எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

தமிழ்நாட்டில் தி.மு.க. விற்கு வாய்ப்பு இனிமேல் இல்லை. திராவிட இயக்கச் சித்தாந்தம் என்பது திமுகவிற்கு வெறும் சடங்காக மாறி பல காலம் ஆகி விட்டது.

அ.தி.மு.க காலத்தில் எம்.ஜி.ஆர். அந்தச் சடங்கை கொஞ்சம் பகிர்ந்து கொண்டார்.

ஜெயலலிதா காலத்தில் இம்மாதிரிச் சடங்குகள் எல்லாம் உதறித் தள்ளப்பட்டன.

இப்பொழுது அ.தி.மு.க. பல கிளையாகி விட்டது. இந்த நிலையில் இக் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சிகளுக்கு நன்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த மாநிலக் கட்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. என்கிற தேசிய கட்சிகள் முன்னி லைப்படுத்துவது தமிழக அரசியல் களத்தை ஆரோக்கியமானதாக்கும் எனும் வகையில் இவ் வார ‘துக்ளக்’ இதழில் (28.6.2017) கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது.

‘துக்ளக்’ இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது.  தி.மு.க, அ.தி.மு.க . வுக்கு எதிர்காலம் இல்லை. திராவிட சித்தாந்தம் என்பதெல்லாம் இனி எடுபடாது. எனவே தேசிய கட்சிகள் தான் வேரூன்ற வாய்ப்பு உண்டு.

அந்தத் தேசிய கட்சிகள் காங்கிரசும் - பா.ஜ.க.வும் தான் என்பது ‘துக்ளக்‘ கட்டுரையின் சாரமாகும்.

இது உண்மைதானா? தமிழ்நாட்டில்  திராவிட சித்தாந்தத்திற்கு மதிப்பு இல்லையா? அது காலாவதியாகி விட்டதா? இந்த சித்தாந்ததுக்கு எதிராக  தேசிய கட்சிகள் இங்கே செயல்படப் போகிறதா? என்பது மிக முக்கியமான கேள்விகளாகும்.

இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என்று பா.ஜ.க. தமிழ்நாட்டு மக்கள் முன் வைக்கப் போகிறதா? சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப் போகிறதா?

இடஒதுக்கீடு இனி தேவையில்லை என்று பிரகடனப் படுத்தப் போகிறதா?

தமிழ்நாட்டின் பெயரை மறுபடியும் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் செய்யப் போகிறதா? சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சட்டம் செய்யப் போகிறதா?

தலைமைச் செயலகத்தில் பொறிக்கப்பட்டுள்ள “வாய்மையே வெல்லும்” என்பதற்குப் பதிலாக ‘சத்தியவே ஜெயதே’ என்று மறுபடியும் பலகையை மாட்டப் போகிறதா?

தொடர் வண்டி நிலையங்களில் பெயர் பலகைகளில் முதல் இடத்தில் இந்தி எழுத்துகளை முன்பு இருந்தது போல) மீண்டும் இடம் பெறச் செய்யப் போகிறதா?

ஜாதிப் பெயர்களில்தெருக்களின் பெயர்கள் இருக் கலாம் என்று சுற்றறிக்கை விடப் போகிறதா?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நீக்கி விட்டு ‘சரஸ்வதி வந்தனா’வை அறிமுகம் செய்யப் போகிறார்களா?

திருவள்ளுவர் ஆண்டை தீர்த்துக் கட்டப் போகிறார்களா? குமரி முனையில் இருக்கும் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை நீக்கி விட்டு மனுவின் சிலையை நிறுவப் போகிறார்களா?

கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு நிதி உதவி, பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்களை எல்லாம் ஊத்தி மூடுவோம் என்று பொங்குவார்களா?

விளம்பரப் பலகைகளில் முதல் இடத்தில் தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆணையை விலக்கிக் கொள்ளப் போகிறார்களா?

மறுபடியும் வணக்கம் போய் நமஸ்காரமா? நன்றிக்கு விடை கொடுத்து, வந்தனோபசாரமா? சொற்பொழிவு போய் பிரசங்கம் தானா?

‘திரு’ போய் ‘ஸ்ரீ’ தானா?

மயிலாடுதுறை மாயவரம் தானா? திருமணம் நீங்கி விவாஹ சுப முகூர்த்தம் தானா?

நீத்தார் நினைவேந்தலுக்கு விடை கொடுத்து உத்தரகிரியை தானா?

புதுமனைப்புகு விழா போய் கிரகப்பிரவேசம் தானா?

பொங்கல் போய் சங்கராந்திதானா?

இவற்றையெல்லாம் முன்னிறுத்தி எந்தத் தேசிய கட்சி தமிழ்நாட்டில் கடை விரிக்கப் போகிறது? எந்த புதிய கட்சிக்கு இந்தத் துணிவுண்டு?

காங்கிரசிஸ் தேசிய கட்சி தான். வெறும் காமராசர் அல்ல - பச்சைத் தமிழராக இருந்துதானே ஆள முடிந்தது - திராவிட இயக்கச் சித்தாந்தமான சமூக நீதியைத் தோளில் சுமந்துதானே கர்ம வீரர் காமராசர் வீரர் உலா வந்தனர்.

கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று ஆனந்தவிகடன் எழுதியது எந்த அடிப்படையில்?
தேசியத் திலகமான காமராசரை கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று ‘கல்கி’ கருத்துப் படம் போட்டது. தேசிய அடிப்படையிலா-  திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையிலா?

இந்தியாவிலேயே ஒரு கருப்புக் காக்கை இங்கே இருக்கிறது. அதைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று ஆச்சாரியார் ராஜாவா? சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பேசியது - எந்த அடிப்படையில் காக்கை என்றால் கருப்புத்தான்.

கருப்புக் காக்கை என்று அவர் அழுத்திச் சொன்னதன் அர்த்தம் என்ன? காமராசரை அவரின் அரசியல் எதிரி என்று திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில் தானே பார்க்கிறார்?

ஏன், பாரதீய ஜனதா வடமாநிலங்களில் பேசும் அதே தொனியைத் தமிழ்நாட்டில் காட்டுவதுதானே?

தமிழ்நாட்டுப் பா.ஜ.க.வுக்கு ஒரு தமிழிசையைத் தானே தலைவராக நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது, ராஜாக்களும், சோக்களும், கஜக்குட்டிக்கரணம் போட்டாலும் அந்த நாற்காலி ஒரு பிற்படுத்தப்பட்டவருக்குதானே கிடைத்திருக்கிறது இங்கே!

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் (இப்பொழது 233) பார்ப்பனர் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுதானே!

எந்தக்கட்சியும் பார்ப்பனரை சீண்டாதது ஏன்?

இவை எல்லாம் இருக்கிற வரை இங்கு திராவிடச் சித்தாந்தம் உயிர் துடிப்புடன் உயர்ந்து பறக்கிறது என்று தானே பொருள்!
இந்தப் பாரதீய ஜனதாக்கள் தமிழ்நாட்டில் ஏதோ இருக்கின்றன என்று சொல்வது கூட திராவிட அரசியல் கட்சிகள்

போட்ட பிச்சைதானே!

இப்பொழுது தீட்டிய மரத்தில் கூர்ப்பாய்ச்சப் பார்ப்பது என்பது பார்ப்பனீயத்துக்கே உரித்தான மரபணு.
தருண் விஜய்களைக் காட்டி திருவள்ளுவரைக் காட்டி கூழைக் கும்பிடு போட்டாலும், குரக்களி வித்தை காட்டினாலும், அதன் ஆணி வேர் வரை ஊடுருவிச் சென்று அடையாளம் காட்டும் ஈரோட்டுக் கண்ணாடி இங்கு உண்டு - மறவாதே துக்ளக்கே - ஆரியமே!


அசோக் மேத்தா சொன்னது

1977 செப்டம்பரில் தமி ழகத்துக்கு வந்த பிரபல சோசலிஸ்டும், பொருளா தார மேதையுமான அசோக் மேத்தா அவர்கள் சென்னையில் செய்தியாளர் களிடையே பேசும்போது கீழ்க்கண்ட கருத்தைச் சொன்னார்.

தென்னகத்தில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத்தப்பட்ட மக்களின்மீது உயர்ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் அறைகூவல் விடுத்தது.

பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிலே வெற்றி கண்டு அரசியலையும் கைப்பற்றினார்கள்.  தமிழகத்தில் ஏற்கெனவே நடந்துள்ள இத்தகைய மாற்றத்தின் எதிரொலியை அண்மையில் சில மாதங்களாக வட மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களில் காண முடிகிறது.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களாக இருப்பவர்கள் விவசாயிகள்தான். அத்தகைய பிற்படுத்தப்பட்ட மக்கள் இப்பொழுது வட மாநிலங்களில் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டு வருகிறார்கள். வடநாட்டுக்கும் தென் னாட்டுக்கும் இடையே இப்படிப்பட்ட சிந்தனைப் பூர்வமான ஒற்றுமை ஏற்பட்டு இருக்கிறது! என்று அசோக் மேத்தா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ், 16.09.1977)

திராவிட இயக்க சித்தாந்தம் தான் வடக்குக்குத் தேவையே தவிர. திராவிட இயக்கத் தமிழ் நாட்டுக்குத் தேசிய கட்சிகள் தேவையில்லை என்பது இப்பொழுது புரிகிறதா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner