எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ் இந்துக்கு மறுப்பு

சமஸ்கிருதமயமான சமஸ்

- கவிஞர் கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

"அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?" எனும் தலைப்பில் தோழர் சமஸ் 'தி இந்து' (தமிழ்) ஏட்டில் நேற்று (5.4.2017) கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார்.

திராவிடர் இயக்கத்துக்குக் கருத்துதானம் செய்ய முன் வந்துள்ளார்.

எந்தத் தளத்தில் நின்று கொண்டு என்பதுதான் முக்கியம். பார்ப்பனர்களுக்கு வக்காலத்துப் போட்டு என்னென்ன வார்த்தைகளை எல்லாமோ போட்டு ஓர் அவியலைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

"ஆரியர் - திராவிடர் கருத்தைத் தாண்டி, சமகால இந்திய அரசியலில் திராவிட" எனும் சொல்லுக்கான பொருத்தப்பாடு என்ன? ஒரு காலத்தில் தோராயமாக தென்னிந்தியாவைக் குறிப்பிட்ட சொல் அது. இந்தப் பிராந்தியத்தைத் தனி நாடாக அங்கீகரித்து, ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்கு அர்த்தம் இருந்தது. இன்றைக்கு"  - என்று கட்டுரை தொடங்கப்பட்டுள்ளது.

திராவிடர் என்ற ஓர் இனம் இல்லை, கிடையவே கிடையாது என்பது தோழர் சமஸின் ஊர்ஜிதமா? திராவிடர் என்ற இனச் சொல் திராவிடர் இயக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட சொல்லா?

ஒரு காலத்தில் தோராயமாக தென்னிந்தியாவைக் குறிப்பிடும் சொல்லாம். அப்படியானால் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்பதெல்லாம் திராவிடர் நாகரிகம் என்பதும், நாகர்கள் திராவிடர்களே என்றும் அண்ணல் அம்பேத்கர் சொன்னதெல்லாம் கற்பனைக் கதை என்கிறாரா?

மனுதர்ம சாஸ்திரத்திலும், வேதத்திலும்கூட திராவிட என்ற சொற்கள் இடம் பெற்றதும் அந்தப் பொருளில் தானா? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட மொழிகள் திராவிட மொழிக் குடும்பம் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பரிதிமாற்கலைஞர் போன்ற ஆய்வாளர்கள் சொன்னதற்கெல்லாம் அடிப் படை கிடையாது என்பதுதான் அறிஞர் சமஸின் இந்த முடிவா?

இந்தியத் தேசிய பாடலில் இடம் பெற்ற 'திராவிட' என்பதை எல்லாம்கூட நீக்கிட வேண்டும் என்கிற அளவுக்குக் கூட அவரின் பேனா நாக்கு நீளும் போலும்.

திராவிட மொழி ஆய்வு அறிஞர் மறைந்த வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் திராவிடக் கலைக் களஞ்சியத்தைத் தயாரித்து ஒரு நகலை அன்றைய மத்திய மனிதவளத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷியிடம் (பிஜேபி) கொடுத்தபோது அந்த திராவிட என்பதை எடுத்து விடலாமே என்று சொன்ன பொழுது - சட்டென்று "தேசிய கீதத்திலிருந்து திராவிடத்தை எடுத்து விட்டால், நானும் நீக்கிவிடத் தயார்தான்" என்று முகத்துக்கு எதிரே சொல்லவில்லையா? முரளி மனோகர் ஜோஷியின் இடத்தைக் கொஞ்சம் கடன் வாங்கி சமஸ் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றுதான் தெரியவில்லை.

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்றும், அதில் கூறப்பட்டுள்ள ராட்ச தர்கள், அரக்கர்கள், குரங்குகள், கரடிகள் என்பவை எல்லாம் திராவிடர்களே என்று தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவுமா கண்டுபிடித்துக் கூறினார்கள்? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பி வந்த விவேகானந்தர், ஜவகர்லால் நேரு, பி.டி. சீனிவாசய்யங்கார் போன்றவர்கள் எழுதியுள்ளதற்கு எந்த உள் நோக்கத்தை சமஸ் வைத்திருக்கிறாரோ நாம் அறியோம்.

"இந்தி மேலாதிக்கத்தை எதிர்க்கும் நாம், திராவிட அரசியல் கருத்தாக்கம் என்பது மறைமுகமாகத் தமிழ் மேலாதிக்கத்தை முன் வைக்கும் அரசியல் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்?" என்று கேட்கிறார்.

இதைவிட ஒரு சிறுபிள்ளைத்தனமான கருத்து ஒன்று இருக்கவே முடியாது. தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்குத் தான் முதலிடம் என்பது ஆதிக்க மனப்பான்மையா? எங்களை எந்த மொழியும் ஆதிக்கம் செய்யக் கூடாது என்பது ஆதிக்க மனப்பான்மையா? ஆமாம் சமசுக்கு என்னாச்சு? அய்யோ பாவம்!

முதலாளிகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் உரிமை கோரினால் - அது தொழிலாளிகளின் ஆதிக்க மனப்பான்மை என்று கூறுவாரா? ஜாதி ஆதிக்க வாதிகளை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் போராடினால் அதற்குப் பெயர் தாழ்த்தப்பட்டோர் மேலாதிக்கக் கோட்பாடா?

நம்முடைய அண்டை மாநிலங்களில் திராவிட அரசியல் முழக்கம் இல்லை - அப்படி இருக்கும் பொழுது எதற்குத் திராவிடம் என்று கேள்வி எழுப்புகிறார்.

திராவிடர் என்பது ஓர் இனத்தின் பெயர்; யார் எங்கு குடியிருந்தாலும் இந்தப் பெயர் எப்படி மாற்றம் அடையும்?

ஒரு குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் பிரிந்து சென்றார்கள் என்பதற்காக அந்தக் குடும்பப் பெயர் இல்லை என்று ஆகி விடுமா? அப்பன் பெயர் தான் மாறுமா?

அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராகச் சென்றபோது அவர் ஆற்றிய அந்த முதல் உரையிலேயே 'நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். அப்படி நான் சொல்லுவதால் வங்காளிக்கோ மற்றவர்களுக்கோ எதிரானவன் அல்ல!' என்று சொன்னாரே - அண்ணாவை வேறு இடங்களில் எடுத்துக் காட்டும் கட்டுரையாளர் இந்த இடத்தை வசதியாக மறந்தது ஏன்? அல்லது மறைப்பது ஏன்?

ஒரு தாயிடமிருந்து கிளைத்த மொழியினர் என்றாலும் தென்னிந்தியாவில் இன்று தமிழர்கள் தலைமைக்கு யார் காத்திருக்கிறார்கள் என்று கேட்கிறார்.

இதன் மூலம் திராவிடர் என்பது தாய்க்குரிய இடம் என்பதை அவரை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டாரே!

"அந்த அளவிலேதான் நாமும் சொல்லுகிறோம் - மொழி வாரி மாநிலம் என்று அமைந்து விட்ட பிறகு அந்தந்த மாநிலம் அதற்குரிய தலைமைத்துவத்தோடு செயல்படும் என்பது பால பாடம்.

மேற்கு வங்கத்தினர் தங்களை வங்காளிகள் என்று சொல்லிக் கொண்டால், பங்களாதேசையும் ஆதிக்கம் செய்ய விரும்புகிறார்கள் என்று பொருள் படுமா?

உலக வரலாற்றில் முக்கியமான இனங்களில் திராவிடர் அடங்குவர். மானிட இன வர்ணனை (யிணீஸீஷீரீக்ஷீணீஜீலீஹ்) வல்லாரும் ஆதி மக்களினம் தோன்றிய இடங்களில் தென்னிந்தியாவும் ஒன்றெனக் கருதினர். தமிழ் மொழியை உருவாக்கி திராவிடர் வழிவழியே இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வாழ்ந்த ஆதி மக்களே! ('கலைக்களஞ்சியம்' தொகுதி 5 பக்.703-704).

என் இனப் பெயரை நான் சொல்லிக் கொண்டால் அது எப்படி எனக்குச் சுமையாகும்? என்னை ஈன்றவரை நான் தாயென்று சொல்லக் கூடாதா? தோழர் சமசுக்குத்தான் வெளிச்சம்.

திராவிடர் என்பது வெளித் தோற்றத்திற்கு இனப் பாகுபாட்டை வெளிப்படுத்துகிறதாம். அப்படியானால் எந்த இனமும், தன் இனப் பெயரைச் சொல்லக் கூடாது என்பதுதான் அவரின் கருத்தா?

ஆரிய ஜனதா கட்சி அல்லது இந்து ஜனதா கட்சி அல்லது என்றல்ல; பாரதிய ஜனதா கட்சி என்றே தன் அரசியல் முகத்துக்குப் பெயரிட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். என்கிறார்.

கோணிப் பைக்குள்ளிலிருந்து பூனைக்குடி வெளியில் வந்தது என்று தந்தை பெரியார் கூறுவார். சமஸ் விடயத்தில் அது நடந்தே விட்டது.

ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கை மாநிலங் களே கூடாது என்பதுதான்;  ஒரே நாடு - அது பாரத நாடு; ஒரே கலாச்சாரம் - அது இந்துக் கலாச்சாரம்; ஒரே மொழி - சமஸ்கிருதம் என்கிற ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கரின் சீடராக எப்பொழுது சமஸ் மாறினார் என்று தெரியவில்லை. விரைவில் அவர் உடை காவிமயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

திராவிடர் என்று சொன்னால் இனத் துவேஷியாகப் பார்க்கப்படுமாம்.  பிராமணர்களை, திராவிட இயக்கம் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டுமாம்.

திராவிடர் என்றால் இனத் துவேஷம் - பிராமணர் என்றால் மனிதநேயம் என்ற புதிய அகராதியைப் பூதேவர்களுக்காக உருவாக்கியிருக்கிறார் போலும்.

உன் சூத்திரப்பட்டம் ஒழிய பார்ப்பானை பிராமணன் என்று சொல்லாதே  என்று சொன்னவர் தந்தை பெரியார்.

உண்மையில் பிராமணன் என்று சொல்லுவதுதான் "துவேஷம்!"

அவன் பிராமணன் என்றால் நீ யார்? சூத்திரன் தானே? சூத்திரன் என்றால் இந்து வருண அமைப்பு - மனுதர்ம சாஸ்திரப்படி வேசி மகன்தானே, சந்தேகமே வேண்டாம்! சமஸ்கள் ஒரே ஒரு முறை மனு தர்மத்தை ஒரு புரட்டுப் புரட்டட்டும்! (அத்தியாயம் 8 சுலோகம் 415).

இது போதாது, கீதைதான் வேண்டும் என்றால், பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் (கீதை  அத்தியாயம் 9 சுலோகம் 32)  எனும் அத்தியாயத்தை பார்க்கட்டும். இந்த இரண்டும் பெருமைக்குரியவை என்று சமஸ்கள் வரித்துக் கொண்டால் நமக்கென்ன நோக்காடு!

பிராமண சமூகத்தை தமிழ் அரசியல் களத்தை விட்டே திராவிட இயக்கம் வெளியில் தள்ளி விட்டது. தமிழகத்தில் நடப்பு சட்டசபையில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே பிராமணர், இதுவும் அநீதியானதே! என்று மிகவும் துக்கப்படுகிறார்.

ஏனிந்த அவல நிலை என்பது தோழர் சமஸ் அறிவாரா? அவர்களின் ஆதிக்க நுகத்தடியில் இந்தச் சமுதாயம் ஆண்டாண்டுக் காலமாக அழுந்திக் கிடந்தது. சற்றும் ஈவு இரக்கம் இல்லாமல் மதத்தில் பெயரால் பிறப்பின் பெயரால், தன் காலடிக்குள் புதைத்து வைத்திருந்தது. திராவிட இயக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் வீறு கொண்டு எழுந்தார்கள் என்பதற்கான அடையாளமே இது. அதே நேரத்தில் திராவிட இயக்கத்தின் போர்வையில் பார்ப்பன அம்மையார் 15 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததை சமஸ் ஒப்புக் கொண்டு எழுதிய பிறகு இந்த 'அய்யோ பாவம்' எங்கிருந்து குதிக்கிறதாம்?

பார்ப்பனர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 3 சதவீதம் பார்ப்பனர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பெரியார் சொன்னதை எடுத்துக் காட்டியுள்ளார்.

அறிவு நாணயத்தோடு தோழர் சமஸ் கூறட்டும்; பார்ப்பனர் கல்வி, வேலை வாய்ப்புகளில் மூன்று சதவீதத்துக்கு மேல் இல்லை என்று கூற முன் வருவாரா?

பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி 20 சதவீதம் கேட்டார்களே, அவர்களை மூன்று சதவீதம் கேட்கச் செய்யட்டும் - பிரச்சினைக்கு அப்பொழுதே தீர்வு எட்டப்பட்டு விடுமே!

மூன்று சதவீதத்தினர் மூக்கு முட்ட அனுபவிப்பது தானே பிரச்சினைக்கே காரணம். இந்திய அளவில் அவர்களின் ஆதிக்க நிலை என்ன?

கோயில்களில் 100%, இந்திய ஊடகங்களில் 90%, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையில் அலுவலக செயலாளர்கள் 80%, அய்.ஏ.எஸ். 70%, அய்.பி.எஸ்.61% உச்சநீதிமன்ற நீதிபதிகள் 56%, மாநிலத் தலைமை செயலாளர் 54%, ஆளுநர்கள் 54%, மாநிலங்களவை உறுப்பினர்கள் 41%, மக்களவை உறுப்பினர்கள் 48%, மத்திய அமைச்சர் 36% (ஆதாரம்: லோக் சந்தா  - மராட்டிய ஏடு - 8.8.2016).

இதுதான் பார்ப்பனர்கள் பரிதாபமாக வீழ்ச்சி அடைந்துவிட்டனர் என்பதற்கு அடையாளமா?

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பொது மேலாளர் பதவிகள் 420 இல் தாழ்த்தப்பட்டவர் 3.9%, பிற்படுத்தப்பட்டோர் 1.19%, மலைவாழ் மக்கள் 1.42% என்ற நிலை எதை காட்டுகிறது?

மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோர் 7 சதவீதத்தை இன்னும் தாண்டவில்லை. சுத்திகரிப்புப் பணிகளில்தான் அதிக இடம் பெற்றுள்ளனர் ('டைம்ஸ் ஆஃப் இந்தியா' 1.9.2010) என்பதிலிருந்து என்ன தெரிகிறது?

தனியார் நிறுவனங்களில் 9052 அதில் இயக்குநர் பதவிகளில் 8387 (92.6%) பேர் உயர் ஜாதியினர் என்பதை அறிந்து வைத்திருந்தால் கட்டுரையாளர் அக்ரகாரத்துக்காக மூக்கு சிந்துவாரா? அடிப்படை விவரங்கள் ஏதும் அறியாமல்,  ஆதாரங்களும் இல்லாமல் சில்லுக்கோடு விளையாட்டுக் கட்டுரைகளை எழுத வேண்டாம் தோழர் சமஸ்.

(நாளை பார்ப்போம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner