எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தோழர்களே, உங்களுக்காகத்தான் பேசுகின்றோம். உங்களுக்காகப் பேசுகின்ற நாங்கள், எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று உங்களிடம் கேட்காதவர்கள்!

ஆனால், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதிலே கவனம் எங்களுக்கு எப்போதும் நிரம்ப உண்டு.

காங்கிரசை எதிர்த்த நாங்கள் காமராசரை ஆதரித்தோம். அவர் ஆட்சியில் இருக்கவேண்டும் என்று விரும்பினோம். எதற்காக? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று  ஆக்கப்பட்ட சூத்திர மக்களின் பஞ்சம மக்களின் கல்விக் கண்களைத் திறந்ததற்காக கல்விக் கூடங்களைப் பட்டிதொட்டிகளில் எல்லாம் திறந்ததற்காக, தகுதி திறமை பேசி சமூகநீதியைக் கொச்சைப்படுத்தியவர்களை நோக்கி சரமாரியான சவுக்கடிகளைக் கொடுத்ததற்காக!

‘பறையனை'ப் படிக்க வைத்தோம் டாக்டர் ஆனான்; அவன் ஊசி போட்டதால் எந்த நோயாளி செத்தான் என்று சொல்!

‘பறையனை'ப் படிக்க வைத்தோம், என்ஜினியர் ஆனான்; அவன் கட்டிய எந்தப் பாலம் இடிந்தது என்று சொல்!

உன் தகுதியும் தெரியும். உனக்குச் சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் எனக்குத் தெரியும். என்னை ஒழிக்க நினைத்தால் உன் அஸ்திவாரத்தையே கலைத்திடுவேன் என்று கர்ச்சித்தாரே - அந்தக் காமராசரைத்தான் ஆதரித்தோம் - தந்தை பெரியார் ஆதரித்தார்.

பசுவதை பெயரால் பச்சைத் தமிழர் காமராசரைப் புதுடில்லியில் ஒரு பட்டப் பகலில் தீ வைத்துக் கொளுத்திய அதே நிர்வாண சாமியார்க் கூட்டம், ஆர்.எஸ்.எஸ். கூட்டம், ஜன சங்கக் கூட்டம்தான் (இன்றைய பாரதீய ஜனதா) இன்று பசு பாதுகாப்பு என்ற பெயரால் மனிதர்களைப் படுகொலை செய்கிறது.

நம் வீட்டில் என்ன குழம்பு வைப்பது என்பதை அடுத்த வீட்டுக்காரனா முடிவு செய்வது?

மத்திய பி.ஜே.பி. அரசு ‘நீட்' தேர்வைக் கொண்டு வந்துள்ளது. யாருக்காக இந்தத் தேர்வு - எதற்காக இந்தத் தேர்வு? எங்கள் மாநிலத்தில் நுழைவுத் தேர்வை ஒழித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டனவே! மாநில அரசின் ஆலோசனையைக் கேட்டதுண்டா? பொதுப் பட்டியல் என்றால் என்ன பொருள்? ‘கன்கரண்ட்' என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

அடுத்தவர் கருத்தையும் கேட்கவேண்டும் என்ற பொருளை உதாசீனப்படுத்தியது ஏன்?

மத்திய சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு என்ன சொன்னது? ‘நீட்' தேர்வு வேண்டாம் என்று எந்த மாநிலமாவது கூறினால், விலக்கு அளிக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறதே - அதனை மதிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கூட இதனைப் பொருட்படுத்தாதது ஏன்?
‘நீட்' தேர்வு நடத்தியதிலாவது நேர்மை உண்டா? தகுதியைத் தேர்வு செய்ய வேண்டுமானால், அதற்கான அளவுகோல் ஒரே மாதிரியாக இருக்கவேண்டாமா?

பீகாருக்கு ஒரு கேள்வித்தாள் - தமிழ்நாட்டுக்கு வேறொரு கேள்வித்தாளா? குஜராத்துக்கு ஒரு மாதிரியான வினாத்தாள், கேரளாவிற்கு வேறு மாதிரியான கேள்வித்தாளா? இதுதான் சமப்போட்டியா?

வடமாநிலங்களில் எளிதான கேள்விகள், தென்மாநிலங்களில் கடினமான கேள்விகள் என்பது மோசடியல்லவா?

5 சதவிகித மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படிக்கிறார்கள்  நீட் தேர்வு இந்த சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்றால், இது யாருடைய நலனுக்காக - பயனுக்காக இந்த ‘நீட்' தேர்வு நடத்தப்படுகிறது?

5 சதவிகித மாணவர்களின் நலனுக்காக 95 சதவிகித மாணவர்கள் பாதிக்கப்பட வேண்டுமா? இதை உச்சநீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது ஏன்? ஏன்?

இன்னும் ஒரு பெரு மோசடி! அதிக மதிப்பெண் பெற்ற - தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போட்டிப் போடக்கூடிய இடம் திறந்த போட்டியாகும். ‘Open Competition' ஆனால், ‘நீட்' தேர்வில் மிகப்பெரிய மோசடி என்ன தெரியுமா? OC - Open Competition என்பதே ளிசி என்றால் ளிtலீமீக்ஷீ சிஷீனீனீuஸீவீtஹ் என்று வியாக்கியானம் செய்து தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடு, மலைவாழ் மக்களுக்கு 7.5 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு ஆகக் கூடுதல் 49.5 சதவிகிதம் போக, எஞ்சிய 50.5 சதவிகிதத்துக்கு உரிய மொத்த இடங்கள் அத்தனையும் ளிtலீமீக்ஷீ சிஷீனீனீuஸீவீtஹ் என்று சொல்லப்படுபவர்களுக்கும், முன்னேறிய ஜாதியினருக்கு இட ஒதுக்கீடாம்! சட்டப்படி இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு 50.5 சதவிகித இட ஒதுக்கீடாம்.

எவ்வளவுப் பெரிய சதியும் - மோசடியும் - சூழ்ச்சியும் புனையப்பட்டுள்ளது பார்த்தீர்களா? ‘நீட்' தேர்வின் பின்னணியில் பதுங்கியிருக்கும் பார்ப்பன சூழ்ச்சியை முன்கூட்டியே எச்சரித்தோமே!

பெற்றோர்களை அழைத்தோமே! எந்த அளவுக்குப் பெற்றோர்கள் இதில் அக்கறை காட்டினார்கள்? இன்று குத்துகிறதே - குடைகிறதே என்றால், யார் பொறுப்பு?

இப்பொழுதுகூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
எதற்காக? ‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படவேண்டும் என்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதற்காகவே!

திராவிடர் கழகம் ஒருங்கிணைக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க., எஸ்.டி.பி.அய்., திராவிட இயக்கத் தமிழர் பேரவை, கட்டடத் தொழிலாளர் சங்கம், கல்வியாளர்கள் எல்லாம் அணிவகுத்து ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளனர்; அரிமா குரல் கொடுக்க உள்ளனர். சமூகநீதிக் களத்தில் நமது குரல் ஓயப் போவதில்லை.

சமூகநீதிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் சமர்க்களம் கண்டது திராவிடர் கழகம் - தமிழ்நாட்டின் 69 சதவிகிதத்துக்கு ஆபத்து வந்தபோது திராவிடர் கழகம் என்ன செய்தது?

இன்றுபோல் அன்றும் அனைவரையும் அரவணைத்துச் செயல்படவில்லையா? சட்ட ரீதியாக 69 சதவிகிதத்தைப் பாதுகாக்க அதற்கான சட்ட முன்வடிவைத் தயாரித்துக் கொடுத்தது திராவிடர் கழகம்தானே!

அது இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளதே!
முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா ஒரு பார்ப்பனப் பெண்!

நாடாளுமன்றத்தில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட பிரதமரின் ஒப்புதல் அவசியம் - ஆனால், பிரதமரோ நரசிம்மராவ் என்ற ஆந்திரப் பார்ப்பனர்!

சட்டம் முழுமை பெறக் கடைசிக் கையொப்பம் போடவேண்டிய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள்சர்மாவோ உத்தரப்பிரதேசத்துப் பார்ப்பனர்!
மூன்று பார்ப்பனர்களிடம் வேலை வாங்கியிருக்கிறதே - வெற்றி பெற்றுள்ளதே திராவிடர் கழகம்! (பலத்த கரவொலி!). இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 சதவிகிதம் என்பதும், அது சட்டப்படி பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதும் தமிழ்நாட்டில்தானே! இது திராவிடர் இயக்க சாதனை அல்லவா!

திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று நன்றி உணர்ச்சி இல்லாமல் நாகூசாது வினா எழுப்புகிறார்களே! அவர்களுக்கு ஒன்று தெரியுமா?
தோளில் துண்டு போட உரிமை வாங்கித் தந்ததுகூட திராவிட இயக்கம்தானே!

இன்றைக்கு நம்மவர்களில் ஏராளம் பேர் டாக்டர்களாக வந்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு சேதி தெரியுமா? மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குச் சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்ததே! தந்தை பெரியார் போர்க் குரல் கொடுத்து, அன்றைய சென்னை மாநிலப் பிரதமர் ராமராய நிங்கர் என்ற பனகல் அரசர் அந்த நிபந்தனையை நீக்காவிட்டால், நம்மவர்களில் இத்தனை டாக்டர்களை எண்ணித்தான் பார்க்க முடியுமா?

இன்றைக்கு மீண்டும் கண்ணிவெடி வைக்கிறார்கள் - நமது குப்பனும், சுப்பனும் டாக்டராவதா என்று எண்ணுகின்றனர்!

எதையும் நேரடியாக செய்ய மாட்டார்கள் - சூழ்ச்சி வலைப் பின்னியே நம்மை ஒழிக்கப் பார்ப்பார்கள். பார்ப்பனர்களின் இந்தத் திரைமறைவு சூழ்ச்சி மற்றவர்களுக்கு சுலபத்தில் தெரியாது. ஈரோட்டுக் கண்ணாடி போட்டால்தான் விளங்கும்! (பலத்த கரவொலி).

எங்கள் பணிக்காக நாங்கள் ஒன்றும் நன்றியை எதிர்ப்பார்க்கவில்லை. தந்தை பெரியார் சொல்லுவார், நாங்கள் தண்ணீர்ப் பந்தல் வைத்துள்ளோம் - தாகம் எடுத்தவன் தண்ணீர்க் குடிக்கிறான் - தண்ணீர்க் குடிக்கும் ஒவ்வொருவனும் தண்ணீர்ப் பந்தல் வைத்தவன் யார் என்று தேடிச் சென்றா நன்றி தெரிவிக்க முடியும்?

நன்றித் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. தண்ணீர்ப் பந்தலில் வைக்கப்பட்ட டம்ளரை எடுத்துச் செல்லாமல் இருந்தாலே போதாதா?
உங்களுக்காகத்தான் நாங்கள் பேசுகின்றோம்; உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்காகத்தான் நாங்கள் பேசுகின்றோம். நாம் போராடிப் பெற்ற உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் பேசுகின்றோம்.

மிஸ்டு கால் கொடுத்து ஒரு கட்சி இங்கே கால் ஊன்றப் பார்க்கிறது.

ஏமாந்துவிடாதீர்கள்; கழகம் இல்லாத ஆட்சியை இங்கே ஏற்படுத்தப் போகிறார்களாம். கவலையில்லாத ஆட்சியை உருவாக்கப் போகிறார்களாம். கழகம் இல்லாத ஆட்சியை உருவாக்கப் போகிறார்களா? முதலில் கலகம் இல்லாத ஆட்சியை உண்டாக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் அன்றாடம் கலகம்தானே! மாட்டைக் காப்பாற்ற மனிதர்களைப் படுகொலை செய்பவர்கள் - தமிழ்நாட்டில் கழகம் இல்லாத ஆட்சியை உருவாக்கப் போகிறார்களாம்!

கழகம் இல்லாத ஆட்சியை உருவாக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு, கழகத்தின் ஓட்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்களுக்கு வேண்டும் என்று கழகத்திடம் கேட்பது ஏன்?

கழகம் இல்லாத ஆட்சியை அமைக்க விரும்புபவர்கள் அந்தக் கழகம் இல்லாமலேயே குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டியதுதானே!

ஆளும் கட்சியினருக்கும் வெட்கம் இல்லையே! ‘நீட்' தேர்வில் எங்களுக்கு விலக்கு வேண்டும் என்ற வகையில் மசோதாவை நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பினோமே அது என்னாயிற்று என்று மத்திய அரசைப் பார்த்து அ.தி.மு.க. ஆட்சியினர் கேட்கவேண்டாமா? ஏன் இப்படி சரணடைய வேண்டும்?

அதிமுகவினரும் சிந்திக்கவேண்டும் - அவர்கள் எந்த அணியிலாவது இருந்துவிட்டுப் போகட்டும் - நாட்டு நலன் முக்கியமல்லவா! அதுவும் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் சமூகநீதி முக்கியமானதல்லவா!

வாட்ஸ் அப் இளைஞர்கள் சிந்திக்கட்டும் - ஃபேஸ்புக் இளைஞர்கள் சிந்திக்கட்டும்! டுவிட்டர் இளைஞர்கள் சிந்திக்கட்டும்!
வாட்ஸ் ‘அப்.. அப்' என்று அதிலேயே உழன்று ‘டவுன்' ஆகலாமா?

மீண்டும் சொல்கிறோம் - உங்களுக்காகத்தான் பேசுகிறோம்.

செவி மடுங்கள் - செயலில் இறங்குங்கள்!

(8.7.2017 அன்று ஆலங்குளத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய அரும்சொற்பொழிவைத் தழுவி எழுதப்பட்ட உரைநடைச் சுருக்கச் சித்திரம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner