எழுத்துரு அளவு Larger Font Smaller Font‘பெரியார் நாடு’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பாராட்டப்பட்ட உரத்தநாடு - அதன் சாதனைத் திசையில் மேலும் ஒரு மைல்கல்லைப் பதிக்க இருக்கிறது.

வரும் 19ஆம் தேதி சனி மாலையில்தான் அந்த மகத்தான நிகழ்ச்சிக்கு மாலை சூட்டப்படுகிறது.

ஆம். ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களை 55ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியரிடம் அளித்து மகிழ இருக்கிறது.

அவர்கள் மட்டுமா? அந்த நிகழ்ச்சிக்கு நேரில் வருபவர்கள் மட்டுமா. இனவுணர்வுள்ள சுயமரியாதையுள்ள தமிழர்கள், எங்கு வாழ்ந்தாலும் இந்தச் செய்தியை கேட்டு இறும்பூதெய்துவார்கள் என்பதிலும் அய்யமுண்டா?

நமது இனத்துக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவாளர் களும் பலபட மகிழ்வார்கள் என்பதில் அய்யமில்லை.

27.11.1999 தொடங்கி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தமிழர்களின் ‘விடுதலைக்காக’ தனது ஒவ்வொரு மூச்சையும் விட்டுக் கொண்டிருக்கும் ‘விடுதலை’க்கான சந்தாக்களை அளித்துக் கொண்டே இருக்கின்றனர். முதன்முறையாக 525 சந்தாக்களை அளித்தனர். 17ஆண்டுகளாக இந்த அரும்பெரும் சாதனைகளை சலிக்காமல் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றனர். தவணை முறை கணக்குச் சொன்னால் இப்பொழுது அவர்கள் அளிக்கப் போகும் தவணையின் எண்ணிக்கை 32 ஆகும்.

இந்தச் சாதனைகளை மற்றக் கழக மாவட்டங்கள் நிகழ்த்தியது இல்லை என்பதை விட எந்த அரசியல், சமூகக் கட்சிகளும் கூட நிகழ்த்தியதில்லை.

‘விடுதலை’யால் நீக்கப்படாத கெடுதலைகள் இல்லை - மட்டம் தட்டப்படாத தறுதலைகளும் கிடையாது.

இனமானமும், பகுத்தறிவும் ‘விடுதலையின் இரு விழிகள், மானமும், அறிவும் மனிதனுக்கழகு என்று - குறளைவிட குறுகிய சொற்களால் உலகளந்த உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் உயரிய எண்ணங்களை உலகெங்கும் எடுத்துச் சொல்லும் தூதுவன் அன்றோ ‘விடுதலை’.

தந்தை பெரியாரின் போர்வாள் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் மொழியில் கூறவேண்டும் என்றால் - தமிழரின் இல்லம் என்பதற்கு அடையாளம் தானே ‘விடுதலை’.

‘விடுதலை’ வாழ்ந்தால், வளர்ந்தால் தமிழர்கள் வாழ்வார்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிர்வார்கள். பெண்கள்  பீடு நடை போடுவார்கள். சமூக நீதிக்கு உத்தரவாதம் கிடைக்கும். ஜாதிக்குச் சாவு மணி அடிக்கப்படும். மூட நம்பிக்கைக்கு முடிவுக் கொள்ளி வைக்கப்படும். பகுத்தறிவுக் கொடி பட்டொளி வீசும்.

பிற்போக்குத்தனங்கள் குதிகால் பிடறியில் அடிபட ஓட்டம் பிடிக்கும்! முற்போக்குத் தத்துவங்கள் முதல் வரிசையில் கொடி பிடித்து அணி வகுக்கும்.

சமதர்மமும் - சமத்துவமும் கைகோர்த்து சரி நிகர் சமாதானத்தை சரித்திரத்தில் நிலை நாட்டும்.

கழகத் தோழர்களே! தஞ்சாவூர் மாவட்டத் தோழர்களால், உரத்தநாடு வட்டார தோழர்களால் முடியக் கூடியது உங்களால் முடியாதா, ஏன் முடியாது? கண்டிப்பாக முடியும். தேவை முயற்சியும், தன்னம்பிக்கையும், சரியான திட்டமிடலுமே!

‘விடுதலை’ யால் பலன் பெறாத பயன் துய்க்காத ஒரே ஒரு தமிழன் உண்டா? தமிழ்நாட்டில் நன்றி உணர்வு வற்றிடவில்லையே! அதனை பயன்படுத்திக் கொள்வோம். பாடுபடுவோம்!

பகுத்தறிவுப் பெரு நதியை நாடெங்கும் பாய்ச்சுவோம்! உரத்தநாடு வழிகாட்டி விட்டது - ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - ஓங்கிப்  பணி முடிக்க எழுவீர்! எழுவீர்!!  எதையும் கேட்டிராத நம் தலைவர் ‘விடுதலை’ சந்தாவைத் தானே வாய்விட்டுக் கேட்கிறார். உயிரையும் தருவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் விடுதலை சந்தாக்களைத் தருவோம் - வாரி வாரி வழங்குவோம்.

வாழ்க பெரியார்! வெல்க விடுதலை!
- மின்சாரம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner