எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

'சோ' மறைவிற்குப் பிறகு திருவாளர்  குருமூர்த்தி 'துக்ளக்'கில் தன் பேனாவைச் சுழல விட்டிருக்கிறார்.

இந்திரன் மாறினாலும் இந்திராணி மாற மாட்டார் எனும் புராணக் கதை போல 'துக்ளக்' தன் பூணூல் தனத்தைவிடப் போவதில்லை.

வி.பி.சிங், லாலு பிரசாத், கலைஞர், வீரமணி என்று சொன்னாலே இந்தக் கூட்டத்திற்கு குருதிக் கொதிப்பும், மாரடைப்பும் வருவது புரிந்து கொள்ளத் தக்கதே!

சம்பந்தா சம்பந்தம் இல்லாமலும், உண்மைக்கு மாறாகவும் பூணூல் கொடுக்கு இவர்களைக் கொட்டிக் கொண்டே இருக்கும்.

எடுத்துக்காட்டாக இவ்வார 'துக்ளக்'கில் (28.6.2017) கேள்வி -  பதில் பகுதியில் திராவிடர் கழகத் தலைவரை சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.

கேள்வி: திராவிடக் கட்சிகளின் பின்பலம் இல்லாமல் தமிழகத்தில் எந்த நடிகராலும் வெற்றி பெற முடியாது என்று ரஜினிகாந்த் குறித்து கி. வீரமணி கருத்துக் கூறியுள்ளாரே?

பதில்: என்னையும் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள், கவனித்துக் கொள்ளுங்கள் என்று ரஜினியிடம் வீரமணி கேட்கிற மாதிரி இல்லை?

'சோ'வாக இருந்தாலும், குருமூர்த்திகளாக இருந் தாலும் பார்ப்பனர்கள் ஒரு முறையைப் பின்பற்றி வருவது கண்கூடு. எதையும் ஆதாரத்தோடு வெளியிடுவதில்லை என்ற 'சத்தியம்' செய்து கொண்டு 'அக்னிசாட்சியாக' எழுதுவதைப் பிழைப் பாகக் கொண்டவர்கள் இவர்கள்.

18 வயதுள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் - அதே போல பைத்தியம் பிடிக்காதவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்ற சட்டத்தின் நிலையை திராவிடர் கழகத் தலைவர் கூறியுள்ளார். இதனை ஏன் வசதியாக குருமூர்த்திகள் மறக்க வேண்டும்?

ரஜினி கவனித்துக் கொள்ள என்ன இருக்கிறது? திராவிடர் கழகத் தலைவர் ரஜினியிடமிருந்து மட்டுமல்ல - எவரிடமும் எதையும் எதிர்பார்க்கக் கூடியவரல்லர் - எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாதவர் 'ஓட்டு' உட்பட!

உண்மை என்னவென்றால் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைத் தான் இந்தக் குருமூர்த்தி கூட்டம் எப்பொழுதும் மனதில் வைத்துக் கொண்டு தத்தளிக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தப் பதில். இருட்டைக் கண்டால் அய்யோ 'பேய்' என்று அஞ்சுபவர்களும், கறுப்புச் சட்டையைக் கண்டால், நினைத்தால் பதறுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.

ஒரு பிரச்சினையில் ரஜினி நன்றாகவே 'கவனிக்கப்பட்டார்' மானமிகு வீரமணி அவர்களால்! அந்தத் தகவல் தெரியுமா குருமூர்த்தி கூட்டத்துக்கு?

இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 15 ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டியிருக்கும்.

ரஜினி நடித்த 'பாபா' என்ற திரைப்படம் - கவிஞர் வாலி பாடல் ஆசிரியர் - அதில் ஒரு பாடல். அந்தப் பாடலில் சில வரிகள்:

கடவுளை மறுத்தவன் நாள்தோறும்

கூறினானே நாத்திகம்

பகுத்தறிவாளன் நெஞ்சினிலே

பூத்ததென்ன ஆத்திகம்

திருமகன் வருகிறான் திருநிறை

நெற்றிமீது தினம் பூசி

அதிசயம் அதிசயம் பெரியார்தான்

ஆனதென்ன ராஜாஜி

என்பதுதான் அந்தப் பாடல்.

பெரியார் ராஜாஜியாகி விட்டார் என்று பொருள் தரும் இந்த வரி நீக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் - வழக்கும் தொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர்.

அவ்வளவுதான், அலறி அடித்துக் கொண்டு சமாதானத்துக்கு வந்தவர் யார் என்பதை ரஜினியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள். ஏன்? பாடலாசிரியர் வாலியே பெரியார் திடலுக்குப் பறந்து வந்தார் - தன் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார் கடைசி செய்தி, 'பாபா'வில் சர்ச்சைக்குரிய பாடல் நீக்கம் ('தினமலர்' 3.8.2002).

எங்களோடு மோதியவர் கதை எல்லாம் இப்படியாகத்தான் முடிந்திருக்கிறது.

ஆளானப்பட்ட திருவாளர் 'சோ'வே பெரியார் திடலுக்குப் பேட்டி காண வரும்போதே 'வீரமணி சார், இந்த ஆதாரங்களை எல்லாம் காட்டி பயமுறுத்தாதீர்கள்' என்ற சரணாகதியைப் பல்லவி யாக்கிக் கொண்டுதான் வருவார் என்பதெல்லாம் குருமூர்த்திக்கு எங்கே தெரியப் போகிறது!

இதே 'துக்ளக்'கில் இன்னொரு கேள்வி - பதில் பகுதியிலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஆசிரியர் வீரமணி அவர்களை இழுத்திருக்கிறார்.

கேள்வி: வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் எல்லையில் முழுமையான சண்டை நிறுத்தம் கடைப் பிடிக்கப்பட்டது. அதே அணுகுமுறையை மோடியும் பின்பற்றி இருக்க வேண்டும் என்கிறாரே ஃபரூக் அப்துல்லா?
இதில் பலவற்றை எழுதி விட்டு கடைசியாக முடிக்கும் பொழுது  'முன்னுக்குப்பின் முரணாகப் பேசும் ஃபரூக்அப்துல்லா நம் வீரமணியைப் போலத் தோன்றுகிறார். காஷ்மீரிலும் ஒரு வீரமணி இருக்கிறார்' என்று பதில் சொல்லியிருக்கிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர். இந்தக் கேள்விக்கும் பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
இதன் மூலம் ஒன்று உறுதியாகவே தெரிகிறது. வீரமணி என்ற பெயர் இந்தக் கூட்டத்தை தூங்க விடாமல் செய்கிறது அல்லும் பகலும் அவர் நினைவு தான் போலும்!

Phobia  என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு. சதா நினைத்துக் கொண்டு அஞ்சிக் குலை நடுங்குவது.

நிழலைப் பார்த்துக்கூட 'அய்யோ வீரமணியா?' என்று வியர்த்து விறுவிறுத்துப் போகிறார்கள் என்பது நன்றாகவே விளங்குகிறது - இருக்காதா?

காவிகளுக்குக் கசையடி - சங்கர மடத்துக்குச் சவுக்கடி - சமூகநீதி எதிரணிகளுக்குத் தடாலடி - ஆன்மீகவாதிகளுக்கு அதிரடி - மூடநம்பிக்கை வியாபாரிகளுக்கு முதலடி - மதவாதக் கும்பலுக்கு மரண அடி!

அவர் பெயரைக் கேட்டால் அதிருதுல! அந்த எரிச்சலில்தான் எதற்கெடுத்தாலும் வீரமணி வீரமணி என்ற உதறல்!
அகில இந்திய பிஜேபி தலைவரை வரவழைத்து, எங்களுக்கு இடஒதுக்கீடே வேண்டாம் என்று சில அனாமதேயங்களைச் சொல்ல வைத்து "சபாஷ்! சபாஷ்!! இடஒதுக்கீடு வேண்டாம்" என்று சொல்லுகிற பிரகஸ்பதிகளும் இருக்கிறார்களே!

இதை பிரதமர் மோடியிடம் சொல்லி ஆவன செய்வேன் என்று அமித்ஷாவையும் பேச வைத்து, கடைசியில் உள்ளி மூக்கு உடைந்து ரத்தம் கொட்டி யது தானே குருமூர்த்திகள் கண்ட மிச்சம்!

அந்த ஆத்திரம் இருக்காதா? அந்தோ பரிதாபம்! ஆழ்ந்த அனுதாபங்கள்!


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner