எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவாரூர் மண்டல திராவிடர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (16.7.2017) 6 மணிக்கு திருவாரூர் வி.பி.மகாலில் நடைபெற்றது.

ஒரு கலந்துரையாடலா? கழகத் தோழர்கள், மகளிர் அணியினரின் எழுச்சி மிக்கப் பாசறைக் கூட்டமா? என்று வியக்கும் அளவில் அக்கலந்துரையாடல் இருந்தது என்பது மிகுந்த மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கூடத் தந்தது!

எப்பாழுதும் திருவாரூர், நாகை மாவட்டங்கள் என்பவை கருஞ்சட்டைத் தோழர்களின் பாடி வீடாகவே இருந்து வந்திருக்கின்றன. 1957 இல் தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்புப் போராட்டமான - ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த கருஞ்சட்டைத் தோழர்கள் ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களுமாக குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றனர் என்பது சாதாரணமா?

திராவிடர் கழக விவசாய சங்கம் என்று சொன் னாலும், அவை வெறும் தொழிற்சங்கமல்ல - கழகக் கோட்பாடுகளை, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அணுவும் பிறழாது கடைப்பிடிக்கும் கருத்தோட்டமிக்கக் குடும்பங்கள் அவை.

கழகப் போராட்டம் என்றால், ஆண்களைவிட பெண்கள் முன்வரிசையில் நிற்கக் கூடியவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் காவிரி நீர் உரிமைப் போராட்டம் திருவாரூரில் நடைபெற்றபோது ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.

அவ்வளவுப் பேர்களையும் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் செல்ல இயலாத கையறு நிலைக்குக் காவல்துறை ஆளானபோது - பகுதிப் பேர்களை மட்டும் கைது செய்கிறோம் - மற்றவர்களை ஊர் திரும்பச் சொல்லுங்கள் என்று காவல்துறையினரே கேட்டுக் கொண்ட நிலையில், பெண்கள் திரும்பிச் செல்லத் தயாராக இல்லை என்பது இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய செய்தியாகும்.

அரசியல் கட்சிகள் அப்பகுதிகளில் காலூன்ற எடுத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எல்லாம் முறியடிக்கப்பட்டதும் உண்டு!
ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கலந்துரையாடலில் கழகத் தலைவர் சந்திக்கிறார் என்றவுடன் குடும்பம் குடும்பமாக திருவாரூரில் கூடிவிட்டனர்.

மாலையில்தான் கலந்துரையாடல் என்றாலும், காலைமுதலே கழகக் குடும்பத்தினர் திரள ஆரம்பித்துவிட்டனர் கழகத் தலைவர் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சந்தித்த வண்ணமாகவே இருந்தனர்.

பழங்களை அளித்தும், மாலைக்குப் பதில் ரூபாய் அளித்தும், பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டக் கோரியும், ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

அந்த ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரடியாகவே அறிந்தவர் தமிழர் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள், பிள்ளைகள்பற்றி எல்லாம் பெயர் சொல்லி விசாரித்தார்.

கழகக் குடும்பத்தினர் மட்டுமன்றி, பல கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கழகத் தலைவரைச் சந்தித்த வண்ணம் இருந்தனர்.

நேற்று காலை 10 மணியளவில் நீடாமங்கலத்தில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளிகள் ஆ.சுப்பிரமணியம், மேனாள் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கா.கணபதி (மூலங்குடியில்) ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அந்தச் சுயமரியாதைச் சுடரொளிகளின் படங்களைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார் கழகத் தலைவர்.

அவ்விரு நிகழ்ச்சிகளிலும் கழகத்திற்கு அப்பாற்பட்ட தோழர்களும், கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்டு கழகத் தோழர்களின் கொள்கைப்பற்று பற்றியும், திராவிடர் கழகத்தில் மட்டுமேதான் வாழையடி வாழையாக குடும்பம் குடும்பமாகக் கொள்கை வழுவாமல் வாழ்ந்து காட்டும் வெற்றியையும் மனந்திறந்து பாராட்டினார்கள்.

மறைந்து கழகத் தோழர்கள் அந்தப் பகுதி மக்களால் கட்சிகளைக் கடந்து எந்த அளவு மதிக்கப்பட்டனர் - மதிக்கும் அளவுக்கு வாழ்ந்து காட்டினார்கள் என்பதை எண்ணும்பொழுது கழகத்திற்கு மிகவும் பெருமையானதாகவும், பெருமிதமாகவும் இருப்பதை உணர முடிந்தது.
எங்கள் தோழர்கள் துறவிகளுக்கும் மேலானவர்கள். துறவிக்குக்கூட அடுத்த ஜென்மத்தில் மோட்சத்திற்குப் போகவேண்டும் என்ற ஆசை உண்டு; எங்கள் தோழர்களுக்கு அந்த மூடத்தனமான மோட்சத்திலும் நம்பிக்கை கிடையாது.

தங்கள் வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு ஊருக்கு உழைக்கக் கூடியவர்கள். எந்தப் பலனையும் கைமாறாக எதிர்பாராமல் இலட்சியத்தை ஈடேற்ற பாடுபடக் கூடியவர்கள்; இலட்சியத்திற்காக இன்னுயிரையும் இழக்கத் தயாராக உள்ளவர்கள் என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார் அவர்கள்.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் போராட்டத்தில் கைதாகி சிறைச்சாலையில் பிறந்த அந்தக் குழந்தைக்குச் ‘‘சிறைப் பறவை'' என்று பெயர் சூட்டப்பட்ட வரலாறு எந்த நாட்டில் உண்டு - எந்தக் கட்சியில்தான் உண்டு?
கலந்துரையாடல் கூட்டத்தில் இயக்கத்தின் செயல்பாடுகள், கால வளர்ச்சிக்கு ஏற்ப செயல்பாடுகள் முன்னெடுப்பது குறித்துக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி விருந்துடன் கூடிய குடும்பங்களின் சங்கமம், சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனை வளாகத்தில் மகளிர் பயிலரங்கம், மருத்துவப் பரிசோதனைகள் - மாலை மகளிர் விவசாய மாநாடு - விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அடுத்த வாரிசுகளுக்கான பயிற்சிப் பட்டறை - கழகப் பொறுப்புகளுக்கு அடுத்த தலைமுறையினரை வழிகூட்டுதல், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

மகளிரணி, மகளிர்ப் பாசறைகளின் செயல்பாடுகளைப் பாராட்டிய கழகத் தலைவர் அவர்கள், மாணவர், இளைஞரணியினரியின் செயல்பாடுகள் பக்கம் கவனம் செலுத்தி மேலும் வேகமாக எழுச்சியுடன் செயல்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
நாகையில் கோட்டவாசலில் நகரின் நுழைவு வாயிலில் திராவிடர் கழகம் வரவேற்பு அளிப்பதுபோல, அமைந்துள்ள பெரியார் கோட்டப் புதுப்பிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்படவேண்டும் என்று கழகப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

கழகம் மேலும் வலுவுடன் தீவிரமாக செயல்படுவதற்கு ஏற்ற வகையில் மண்டல, மாவட்ட, ஒன்றிய பகுதிகளுக்குப் புதிய பொறுப்பாளர்களைக் கழகத் தோழர் அறிவித்தார்.

ஆர்வப் பெருக்குடன் மண்டலக் கலந்துரையாடலில் பங்கேற்க வந்த கழகக் குடும்பத்தினர் புதிய முறுக்குடன், உத்வேகத்துடன் பிரியா விடை பெற்றுச் சென்றனர். கழகத் தலைவரோ கடுஞ் சுற்றுப் பயணத்திலும் இளைப்பாறக் கிடைத்த குளிர் நிழலாய், தருநிழலாய் இந்நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் திருவாரூரில் நடைபெற்றது ஒரு கலந்துரையாடல் அல்ல- ஒரு காவியம்!
குறிப்பு: இந்நிகழ்ச்சிகளில் எல்லாம் கழகத் தலைவருடன் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner