எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- மின்சாரம்

‘‘தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சினிமா நடிகர்கள் கைகளில் போகவேண்டுமா?'' என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் வெளியிட்ட ‘விடுதலை' அறிக்கை (29.9.2017) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொலைப்பேசி வழியாக பல தரப்பினரும் பாராட்டிக் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

சரியான காலத்தில் சரியாக வெளியிடப்பட்ட அறிக்கை என்றும் கருத்துத் தெரிவித்து வருகின் றனர்!

பூனைக்கு மணிகட்டிய பெருமை ஆசிரியருக்குக் கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாத அரங்கும் 29.9.2017 இரவு இடம்பெற்றது. ஆசிரியர் அவர்களின் அறிக்கையைப் பொதுவாக வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரத்தில், அறிக்கையை ஆழமாகப் படித்துக் கருத்து தெரிவித்தனர் என்று சொல்லு வதற்கில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஷானாவாஸ் ஆசிரியர் அறிக்கையைச் சரியாகப் படித்து, சரியாகவே பதிலடி கொடுத்தது பாராட்டத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளாக சினிமாக்காரர்கள் ஆண்டார்கள் என்று ஆசிரியர் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாக திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவர் கூறியதிலிருந்தே ஆசிரியர் அறிக்கையை அவர் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

அரை கிணறு தாண்டுவது ஆபத்தல்லவா!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேசிய தோழர் கல்யாணசுந்தரம், ஆசிரியர் அறிக்கையைப் பொதுவாக வரவேற்றார். ஆனாலும், யதார்த்தத்தை உணர்ந்தவராக அவரின் கருத்து அமையவில்லை.

பி.ஜே.பி.யோடு தி.மு.க., அ.தி.மு.க. கூட்டு சேர்ந்தபோது அதனை எதிர்த்தவர் ஆசிரியர் - அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு ஆதரித்துவிட்டாரே - அதேபோல, கமலகாசன் பி.ஜே.பி.யோடு கூட்டு சேர்ந்து, அதன் பிறகு அதிலிருந்து விலகி விட்டால் ஆசிரியர் ஏற்றுக் கொள்வார் - இது என்ன போக்கு என்பது அவரின் கேள்வி.

பி.ஜே.பி.யோடு சேர்ந்தபோது எதிர்ப்பதும் சரியானதுதான் - பி.ஜே.பி.யை விட்டு விலகி, ஆட்சியில் நாம் எதிர்பார்க்கும் திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றும்பொழுது கண்மூடித்தனமாக எதிர்க்கவேண்டும் என்பது அவரின் நிலைப்பாடா என்று தெரியவில்லை.

அவர்கள் எப்படி ஆட்சி நடத்தினாலும், நாடு எக்கேடு கெட்டாலும் அதுபற்றிக் கவலைப்படாமல் கண்களை மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்பதுதான் தோழர் கல்யாண சுந்தரத்தின் கருத்தா?

மக்கள் வாக்களித்து ஓர் அரசை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால், அவர்களிடம் வேலை வாங்குவதும், வழிதவறிச் சென்றால், எதிர்த்து அணி திரட்டுவதும் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு. தந்தை பெரியார் அவர்களின் காலந்தொட்டு நடைமுறையில் இருந்து வருவதுதான். இதில் என்ன வேடிக்கை என்றால், தந்தை பெரியார் சரியாக நடந்ததாகவும், ஆசிரியர் மாறாக நடந்துகொள்வதாகவும் கூற முயற்சிப்பது ஒரு வகைப் பார்ப்பனத்தனமே! பரம எதிரி என்று ராஜாஜியால் கூறப்பட்ட தந்தை பெரியார், ராஜாஜி ரேஷனை எடுத்தபோது ஆதரித்ததும் உண்டே! - வரலாறு தெரியாமல் வக்கணைப் பேசக்கூடாது. கொள்கையின் அடிப்படையில் ஆதரவும், எதிர்ப் பும் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது திரா விடர் கழகத்தைப் பொறுத்தவரை என்பதுதான் வரலாற்றுக் கல்வெட்டு.

எந்த ஒரு அரசியல் கட்சியும் திராவிடர் கழகத்தின் கருத்தினை நூற்றுக்கு நூறு ஏற்காது என்பது தெரிந்த ஒன்றே! அதனால் எந்தக் கட்சி நல்லது செய்தாலும், கண்டித்தே தீரவேண்டும் என்று சொல்ல வருகிறாரா என்று தெரியவில்லை.

ஒரு கேள்வி தோழர் கல்யாணசுந்தரத்திற்கு உண்டு. மும்பை சென்று சிவசேனா வேட்பாளரை அவர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆதரித்தாரே - அதனை எந்தப் பொருளில் வைப்பது? அந்த ஒன்றுக்காக அவரை, அவரது கட்சியை ஒதுக்கித் தள்ளவேண்டும் என்று சொல்ல முன்வருவாரா?

அதுவும் சிவசேனா என்பது தமிழர்களை மும்பையை விட்டு விரட்டியடித்த  இனவெறி கட்சியாயிற்றே - ‘நாம் தமிழர்' என்று பெயர் சூட்டிக்கொண்டிருக்கும் கட்சி நமது தமிழர்களை விரட்டும் கட்சிக்கு ஆதரவுப் பிரச்சாரம் செய்ததை எப்படி எடுத்துக்கொள்வது! தோழர் கல்யாண சுந்தரத்துக்கே வெளிச்சம்!

சினிமாத் துறையைச் சேர்ந்த இயக்குநர் அழகப்பன் என்பவர் நெறியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கமலின் ரசிகராக வளவளவென்று பேசிக் கொண்டிருந்தார்.

கமலும் ரஜினியும் அரசியலுக்கு வரும் நிலையில், ஒருவரை ஒருவர் விமர்சிக்கமாட்டோம் என்று சொல்லுவது சரிதானா என்று நெறியாளர் வைத்த சரியான கேள்விக்கு (தமிழர் தலைவர் எழுப்பிய வினாதான் அது) விடை கூறப்படாதது ஏன்? கமலகாசன் கூறியது அறிவு நேர்மையின்மை என்று தமிழர் தலைவர் வைத்த குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்காதது ஏன்? அவரின் அறிவு நாணயமின்மையை மவுனமாக ஒப்புக்கொண்டு விட்டார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லுபவர் - அவர் சொல்லுவதுபோலவே - தன்னைச் சுற்றியுள்ள சினிமா உலக கருப்புப் பண ஊழலைப்பற்றி வாய்த் திறக்காதது ஏன்? விவாதத்தில் அந்த முக்கிய வினா இடம்பெறாதது ஏன்?

திராவிட இயக்க அரசியல் கட்சிகளில் சீர்திருத் தத்தை ஆசிரியர் முதலில் செய்யட்டும் என்கிறார் ஒருவர்.

திராவிட அரசியல் கட்சி ஆட்சியில் இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரி அவசியமான விமர்சனங்களை மாறுபட்ட கருத்துகளை திராவிடர் கழகத் தலைவர் அழுத்தமாக எடுத்துக் கூறவில்லையா? அறிக்கை வெளியிடவில்லையா? அதன் காரணமாக விவாதப் போர் மிகக் கடுமையாக நடந்ததில்லையா? தொலைக்காட்சிகளில் முகம் காட்டும் நமது அருமை நண்பர்கள் இவற்றை யெல்லாம் வசதியாக மறந்துவிட்டார்களா - அல்லது அஞ்ஞானவாசம் செய்தார்களா?

சமூகநீதிக் கொள்கையில் கமலகாசன் கொண்டி ருக்கும் கருத்துபற்றியும், ஆதார பூர்வமாக வைக்கப் பட்ட குற்றச்சாட்டுக்குப் பதில் இல்லையே ஏன்?

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று சொன்னவருக்காக வக்காலத்து வாங்கியதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களின் சாயமும் வெளுத்து விட்டதாகவே கருதப்படவேண்டும்.

தான் கொடுத்த பேட்டி ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதில் தவறு நடந்துவிட்டது என்று கலைஞானி சமாளிக்கப் பார்க்கிறார். அவர் பேட்டி கொடுத்த ஆங்கில மூலத்திலேயே பி.ஜே.பி. ஆதரவுப் போக்கு தெளிவாகத்தான் இருக்கிறது.

அது இதோ:

‘டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டுக்கு நடிகர் கமலகாசன் அளித்த பேட்டி:

அரசியலில் தீண்டாமை என்பதே இல்லை. நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோக்க தயாராக உள்ளேன். பாஜகவின் வலதுசாரி கொள்கைகள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. ஆனால் அதேசமயம், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவானால் பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ளத் தயங்க மாட்டேன்.

தேர்தலில் போட்டியிட்டு சட்ட ரீதியான பொறுப்பை ஏற்கும் சூழல் வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன். அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவு ஏதோ உணர்ச்சிவயப்பட்டு எடுக்கப்பட்டது அல்ல. நிதானமாக யோசித்தே எடுத்துள்ளேன். தேர்தலில் நான் எங்கே போட்டியிடுவது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளைத்தான் தேர்வு செய்வேன்.

இவ்வாறு கமலகாசன் கூறினார்.

ஒன்று மட்டும் புரிகிறது. தமிழர் தலைவரின் அறிக்கை உரிய நேரத்தில் மிகச் சரியாகவே வெளிவந்திருக்கிறது. விவாதப் பொருளாகவும் ஆகியிருக்கிறது -அதனை வரவேற்கிறோம்.

சர்ச்சைகள் தொடரட்டும் - அது எங்களுக்குச் சர்க்கரைப் பொங்கலே!

-----------

சமூகநீதிப் பார்வையில் கமலகாசன் பார்வை என்ன?

 

சமூகநீதியில் கமலகாசன் நிலைப்பாடு என்ன? அதனைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண் டியது அவசியம் ‘ஒரே ஒரு கிராமத்திலே' என்ற ஒரு திரைப்படத்தை ‘இந்து' ரெங்கராசய்யங்கார் தயா ரித்தார் - திரைக்கதை வசனம் வாலி (அய்யங்கார்).

அந்தப் படத்திலே பார்ப்பனப் பெண்ணாக நடிகை லட்சுமி நடித்திருந்தார். பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த காயத்திரி - தன் பெயரை கருப்பாயி என்று மாற்றிக்கொண்டு, தாழ்த்தப்பட்டவர் என்று கூறி பொய்ச் சான்றிதழ் பெற்று அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றுவார்.

பொய்ச் சான்று கொடுத்து அய்.ஏ.எஸ்., வாங்கியதை எதிர்த்து வழக்கு நீதிமன்றம் செல்லும். தானே நீதிமன்றத்தில் ஆஜராகித் தன் பக்கத்தில் உள்ள ‘நியாயத்தை' எடுத்து வைப்பார்.

‘‘ஜாதியை மாற்றிப் பொய்ச் சான்றிதழ் பெற்றது உண்மைதான். ஆனாலும், அது குற்றமில்லை'' என்று சாதிப்பார். அவ்வாறு, தான் செய்ததற்குக் காரணம் நடைமுறையில் இருக்கிற சட்டம்தான். தகுதியைப் பார்க்காமல், ஜாதியைப் பார்த்து கல்வியைக் கொடுக்கும் காரணத்தால்தான் அவ்வாறு செய்ய நேர்ந்தது என்று வாதாடுவார். தீர்ப்பு சொல்லப்படும் நேரத்தில், அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்திற்கு ஒரு தகவல் வரும்.

‘பொதுமக்கள் அந்தப் பெண் அதிகாரியின் செய்கையை ஆதரிப்பதாலும், பொதுமக்கள் அந்த அதிகாரிக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துவதாலும்' வழக்கு விலக்கிக் கொள்வதாகக் கூறப்படும்.

இந்தத் திரைப்படத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிபதி சத்தியதேவ் அவர்களால் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தடை நீக்கப்பட்டு திரையிட அனுமதிக்கப்பட்டது.

இந்தப் படத்துக்குத் தேசிய விருதும் அளிக் கப்பட்டது, என்பதுதான் விபரீதம்! இப்படிப்பட்ட படத்துக்காக கலைஞானி கமலகாசன் பாராட்டு விழா நடத்துகிறார். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதில் சிறப்பு விருந்தினர்.

சிறப்பு விருந்தினரான கலைஞர் அவர்கள் படத்தின் கருப்பொருளில் மாறுபடுவதாக எடுத்துக் கூறி, பாலம் கட்டும்வரை மாற்றுப் பாதை  இருப்பது போன்றதுதான் இட ஒதுக்கீடு என்று சரியாகவே சொன்னார்.

முதலமைச்சரின் கருத்தை மறுக்கும் வகை யில் இன்னும் எவ்வளவுக் காலத்துக்குத்தான் இந்த டைவர்சன் ரோடு என்று பேசியவர்தான் இந்தக் கமலகாசன்.

(பாலம் கட்டும்வரை மாற்றுப் பாதை - ஜாதி ஒழிக்கப்படும்வரை இட ஒதுக்கீடு என்பதுதான் அதன் நிலை!)

பார்ப்பனர்களில் பகுத்தறிவுவாதியைக் கூடப் பார்த்துவிடலாம்; ஆனால், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்களைக் காண முடியாது

இதில் ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஒரே ஒரு கிராமத்திலே என்ற திரைப்படத்தில் ஒரு பார்ப்பனப் பெண், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் என்று பொய்ச் சான்றிதழ் பெறுகிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு எதிராகப் பேசுகிறார்; அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் கேலி செய்யப்படுகிறார்.

இந்த சட்ட விரோதமான திரைப்படத்துக்குத் தேசிய விருது அளிக்கப்படுகிறது. அதற்குப் பாராட்டு விழா நடத்துகிறார் கமலகாசன் என்றால், இவர்களின் பகுத்தறிவையும் தாண்டிய உணர்வுக்கு என்ன பெயர்?

இவர் ஆட்சிக்கு வந்தால்(?) சமூகநீதிக்கு எதிராகத்தானே இருப்பார்? ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டுச் சிந்தியுங்கள் - உண்மைப் புரியும்!

--------------

கேட்கத் தவறிய கேள்விகள் - தெளிவில்லாத பதில்கள்

கலைஞானி கமலகாசனிடம் பல தொலைக்காட்சிகள் கேட்கத் தவறிய கேள்விகளும், தெளிவில்லாத பதில்களும் நிரம்ப உண்டு.

மத்திய அரசுபற்றி குறை சொல்லவோ, விமர்சனம் செய் யவோ தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு - முதலில் நம் வீட்டில் உள்ள குப்பையைக் கூட்டவேண்டும் என்கிறார் கமலகாசன்.

மத்திய ஆட்சியால் மாநிலங்கள் பாதிக்கப்படுவதில்லையா?

(1) கல்வி (நீட், தேசிய புதிய கல்வி, நவோதயா) பொதுப் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசின் நடவடிக்கைகள், மாநிலங்களைப் பாதிப்பதில்லையா?

நீட் பிரச்சினையில் மத்திய பி.ஜே.பி. அரசு நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கவில்லையா?

(2) மதவாத அரசியல் - ஊழலைவிட ஆபத்தானதல்லவா?

(3) மத்திய ஆட்சியின் கொள்கையால், செயல்களால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே - இது வெறும் மாநிலப் பிரச்சினைக்கு அப்பாற்பட்டதா? ஜி.எஸ்.டி. என்பதெல்லாம் இந்தியா முழுமைக்கும்தானே - (இதைப்பற்றி யெல்லாம் கருத்து சொல்லாமல் மிகவும் விழிப்பாக நழுவுவது ஏன்?)

(4) பகுத்தறிவு கொள்கைவாதி என்கிறபோது, பகுத்தறிவுக்கு விரோதமான பேச்சுகள் - நிகழ்வுகள் குறித்து கருத்துக் கூறாதது ஏன்?

யானை தலையை வெட்டி, விநாயகன் தலையில் பொருத்திய உறுப்பு மாற்று, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த முதல் சர்ஜன் சிவன் என்று பிரதமராக இருக்கக் கூடிய மோடி, விஞ்ஞானிகள் மாநாட்டில் பேசினாரே - அப்பொழுது கூட டுவிட்டரில் எதையும் பதியாதது ஏன்?

(5) சமூகநீதிக் கொள்கையில் கமலின் கருத்து என்ன? ஏன் கேட்கப்படவில்லை? (இதற்கு எதிரானவர் கமல் என்பது தெரிந் ததே. தமிழர் தலைவர் தமது அறிக்கையில் இதனைத் தெளிவாக ஆதாரத்தோடு எடுத்துக்காட்டியுள்ளாரே!)

(6) ஊழலை ஒழிப்பதுதான், தன் நோக்கம் என்றால், செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இல்லாத ஊழலா? ஒரே ஒரு வார்த்தையை விமர்சனமாக வைத்ததுண்டா கலைஞானி?

ஜெயலலிதா இருந்திருந்தால் புதிய கட்சியைத் தொடங்குவேன் என்ற அறிவிப்பு கமலின் வாயால் வெளிவந்திருக்குமா?

(7) ஊடகத்தார் வைத்த வினாக்களுக்கு திட்டவட்டமாக மயக்கமில்லாத வார்த்தைகளால் கமல் பதில் சொல்லாதது ஏன்?

தீமைகளை எதிர்க்க, களையெடுக்க நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலம் என்று பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் கூறலாமே!

மவுரியர் ஆட்சி பொற்காலம் என்று கூறப்படுவது ஏன்? குப்தர் ஆட்சி பொற்காலம் என்று கூறப்படுவது ஏன்? என்பது போன்ற பொற்கால ஆட்சியைப்பற்றிக் கேள்வி கேட்டால்,

மரங்கள் வைத்தார்,

நிழல்தரும் மரங்கள் வைத்தார்

மருத்துவமனைகளைக் கட்டினார்

மிருகங்களுக்கும் மருத்துவமனைகள் கட்டினார் என்று எல்லா ஆட்சிகளுக்கும் மாணவர்கள் எழுதி ‘பத்துக்குப் பத்து' மதிப்பெண் பெறுவதுபோல, எதையும் வரையறுத்துச் சொல்லாதது ஏன்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. குழப்பமான வார்த்தைப் பிரயோகங்கள் - யார் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் - என்ற யுக்தியைக் கடைப்பிடிக்கிறாரோ!

(6) விசுவரூபம் படப் பிரச்சினையில் ஒரு நெருக்கடி வந்த போது, அதனை எதிர் கொண்டு நிற்க முடியாமல், மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்பட்டால், நிச்சயம் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் (31.1.2013) என்று சொன்னவர் - ஒரு நெருக்கடிக்கே இந்த அளவுக்கு உறுதி குலைந்த ஒருவரால் ஒரு நாட்டு அரசியலை - ஆட்சியை  (ஆயிரம் ஆயிரம் சிக்கல்களும், எதிர்ப்புகளும், நெருக்கடிகளும் வருமே!) எப்படி சமாளிப்பார் - எதிர்கொள்வார் என்ற முத்திரைக் கேள்வியோடு இது முடிகிறது!

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner