படித்துக் கொண்டிருந்தால் நாட்டு நடப்பு எப்படி விளங்கும்?. ஓராண்டு மிசாவில் இருந்தாரே அதுகூட தெரியாதா? ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் வேலூர் சிறையில் இருந்ததெல்லாம் தெரியுமா? இரயில் நிலையங்களில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்திலும் சென்னை மத்திய சிறையில் இருந்தது புரியுமா? காவிரி நீருக்காக திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடத்திய மறியல் போராட்டத்திலும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட விவரம் அறிவாரா?

சமூக நீதிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடும்பாவிகள் எரிப்புப் போராட்டத்தில் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்ட சங்கதியெல்லாம் தெரியுமா சங்கராச்சாரியாரின் சீடருக்கு? (அந்த வேலூர் சிறையில் ஒரு கொலைக் குற்றத்தில் அவர்களின் லோகக்குரு கம்பி எண்ணினார் என்பது வேறு செய்தி)

மண்டல் குழுப் பரிந்துரைகளை அமலாக்கக் கோரி டில்லி நாடாளுமன்றம் முன் மறியல் - பிரதமர் இந்திராகாந்தி வீட்டு முன் மறியல் - கைது விவரங்கள் எல்லாம் இந்த கைபர் கணவாய்களுக்குத் தெரிய நியாயமில்லை. (49 முறை - சிறை!)

ஒரு தலைவரைப் பற்றி ஒரு விவரமும் தெரியாமல் இப்படி உளறுகிறோமே  - நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கூச்சமாவது - வெட்கமாவது உண்டா இந்த வேதியக் கும்பலுக்கு?

அறக்கட்டளை பெயரில் வியாபாரம் நடத்தும் கல்லூரிகளில் கொள்ளையாக நன்கொடை வாங்கிக் கொண்டு மாணவர்களை சேர்க்கிறார்கள் என்று அபாண்டமாக பழிதூற்றும் இந்த அய்யரை சவால் விட்டே கேட்கிறோம் - முடிந்தால் நிரூபியுங்கள் பார்க்கலாம்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு கனகாபிஷேகம் என்று சொல்லி தங்கக்கட்டிகளை சுங்கவரி இல்லாமல் சோதனை இல்லாமல் காஞ்சிபுரத்திற்கு கொண்டு வந்த தகவல் எல்லாம் சிரிப்பாய் சிரித்ததே.

கோயிலில் கொள்ளை அடிப்பவர்கள் பக்தர்களே! கொலை கொள்ளை செய்யத் துணிபவர்களில் அநேகம் பேர் பக்தர்களாக இருந்து ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்ளுவதற்கு வழிதேடுகிறார்கள்: நாத்திகத்திற்கு சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை  ஜாஸ்தியாகி விட்டது. பணமுடை அதிகரித்து விட்டது என்று பேட்டி கொடுத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் நடிகர் சேகரின் லோகக் குருவான ஜெயேந்திர சரஸ்வதிதான்.

(குமுதம் பேட்டி 12.9.1996)

இந்த யோக்கியர்கள்தான் நம்மைப் பார்த்து கொள்ளையடிப்பதாகக் கூச்சமின்றி கூறுகிறார்கள்.

வீரமணி பொதுமேடையில் பேசுவதற்கும், இவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பெரிய கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஒன்றே ஒன்றை எடுத்துக்காட்டாகச் சொல்லியிருந்தாலும் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம். அறிவு நாணயம் என்ன என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கூட்டமாயிற்றே. அதனிடம் எதிர்பார்க்கலாமா?

வீரமணியின் வீட்டில் உள்ளவர்கள் எங்கள் மடத்துக்கு வந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள் என்று ஜெயேந்திர சரஸ்வதி கூற - அதன் மீது வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது என்பதை  அக்கிரகார வாசிகளுக்கு ஞாபகப்படுத்துகிறோம். நீதிமன்றத்தில் கூண்டில் ஏறி உங்கள் லோகக் குரு சொல்லட்டும் அப்பொழுது இருக்கிறது சங்கதி!

அப்பொழுது அவர்களின் பித்தாலாட்டம் அம்பலமாகும். திராவிடர் கழகத்தை தனக்குப் பின் தன் மகனுக்கு எழுதி வைத்திருக்கிறாராம். கோமாளி நடிகர் அல்லவா? கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கப் பார்க்கிறார். திராவிடர் கழகம் நிலமோ கட்டடமோ அல்ல - யாருக்கோ எழுதி வைப்பதற்கு! திராவிடர் கழகத்திற்கு தொண்டு செய்ய யாரும் முன் வரலாம்.  உழைப்பதற்கும் செலவு செய்வதற்குமான பாசறையே தவிர, வருமானம் ஈட்டுவதற்கான மடம் அல்ல. இங்கு உழைக்க வரலாம், பிழைக்க அல்ல! இருப்பது பதவியும் அல்ல - பொறுப்புதான்  புரிந்து கொள்வீர்!

சினிமாவில் இருந்த அண்ணா, கலைஞரை ஆதரிக்கவில்லையா? என்று அறிவாளித்தனமாக கேள்வி கேட்டதாக நினைப்பு.

அவர்கள் சினிமாவை பகுத்தறிவுக் கொள்கையை பரப்புவதற்கான கருவியாக பயன்படுத்தினார்கள். “அம்பாள் என்றைக்கடா பேசினாள்? அது பேசாது கல்!” என்று பராசக்தியில் பேச வைத்தவர் கலைஞர்.

ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? ஆகும் நெறி என்றால் நாத்திகம், ஆகா நெறி என்றால் ஆத்திகம் என்ற கருத்தை பரப்பியவர் அறிஞர் அண்ணா.

சினிமாவைக் கருவியாகப் பயன்படுத்திய இவர்களுக்கு யாரும் ரசிகர் மன்றம் வைக்கவில்லை. ஆனால் சேகர் வகையறாக்கள் தூக்கிப் பிடிக்கும் சினிமா நடிகர்கள் சமாச்சாரமே வேறு.

கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், பிடித்த நடிகைகளுக்கு கோயில் கட்டுவது வரை அல்லவா வால் நீண்டு இருக்கிறது!

நடிகர் குடித்துத் தூக்கி எறிந்த சோடாவை அண்டாவில் கரைத்துக் குடிக்கும் கலாச்சாரம், சுவரொட்டிகளை கிழித்து விரித்து அதன் மேலே உருளும் கலாச்சாரம் சினிமாவுக்கே உள்ள ஆபாசம் அல்லவா!

யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்களிடம் மண்டியிட்டு அண்டிப் பிழைக்குமாம் திராவிடர் கழகம். அட மண்டூகங்களே, அரசியலுக்குள் செல்லாமல் தேர்தலில் நிற்காமல் அதே நேரத்தில் ஆட்சியில் உள்ளவர்களிடம் அடித்து வேலைவாங்குவது திராவிடர் கழகம்.

எந்த சட்டமன்றத்திற்கும் செல்லாத தந்தை பெரியாருக்கு இந்த அமைச்சரவையே காணிக்கை என்று அறிவித்தவர் முதலமைச்சர் அண்ணா என்ற வரலாறெல்லாம் இந்த உஞ்சி விருத்திகளுக்குத் தெரியுமா? தந்தை பெரியார் மொழியில் சொல்லுகிறோம் - இது சூத்திர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் அரசு என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் சட்டப்பேரவையிலேயே முழங்கவில்லையா?

ஆட்சிப் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆரை 13 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்தது திராவிடர் கழகம் என்ற பாலபாடம் கூடவா  தெரியாது இந்த குடுமிகளுக்கு?

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணையை கொண்டு வந்த போது அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதன் விளைவாக நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க.  39 இடங்களில் 37 இடங்களில் கடும் தோல்வியை தழுவியதெல்லாம் இந்த தகரடப்பாக்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது.

அந்தத் தோல்வியைத் தொடர்ந்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கினாலே போதுமானது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். சொன்னதன் அடிப்படையில் ஆசிரியர் வீரமணி அவர்கள் கொடுத்த விளக்கமும் (கேள்வி - பதிலாக அச்சிட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது) விவரமும் எம்.ஜி.ஆர். நிலைப்பாட்டை மாற்றிய சமூக நீதி வரலாறு சாதாரணமானதல்ல.
வருமான வரம்பு ஆணையை விலக்கிக் கொண்டதுடன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது - உச்சிக் குடுமியில் தீ வைத்ததுபோல் இருந்தால் அதற்கு நாம் என்ன செய்யட்டும்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் 50 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்ற நிலையில் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு  ஆபத்து வந்த போது, அதற்கான சட்ட ஆலோசனையை வழங்கியதோடு மட்டுமல்லாமல் சட்டமுன் வரைவையும் தயாரித்துக் கொடுத்தவர் வீரமணி என்ற உண்மை இந்த உதவாக்கரைகளுக்குத் தெரியுமா?

முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு பார்ப்பனப் பெண், பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஒரு பார்ப்பனர், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஒரு பார்ப்பனர், இந்த மூன்றுபார்ப்பனர்களையும் பயன்படுத்தி (வேலை வாங்கி) தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு நிரந்தரப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்க வைத்து பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டியவர்தானே சமூகநீதியின் உயிர்மூச்சு வீரமணி என்பதை இந்த விளங்கா விலாசங்கள் தெரிந்து கொள்ளட்டும்!

இராவணன் தம்பியைப் பயன்படுத்தி இராவணனை வீழ்த்திய காரணத்தால் விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டம் கொடுக்கப்படவில்லையா? சமூக நீதி காத்த வீராங்கனை என்பதையும் அந்தப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமே!.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப் பற்றி இவ்வளவு எழுதும் சேகர் அய்யர் யார்?

பிராமணர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தேவை  - அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று பெரியார் திடலுக்கு வந்து வீரமணியிடம் கூழைக்கும்பிடு போட்டு குனிந்து வளைந்து நின்றவர்தானே!

முதலில் கோபாலபுரம் சென்று கலைஞர் அவர்களை பார்க்க, அவரோ, பெரியார் திடலுக்குப் போய் வீரமணி அவர்களைப் பாருங்கள் என்று கைகாட்ட, ஓடோடி வந்ததெல்லாம் மறந்து போயிற்றா?

நீதிக்கட்சிக் காலத்தில் பார்ப்பனர்களுக்கு 14 சதவீதம் அளிக்கப்பட்டதே - அதனை கெடுத்துக் கொண்டவர்கள் நீங்கள்தானே என்று மரியாதை கலந்த வார்த்தைகளில் ஆசிரியர் சொன்ன அறிவுரை எல்லாம் இந்த அய்யர்களுக்கு எங்கே உறைக்கப்போகிறது? இந்த விவரம் எல்லாம் எனக்கு தெரியாதுங்கோ என்று அசடு வழியச் சொன்ன ஆசாமிதானே இவர்!

பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவேன் என்று கமலகாசன் சொன்னதுதான் வீரமணிக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் கமலகாசன் மீது வீரமணிக்கு கோபம் என்கிறார் இவர். (கமலகாசன் என்னதான் சமாதானம் சொன்னாலும் சமாளித்தாலும் நிலைமை என்ன என்பது இப்பொழுது கமலகாசன் சிந்திக்கட்டும்)

இந்த இடத்தில் பார்ப்பனர்களின் இரட்டை நாக்கை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஊழலாட்சி என்றும், அதை அகற்ற வேண்டும் என்றும் கமலகாசன் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக டுவிட்டரிலும், பேட்டிகளிலும் கூறியபோது, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை தலையாட்டி பொம்மையாகப் பாவித்து  ஆட்டுவித்த  - அடைகாத்த பிஜேபி முன்னணியினர் கமலகாசன் மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்தனர்.

அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, கமல் மீது விழுந்து பிராண்டினார்.  மாலை மலர் வெளியிட்ட செய்தி இதோ:

கமல்ஹாசன் தி.மு.க.வின் கைக்கூலியாக மாறி விட்டார்: எச்.ராஜா கடும் தாக்கு

சென்னை, ஆகஸ்ட் 13 நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் வரிந்து கட்டி கமலுக்கு எதிராக கணைகளை வீசினார்கள்.

கமலுக்கு ஆதரவாக தி.மு.க. குரல் கொடுத்தது. இதையடுத்து கமலுக்கு எதிரான நிலைப்பாட்டை பா.ஜனதா எடுத்தது. ஆன்மீக நாட்டம் கொண்ட ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பும் பா.ஜனதா கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கமலின் அரசியல் பிரவேசத்தை விரும்பவில்லை.

இதனால் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கமலை விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே கமல் முதுகெலும்பு இல்லாதவர் என்று எச்.ராஜா விமர்சித்தார். அதற்கு கமல் ஹாசன் ‘எலும்பு நிபுணர்’ என்ற அடைமொழியோடு எச்.ராஜாவை குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய எச்.ராஜா கமல்ஹாசன் பற்றி கூறியதாவது:-

விஸ்வரூபம் பட பிரச்சினையில் கமல்ஹாசன் தனக்கு ஒரு பிரச்சினை என்றதும் அழுதார், புரண்டார். நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொல்லும் அளவுக்கு கோழைத்தனமாக செயல்பட்டார்.

தற்போது முரசொலி பவள விழாவில் பங்கேற்றதன் மூலம் தான் ஒரு தி.மு.க.வின் கைக்கூலி, ஊதுகுழல் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

-மாலைமலர், 13.8.2017

இன்னொரு சமயத்தில் விசுவரூபம் படம் வெளியிடும் பொழுது எதிர்ப்பு வந்த பொழுது நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறிய முதுகெலும்பில்லாத கோழை கமலகாசன் என்றும், காட்டமாக தாக்கினார் அந்தக் காரைக்குடி ராஜா.

எச்.ராஜாவுக்கு கமலகாசனும் கிண்டலாக பதிலடி கொடுத்தார்.

நான் எப்பொழுதோ அரசியலுக்கு வந்து விட்டேன். எலும்பு வல்லுநர் எச்.ராஜா தம்மை அரசியலுக்கு இப்பொழுது வரவேண்டுமென்று அழைப்பது நகைப்பை வரவழைக்கிறது என்று கமலகாசன் பதிலடி கொடுத்தார்.

எலும்புத் துண்டுக்காக வாழ்வதை விட எலும்பு வல்லுநர் பரவாயில்லை என்று ராஜா கூறும் லாவணி வெகு ஜோராக நடந்தது.

இப்பொழுது இதிலும் இன்னொரு திருப்பம். பா.ஜ.க.வுடன் கை கோர்க்க தயார் என்றவுடன் நிலைமை என்ன தெரியுமா?

“கமலுக்கு எதிராகப் பேசக்கூடாது” - தமிழிசை, எச்.ராஜாவுக்கு அமித்ஷா எச்சரிக்கை என்பதுதான் அந்தச் செய்தி.

நடிகர் சேகர் கமலகாசனுக்காக வலைதளம் வாயிலாக வக்காலத்து வாங்குவது இதன் அடிப்படையில்தான்.

தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சினிமா நடிகர் கைகளில் போக வேண்டுமா? என்று அர்த்தமிக்க வினாவை திராவிடர் கழகத் தலைவர் எழுப்பினார். (விடுதலை, 29.9.2017) அது மிகப்பெரிய அளவிற்கு பலம் வாய்ந்த அலைகளை எழுப்பி விட்ட நிலையில், கமலகாசனை கட்டித்தழுவும் நிலைக்கு பார்ப்பனர்களும், பி.ஜே.பி.யினரும் தள்ளப்பட்டுள்ளதைத் தானே இது காட்டுகிறது.

ஆரியர் - திராவிடர் போராட்டம் ஏதோ ஒரு வகையில் நடைபெறுவதுதானே இந்நாட்டு அரசியல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner