எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆழ்வார் பட்டம் விபீஷணனோடு முடியட்டும்!

கவிஞர் கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

"இந்திய அரசியல் அரங்கில் இன்று திராவிடக் கட்சிகளுக்கான தேவை எங்கே இருக்கிறது என்றால், சமூக நீதிக்கும், நல்லிணக்கத்துக்குமான முன்னுதாரன மாநிலமாகத் தமிழகத்தை நீடிக்கச் செய்வதிலும், மாநில சுயாட்சிக்கான முன்னுதாரன மாநிலமாகத் தமிழகத்தை நீடிக்கச் செய்வதிலும், மாநிலக் குரலுக்கான தேசியக் குரலின் வலுவான மய்யமாகத் தமிழகத்தை வளர்த்தெடுப்பதிலுமே இருக்கிறது; அதற்குத் தென்னிந்தியாவில் தொடர்ந்து காஷ்மீர் வரை மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் புள்ளியாக அவை மாற வேண்டும் என்றால் வெளித் தோற்றத்தில் இனப்பாகுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் பெயர் சுமையிலிருந்து அவை விடுபட வேண்டும்" என்று திருப்பித் திருப்பி இந்தத் திராவிடத்தின்மீதுதான் தம் கண்களைக் குத்திக் குத்திப் பார்க்கிறார்.

திராவிடத்துக்கு இனிமேல் தமிழ்நாட்டில் என்ன வேலை இருக்கிறது என்று எழுதிய தோழர் சமஸ், இங்கு என்ன சொல்லுகிறார்? சமூகநீதிக்கும், நல்லிணக்கத்துக்குமான முன்னுதாரன மாநிலமாக தமிழகத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்று இந்த இடத்தில் கூறுகிறார். இதன் மூலம் திராவிட இயக்கத்தின் தேவையை இங்கு வலி யுறுத்துவதைக் கவனிக்க வேண்டும்.

இதற்காக இந்தியா முழுவதையும் ஒருங்கிணைக்க திராவிடம்  என்ற பெயர் எப்படி தடையாக இருக்கிறது என்பதை விளக்காமலேயே அதை ஒரு குற்றச்சாட்டாக வைப்பது - அவரிடம் அதற்கான சரக்கு இல்லை  என்ற வெறுமையைத் தான் வெளிப்படுத்துகிறது.

மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற் காக இந்திய அளவில் அனைத்து மாநில சமூக நீதியாளர்களையும் ஒருங்கிணைத்து 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும்  நடத்திடவில்லையா? (டில்லி நாடாளுமன்றம் முன்பாகவும், பிரதமர் இந்திரா காந்தி வீட்டு முன்பாகவும், திராவிடர் கழகம் - இந்தப் பெயரிலேயே நடத்தி வெற்றி காணவில்லையா?) அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தை ஒரு முறை தெரிந்து கொள்ள முயற் சிக்கட்டும். இந்தியாவின் பல மாநிலங்களிலும் திராவிடர் கழகம் தன் பெயரை மாற்றிக் கொண்டா மாநாடுகளை நடத்திட ஒருங்கிணைத்தது?

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும் சமஸ் தன் கட்டுரையில் எந்தப் பார்ப்பனர்களுக்காக இனாம்  வக்கீலாக வாதிடுகிறாரோ  அந்தப் பார்ப்பனர் களின் ஆதிக்கத்தை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களையும் தாண்டி வடபுலத்துத் தலைவர்கள் சண்டமாருதம் பொழிந்தனரே!

ராம்விலாஸ் பஸ்வானாகட்டும் (இன்றைய மத்திய அமைச்சர்), சந்திர ஜித்தாகட்டும், டி.பி. யாதவாகட்டும் - பிரம்பிரகாஷாகட்டும், மவுரியாவாகட்டும்,  (திராவிடர் கழகக் கொடியையே தமது அமைப்புக்காகப் பெற்றுச் சென்றார்) கர்ப்பூரி தாகூராகட்டும் ஒரு நீண்ட பட்டியலே உண்டு. அவர்கள் உரைகள் எல்லாம் பார்ப்பனர்களின் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை, எதிர்க் குரலை எதிர்த்து அனல் புயலாக அல்லவா வீசினர்!

ஆம், சமூக நீதி என்று எடுத்துக் கொண்டால் அது பார்ப்பனர் எதிர்ப்பில் தான் கொண்டு போய் விடும் என்பதை தமிழ்நாட்டில் வாசம் செய்யும் சமஸ் எப்படி மறந்தார் அல்லது அறியாமை இருட்டில் முடங்கினார்? ஒருகால் பார்ப்பனர் மீதான பாசத்தால் கண்கள் இருண்டு விட்டனவா?

அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26இல் அமலுக்கு வந்தாலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அறவேயில்லை;  அதற்காக மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்தக் கோரி பிற்படுத்தப்பட்டோர் போராடும் நிலையில், மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் பார்ப்பன சங்கத்தின் அழைப்பை ஏற்று பார்ப்பனர்கள் உண்ணாவிரதம் இருந்ததை (1.10.1990) சமஸ் அறிவாரா? அதனை எதிர்த்து திராவிடர் கழகம் உண்ணும் விரதம் நடத்தியதுதான் தெரியுமா?

இடஒதுக்கீட்டுக்கான உரிமைகளை ஈட்டிட அங்குல அங்குலமாக ஆரியப் பார்ப்பனர்களை எதிர்த்து போராட  வேண்டியிருந்தது என்பதுதான் உண்மை வரலாறு!

சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங்  அவர்கள் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார் என்பதற்காக, அவரது ஆட்சியைக் கவிழ்த்த 'மகானுபவர்'கள்! தான் சமஸ் தூக்கி சுமக்கும் பா(பார்ப்பன)ஜ.க.!

அய்யோ பாவம் பார்ப்பனர்களை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும் என்று திராவிட இயக்கத்தினரைக் கெஞ்சுகிறாரே .

திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற திராவிடக் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் சேர்ந்து கொள்ள இப்பொழுது கூடத் தடையில்லையே. ஒரு வி.பி. ராமன் திமுகவுக்கு வந்து செய்த காரியம் என்ன? ஆச்சாரியாரை சந்திக்க வைத்தது தானா?

ஒரு ஜெயலலிதாவை திராவிட இயக்கத்தில் சேர்த்து திராவிட இயக்கத்தின் அடையாளத்தையே அழித்து விடவில்லையா? அண்ணா பெயரையும், 'திராவிட' என்ற இனவியல் சித்தாந்தத்தையும் தலைகீழாகப் புரட்டியடிக்கவில்லையா? தொண்டர்களை மண் சோறு சாப்பிட வைக்கவில்லையா?

பார்ப்பனர்கள் புகுந்த புத்த மார்க்கம் இந்தியாவில் என்னாயிற்று?  எந்த வைதிக, சனாதன, வருணாசிரம ஆரிய கலாச்சாரத்தை வீழ்த்த புத்தம் தோன்றியதோ, அந்த புத்தம் இந்தியாவிலேயே காலூன்ற முடியாதபடி ஊடுருவி அழித்த வரலாற்றையெல்லாம் சமஸ் அறிவாரா?

பார்ப்பனர்களை நோக்கி திராவிட இயக்கத்தின் பார்வை துவேஷமல்ல  - அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் சித்தாந்த பார்வை.

அதற்குத் தடையாக இருப்பது எதுவாக இருந்தாலும் தந்தை பெரியார் பார்வையில் தூள் தூள்தான் - அது அரசமைப்புச் சட்டமாக இருந்தாலும் சரியே!

அதற்கு எதிர் நிலை சித்தாந்தத்தை  கொண்டதுதான் பார்ப்பன ஆரியம் என்பது. நியாயமாக தோழர் சமஸ் அவர்கள் அறிவுரை கூறுவதாக இருந்தால் அதனை பார்ப்பனர்களிடமும், சங்கராச்சாரியார்களிடமும், இராம கோபாலன் வகையறாக்களிடமும் அல்லவா சொல்ல வேண்டும்.

"துவி ஜாதி - இரு பிறப்பாளன் என்று உங்களை அழுத்தமாக அடையாளம் காட்ட அல்லவா பூணூல் அணிகிறீர்கள்; ஆண்டுதோறும் எதற்காக ஆவணி அவிட்டத்தில் அதை புதுப்பித்துக் கொள்கிறீர்கள்?

பிராமணர்களே! பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவர்கள் என்ற இறுமாப்பிலிருந்து கீழே இறங்கி வாருங்கள். நீங்கள் பிராமணர் என்றால் நாங்கள் யார்? சூத்திரர்கள் தானே - சூத்திரர் என்றால் அடிமைகள்தானே - வேசி மக்கள் தானே - கல்வி கற்கக் கூடாதவர்கள் தானே!

ஒரு புது யுகத்துக்குள் நுழைய வேண்டாமா? (இதைச் சொல்லிதான் கட்டுரையைத் தொடங்கியுள்ளார் சமஸ்) "நீங்கள் உங்கள் பிறவி உயர்வை நிலை நிறுத்த, நிலை நிறுத்த உங்கள் மீதான வெறுப்பு மேலும் மேலும் வளரத் தானே செய்யும்?" என்று ஏன் சமஸ் பார்ப்பனர்களை வற்புறுத்தக் கூடாது? ஏன்? அந்த அடிப்படையில் எழுதக் கூடாது?

இதே பாணியில் விவேகானந்தரேகூட பார்ப்பனர் களைப் பார்த்துக் கேட்டதுண்டு.

இந்துக்களே ஒன்று சேர்வீர் என்கிறீர்கள். ஆனால் அந்த இந்துக்களில் தாழ்த்தப்பட்டோர் கோயில் கரு வறைக்குள் அர்ச்சகராகலாம் (உரிய பயிற்சி பெற்று) என்று சட்டம் வந்தால் அதனை எதிர்த்து ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறீர்கள்? என்று சமஸ் கேட்க வேண்டாமா?

(வழக்கைத் தொடுத்தவர்கள் 13 பார்ப்பனர்கள்; சங்கராச்சாரியார், ஆசியோடு - பிரபல வழக்குரைஞர் பல்கி வாலாவுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தவர் ராஜாஜி)

பார்ப்பனர்கள் நடத்திய அமைப்பான சென்னை இராயபுரம் லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் அழைப்பை ஏற்று தந்தை பெரியார் சென்று உரையாற்றினாரே (5.1.1953).

நம்மில் சிலர் அமர்ந்து பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம் - நம் பின் சந்ததிகள் அகிம்சைவாதிகளாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது என்று பார்ப் பனர்கள் மத்தியிலேயே பேசியதுண்டே! யார் முன் வந்தார்கள்?

அதைவிட 55 ஆண்டுகளுக்குமுன் 'விடுதலை'யில் தம் கையொப்பமிட்டு தந்தை பெரியார் அறிக்கையொன்றை வெளியிட்டார்களே -

தலைப்பு: பார்ப்பனத் தோழர்களுக்கு!

"பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ் நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட் டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது."

('விடுதலை 1.4.1962)

இதைவிட என்ன வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று சமஸ்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்?

கோயில் கருவறைக்குள் எங்களைத் தவிர வேறு ஜாதியினர் சென்று பூஜை செய்தால் சாமி தீட்டுப்பட்டு விடும் சாமி செத்துப் போய் விடும் என்று வைகனாக ஆகமத்தைத் தூக்கிக் கொண்டு உச்சநீதிமன்றம் செல்லுகிறார்களே.

தீட்டுப்பட்டு விட்டதால் சம்ப்ரட்சணம் செய்ய வேண்டும்; 1008 புது கலசங்கள் செய்து வைக்க வேண்டும்; பிராமணப் போஜனம் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்ற படிக்கட்டு ஏறிச் சொல்லுகிறார்களே - இவை எல்லாம் பார்ப்பனர்களின் பெருந் தன்மையைக் காட்டுகிறது என்று சொல்லப் போகிறாரா சமஸ்?!

யாருக்கோ சொல்ல வேண்டியதை எல்லாம் இடம் மாறி இடமாறு தோற்றுப் பிழையாக எழுதலாமா?

பாதிக்கப்படுபவன் யார்? பாதிப்புக்குக் காரணமானவர் யார்? என்று அறிவதில்கூடத் தடுமாற்றமா?

வெறும் கல்வி, உத்தியோகம் என்பதைவிட பெரும் பாலான மக்களின் சுயமரியாதைக்கும், அடிப்படை உரிமை களுக்கும் சவாலானது பார்ப்பனீயம் - இழிவுபடுத்தக் கூடியது - பார்ப்பனீய - கடவுள், மதம், சாத்திரம், சம்பிரதாயங்களின் பெயரால். இதுதான் முக்கியப் பிரச்சினையே!

பார்ப்பனீயம் மற்றவர்களிடமும் இருக்கிறதே என்று சமாளிக்கிறார் சமஸ். உண்மைதான் பார்ப்பனீயத்துக்கு மூலம் பார்ப்பனர்! அதன் தாக்கம் பார்ப்பனர் அல்லா தாரிடம்; நிஜத்துக்கும், நிழலுக்கும் வித்தியாசம் உண்டு என்பது நினைவிருக்கட்டும்.

"அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்" எனும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சி சங்கராச்சாரியார்  ஜெயேந்திர சரஸ்வதி (கொலைக் குற்ற வழக்கில் சிறைக்குச் சென்றவர்) என்ன பேசினார்?

"தமிழ்நாட்டில் பிராமணர் - பிராமணரல்லாதார் என பிரிவினை ஏற்படுத்தப்பட்டு, அது கடவுள் எதிர்ப்பு, நாஸ்திக உணர்வு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தமிழ் நாடும், தமிழ் மொழியும் தோன்றிய நாளிலிருந்து பிராமணர் இங்கு இருக்கின்றனர். தமிழில் தோன்றிய முதல் நூலே தொல்காப்பியன் என்ற பிராமணன் எழுதியதுதான். சமஸ்கிருதம்தான் இந்தியக் கலாச்சாரத்தின் வேர். அதைக் கைவிட்டால் கலாச்சாரம் அழிந்து விடும். இதையெல்லாம் வருங்கால பிராமணர்கள் மறந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது"

"எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. ராமர் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொல்படிதான் நடந்தார். மதுரையை  நாயக்கர்கள்  ஆண்ட போதும் அந்தணர்தாம் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சி பெரியவாள்! ஆண்டவன்கூட அப்புறம் தான் அந்தணன்தான் முதலில்.

ஈஸ்வரனைத் துவேஷித்தால் கூட மன்னிப்பு உண்டு. ஆனால் அந்தணனைத் துவேஷித்தால் மன்னிப்பு கிடையாது" என்று பேசினாரே! (9.10.2002)

பார்ப்பனர்கள் திருந்தி விட்டனர் என்பதற்கு "ஜெகத் குருவின்" இந்த ஜெகம் புகழ் அமுத வாக்குப் போதாதா என்று புகழ்ந்து எழுதினாலும் எழுதுவார் சமஸ்.

மதவாத சங்கராச்சாரியார் இப்படிப் பேசுகிறார் என்றால்  அரசியல்வாதி 'மூதறிஞர்' ராஜாஜி என்ன சொல்லுகிறார்?

In fact one occasion Rajaji proudly said that he valued his Brahminhood than his Chief Ministership (Caravan 21.4.1928 - Gandhiji's Crusade Against Casteism)

தான் முதல் அமைச்சராக இருப்பதைவிட பிராமணன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமைப்படுகிறாராம் - மதிக்கிறாராம்.

இதற்கு மேலும் என்ன சொல்ல!

ராஜாஜியின் இந்தத் தன்மையைச் சுட்டிக் காட்டி இனி யாரை மனதில் வைத்துக் கொண்டு எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தான் இருப்பார்களா என்று நினைப்பது?! என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு பார்ப்பன நீதிபதிகள் முன்னதாக தந்தை பெரியார் கூறியதுண்டே! ("நீதி கெட்டது யாரால்?")

தோழர் சமஸ் செல்ல வேண்டிய இடமும் வேறு - சொல்ல வேண்டிய இடமும் வேறு.

இன்னொன்று முக்கியமாக ஏதோ திராவிட இயக்கம்தான் பார்ப்பனர்களை எதிர்க்கிறது என்று எண்ண வேண்டாம் வரலாறு நெடுக எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது. அது சரியாக  பெரியாரிடம் அடி வாங்கி "மரணப் படுக்கையில்" கிடக்கிறது என்றாலும் அதன் திமிரும், ஆணவமும் அடங்கிய பாடில்லை.

மறைமலை அடிகள், கா.சு. பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் எல்லாம் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் - அவர்கள் எல்லாம் பார்ப்பன எதிர்ப்பாளர்களாக மாற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதையும் கொஞ்சம் அறிவைச் செலுத்திச் சிந்திப்பது நல்லது.

ஆழ்வார் பட்டம் விபீஷணர்களோடு முடிந்தால் நல்லது!

 

--------------------

 

கோயிலைச் சாத்தி தீட்டுக் கழித்தது எந்த உறவில்?

2002 செப்டம்பரில் கரூர் மாவட்டம் திருமுக்கூடலூர் மணிமுத்தீசுவரர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ததற்காக, கோயில் தீட்டுப் பட்டு விட்டது என்று மூன்று நாள்கள் கோயிலைச் சாத்தி தீட்டுக் கழித்ததும், தமிழில் குடமுழுக்குச் செய்ததை சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கண்டித்ததும் எதைக் காட்டுகிறது? சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீஷப் பாஷை என்று கூறும் பார்ப்பனர்களுக்காக சமஸ் வாதிடுவது எந்த உறவில்?

தமிழில் அர்ச்சனை செய்தால் பொருள் இருக்கும் - அருள் இருக்காது என்று 'சோ' ராமசாமி எழுதிடவில்லையா? ('துக்ளக்' 18.11.1998).

அரசியல் விமர்சகர் என்று சொல்லிக் கொண்டாலும் ஆன்மிகத்தில் அவாளின் உணர்வு எப்படி இருக்கிறது? சோவுக்கு உள்ள உணர்வு சமஸ்களுக்கு ஏனில்லை?

 

----------------------

வரலாற்றைத் தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது

முசுலீம்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஆளுமை இடத்துக்கு நகர்த்திட திராவிடக் கட்சிகள் முயல வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார் தோழர் சமஸ்.

சிறுபான்மையினர் பாதுகாப்புக்கும், தாழ்த்தப்பட்ட வர்களின் இழிவை ஒழிப்பதற்கும், அவர்களின் சமூக நீதிக்கான இலக்கு  எட்டப்படவும் தொடர்ந்து பாடுபட்டு வருவதுதான் திராவிட இயக்கம். அவர்கள் எந்த உயரத் திற்கு செல்வதற்கும் எந்த வித மன ஒதுக்கீடும் இல்லாமல் சிந்திக்கவும், செயல்படவும்  நாங்கள் தயார்தான். இதனை சமஸ் தூக்கிப்பிடிக்க நினைக்கும் பிஜேபியிடம் அல்லவா சொல்லவேண்டும்? மித்ரபேதம் செய்யும் வேலையில் பார்ப்பனத்தனமாக சமஸ்கள் ஈடுபட வேண்டாம்.

கலைஞர் பிறந்த சமூகத்தை நினைத்தோ, அண்ணாவை அதேபோல  நினைத்தோ முதலமைச்சராக திராவிட இயக்கம் கொண்டு வரவில்லை. இயக்கப்பணி, பொதுப் பணி, உழைப்பு அடிப்படையில் சிறுபான்மையினரோ, தாழ்த்தப்பட்டவர்களோ ஆட்சியில் ஆளுமை இடத்துக்கு வர திராவிட இயக்கத்தில் தாராளமாகவே வாய்ப்பும், இடமும் உண்டு என்பதை சமஸ்கள் அறியட் டும். சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் முதல் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதியாக செம்மாந்து அமரச் செய்வதற்கு குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். செயலாக்கம் தந்தவர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அல்லவா? வரலாற்றைத் தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner