Banner

மின்சாரம்

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இரண்டாண்டுகளைக் கடந்து வந்துள்ளது; ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் - சட்டப் பேரவையில் பாராட்டுக் குவியல்கள்.

இவற்றையெல்லாம் குறையாகச் சொல்ல முடியாது. எந்த ஆட்சியிலும் பொதுவாக இவையெல்லாம் நடக்கக் கூடியவைதான்.

வேண்டுமானால் திகட்டக் கூடியதாக இது இருக்கிறது என்று விமர்சிக்கலாம்.

சட்டமன்றத்தில் குறைகளை சுட்டிக்காட்ட எந்த எதிர்க்கட்சியாலும் முடியவே முடியாது. எதிர்க்கட்சிகளை சட்டப் பேரவையில் இருக்க அனு மதித்தால்தானே அவர்களால் பேச முடியும்? அப்படியே அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தால் ஆயிரம் ஆயிரம் குறுக்கீடுகள்; அதையும் மீறி குறை கூறினால் அவை அவைக் குறிப்பில் இடம் பெறாது.

சட்டசபையில் 110ஆவது விதி என்பது மிகவும் அரிதாகப் பயன் படுத்தப்படுவது; அதன்கீழ் அறிக் கையை முதல் அமைச்சர் படித்தால் அது குறித்து யாரும் எதிர்த்து பேசக் கூடாது - விமர்சனங்களை வைக்க முடியாது, - குறைகூறிப் பேச முடியாது.

இதனை இலாவகமாகப் பயன் படுத்தியதில் இன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களை வெல்ல யார் இருக் கிறார்கள் இந்த வையத்தில்? அதே நேரத்தில் பாராட்டி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆளும் கட்சியும், ஒத்து ஊதும் கூட்டணிக் கட்சிகளும் பிற் பகல் ஒன்றரை மணி நேரம் பாராட்டுப் பத்திரத்தை வாசித்துக் கொண்டே இருக்க தாராளமான அனுமதி.

பிற்பகல் ஒன்றரை மணி வரை  இந்த பாராட்டுச் சடங்கு தங்குத் தடையின்றி நடந்து கொண்டே இருக்கும். அதற்குமேல் மக்கள் பிரதி நிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் எதைப் பேசுவது!

ஒரு வருடம் வரை குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை அவைக்கு வரக் கூடாது (Suspension)  என்று எந்தக் காலத்தில் எந்த அவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்? இந்தச் சாதனையை வேண்டுமானால் மார் தட்டிச் சொல்லலாம் அ.இ. அ.தி.மு.க. அரசு.

எதிர்க்கட்சி என்றால் குறைகளை எடுத்துக் கூறத் தாராளமாக வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் அவர்கள் கூறுவதில் நியாயம் இருந்தால் திருத்திக் கொண்டு செயல்பட ஆளும் கட்சி முன்வர வேண்டும். இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் என்று திருவள்ளுவர் சொல்ல வில்லையா?

ஆனால் அதெல்லாம் பழைய காலம்; அ.இ.அ.தி.மு.க. சகாப்தத்தில் அதற்கெல்லாம் இடம் கிடையாது.

இவை ஒருபுறம் இருக்கட்டும். ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்குவோம் என்று சொன்னார்களே. இரண்டாண்டுக்குப் பிறகும் நிலை என்ன? தி.மு.க. ஆட்சியில் இரண்டே இரண்டு மணி நேரம் மின் தடை இருந்ததற்கே மண் ணுக்கும் விண்ணுக்கும் தாவிக் குதித் தார்களே --_ இப்பொழுது நிலை என்ன?

எப்பொழுது மின்சாரம் வரும்? எப்பொழுது போகும் --- என்று யாருக் குத் தெரியும்? மின்சாரம் வருவதும் உண்டு என்று வேண்டுமானால் கூறலாம். 10 மணி; 12 மணி நேரம் என்று மின்தடை!

இரவிலும் விட்டு விட்டு மின்சாரம் வந்தால் யார் நிம்மதியாகத் தூங்க முடியும்? உங்களைத் தூங்க விட மாட்டேன் -_ ஜாக்கிரதை! என்கி றார்களா? பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் நிலைமை என்ன? தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களின் கதி என்ன?

தொழிற்சாலைகள் எப்படி செயல் படும்? அவற்றை இழுத்து மூடும் நிலையில், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பில்தானே கை வைக்கப்படும். வேலை கிட்டாத தொழிலாளர்களின் வீட்டு அடுப்பில் பூனைக் குட்டி தானே தூங்கும்? திருப்பூர் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த ஊரின் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கட்டுமே!

சூரியன் மறைந்ததால் ஏற்பட்ட இருட்டுக்கு பெயர்தான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்றே சொல்லத் தோன் றுகிறது.

அறிவிப்புகளை அன்றாடம் மாண்புமிகு முதல் அமைச்சர் அறி வித்துக் கொண்டே இருந்தாலும், அந்த அறிக்கைகளைப் படித்துப் பார்க்கக் கூட மின்சாரத்தைக் கொடுத்தால் தானே முடியும்?

வந்ததும் வராததுமாக மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு என்ற முப்பிரி சங்கிலியால் மக்களின் முதுகு நார் நாராகக் கிழிக்கப் பட்டாயிற்று.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணாவின் நூற்றாண்டையொட்டி அவருக்குப் பொருத்தமாக நினைவு கூரும் - எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.230 கோடி செலவில் விண்ணை முட்ட எழுந்து நிற்கும் அறிவுச் சோலையாம் நூலகம் - திமுக ஆட்சி யில் - அதுவும் மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்து கட்டி முடிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்தால் அதனை இட மாற்றம் செய்யத் துடித்த துடிப்புக்கு என்ன பெயர்? ஆரியத் துடிப்புத் தானே! அம்மையாருக்கு ஆல வட்டம் சுழற்றும் வேலையை அட்சரம் பிறழாமல் செய்து வந்த திருவாளர் சோ ராமசாமியாலேயேகூட அதனை நியாயப்படுத்த முடியவில்லையே!

அதே போல தி.மு.க. ஆட்சிக் காலத்தில்  9 லட்ச சதுர அடியில் 450 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்ட சட்டமன்றத்தை உள்ளடக்கிய தலைமைச் செயலகத்தை முடக்கியதும், செம்மொழி மாநாட்டை ஒட்டி அறிவிக்கப்பட்டுச் செயல்பட்ட புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்த நூலகத்தை நொறுக்கிய கொடுமை என்ன? அதில் இடம் பெற்றிருந்த அரிய நூல்களும் பழங்கால ஓலைச் சுவடிகளும் குப்பைமேடாக அல்லவா ஆக்கப்பட்டது. சமச் சீர் கல்வியையும் பிடிவாதமாக அமல்படுத்த மறுத்தபோது உச்சநீதி மன்றம் உச்சந் தலையில் ஓங்கி அடித்த பிறகுதானே ஒட்டாரம் ஓய்ந்தது.

அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணி அடித்துச் சொன்ன வார்த் தைகள் சாதாரணமானவைகளா? The Law must permit change of policy because another political party with different political philosophy coming to power, as it is to the decision of the government. The state is the authority under article 12 of the constitution, and not a particular person or party which is responsible for implementation of the policies என்று உச்சநீதிமன்றம் கூறியதே! அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு வழங்கிய தங்கப்பூண் போட்ட பாராட்டுப் பத்திரமா இது? முதலில் இருந்த ஓர் ஆட்சி ஒரு காரியத்தைச் செய்தால் தனிப் பட்ட முறையில் செய்தார்கள் என்று யாரும் கருதிட முடியாது. இன்னொரு ஆட்சி வரும்போது பழைய ஆட்சி யினுடைய தொடர்ச்சி.

சென்ற ஆட்சி யின் செயலைப் பின்பற்ற வேண்டியது தான் _ வந்திருக்கும் ஆட்சியின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அதை உடைப்பதற்குப் புதிய அரசுக்கு அரசியல் சட்ட ரீதியாக உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் வரை யறுத்த வார்த்தைகளால் வறுத்தெடுத்த பிறகாவது அண்ணா தி.மு.க. ஆட்சி புத்திக் கொள் முதல் பெற வேண்டாமா?

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நலச் சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா கொண்டு வரப்படவில்லையா? (18.8.2011).

ஆரம்பக்கட்ட நிலையிலேயே அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகள் எதிர்க்க வில்லையா? கூட்டணி கட்சியாக இருந்தால் என்ன, அறிஞர் அண்ணாவின் பெயரில் இருந்த நூலகமாக இருந்தால் என்ன? - அவை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்தவை _ அதுவும் தன் ஜென்மப் பகைவரான கருணாநிதி செய்தது என்றால், அதன் குடலைக் கிழித்து மாலையாகப் போடாத வரை ஓய மாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டவர் ஆட்சி ஆயிற்றே!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண் டென்று கருணாநிதி சட்டம் செய்தாரா? விடப் போவதில்லை சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தலைகீழாகப் புரட்டியடிக்கவில்லையா?

உழவர் திருநாளை கலைஞர் கொண்டாடினார் தைப் பொங்கலை ஒட்டி என்றால் அதனை நான் ஏற்க முடியுமா? கொளுத்தும் கோடையில் உழவர் விழாவை நடத்துவேன் என்று ஏட்டிக்குப் போட்டியாக நடத்த வில்லையா? செம்மொழி பூங்காவா? - அந்தப் பெயரை இருட்டடிப்பு செய்! தொல் காப்பியர் பூங்காவா? - தொலைத்துக் கட்டு அந்தப் பெயரை _ என்பதெல் லாம் ஓர் அரசின் மகத்தான சாதனையோ!

2427.40 கோடி ரூபாயில் சேது சமுத் திரத் திட்டம் தி.மு.க. அமைச்சர் டி.ஆர். பாலுவின் முயற்சியால் வந்ததா?

மூக்கணாங் கயிறு போட்டு, முற்றுப் புள்ளி வை!

அய்யா சொன்னால் என்ன? அண்ணா விரும்பியிருந்தால் என்ன? அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தால் தான் என்ன? அதெல்லாம் அப் பொழுது; இப்பொழுது நம் முன் உள்ள பிரச்சினை - அது தி.மு.க. ஈடுபட்ட விவகாரம் - விடப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் வரை சென்று முடக்கி இருப்பது எப்படிப்பட்ட சாதனை? இரண்டாண்டுகளில் இப்படிப்பட்ட சாதனைகள் அனந்தம்! அனந்தம்!

சட்ட ஒழுங்கா? அடேயப்பா, ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, வன்முறையின் வாள் வீச்சுகள் நீதிமன்ற வளாகத்துக் குள்ளேயே குத்து வெட்டு கொலை.

இடதுசாரிகள் இவற்றிற்கெல்லாம் ஏற்றப்பாட்டு இசைப் பாட்டுப் பாடுவார்கள்; ஊடகங்கள் ஒலி பெருக்கிகளாகச் செயல்படும்.

ஆனாலும் மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் உணர்வு என்பது மட்டும் வேறுதான். அதி காரத்தில் இருக்கும்போது அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது.

மக்கள் உரிய முறையில், சரியான சந்தர்ப்பத்தில் தெரிவிக்க வேண்டிய நேரத்தில் தெரிவிப்பார்கள் என்பது மட்டும் உறுதி! உறுதி!!

கருநாடக மாநில சட்டப் பேரவையில் மீண்டும் பிஜேபி ஆட்சி தான் என்று பீரங்கி சத்தம் போட்டார்கள். அதுவும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி கருநாடக மாநிலத்தில் காலடி எடுத்து வைத்துத் தம் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில் நிலைமை அப்படியே தலைகீழாகப் போய் விட்டது என்று; அடேயப்பா பிஜேபி தலைவர்களும் அதுவும் அதன் செய்தித் தொடர் பாளர்களும், பார்ப்பன ஊடகங்களும் கிளப்பி விட்ட புயல் இருக்கிறதே -_ அது சாதாரணமல்ல.

மத்தியில் காங்கிரஸ் மீது படிந்திருந்த ஊழல் கறை மத்திய நிர்வாகத்தின்மீதான அதிருப்தி, காங்கிரஸ் ஜெயித்தால் யார் முதல்வர் என்ற குழப்பம் போன்ற விஷயங்கள் காங்கிரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது என்று துக்ளக் கொஞ்சம் மூக்கைச் சொறிந்து பார்த்தது. (துக்ளக் 8.5.2013 -_ பக்கம் 5).

தேர்தல் முடிவு என்ன? அடுத்து நடைபெற உள்ள மக்களவைத் தேர் தலில் -_ பிஜேபி தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்ற மிதப்பில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த பிஜேபியின் மூக்கு இழுத்து வைத்து வெட்டப்பட்டுள்ளது.

ஊழல் பேரிகை முழங்கி, நாடாளுமன்றத்தை முடக்கி, கருநாடகத் தேர்தல் நேரத்தில் தங்கள் பக்கம் மக்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்ற நப்பாசையின்மீது கருநாடக மக்கள் நல்ல அளவு மண்ணடித்து விட் டார்கள்.

பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ருடி, கருநாடகத் தேர்தல் முடிவு _ அதிருப்தியும், சோக மும் அளிப்பதாக உள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

பிஜேபியின் அகில இந்திய முன்னாள் தலைவர் திருவாளர் வெங்கையா நாயுடு கருநாடக சட்டமன்ற தேர்தல் முடிவு நாடு தழுவிய மனநிலையை பிரதிபலிக்க வில்லை என்று கூறி தமக்குத் தாமே ஆறுதல் ஒத்தடத்தைக் கொடுத் துள்ளார்.

2008 சட்டப் பேரவைத் தேர்தலில் 80 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இத்தேர்தலில் 121 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற் றுள்ளது. 2008இல் 110 இடங்களைப் பெற்றிருந்த பிஜேபி இப்பொழுது 40 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவு குறித்து திராவிடர் கழகத் தலைவர்  மானமிகு கி.வீரமணி அவர்கள் இரத்தினச் சுருக்கமாக தமது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

கருநாடக மாநிலத்தில் மீண்டும் மதச் சார்பின்மைக்கு - _ காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வாய்ப்புக் கிடைத்ததன் மூலம் -_ வெற்றி கிடைத்துள்ளது.

5 ஆண்டு கால ஊழலுக்கு மேல் ஊழல் -_ சுரங்கமாக இருந்த  பா.ஜ.க. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கிடைக்க வில்லை.

அத்வானி, மோடி முதலிய பல பா.ஜ.க. தலைவர்களின் பிரச்சாரம் _ எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை என்ற நிலைதான்!

மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி என்பது வெறும் பகற் கனவே என்பதற்கு முன்னோடி சாட்சியமே கருநாடகத் தேர்தல் முடிவு.

யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக் கூடாது என்பதன் விளைவே இம்முடிவுகள் என்று திராவிடர் கழகத் தலைவர் சில வரிகளிலேயே உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் (விடுதலை 8.5.2013, பக்கம்1)

காங்கிரஸின்மீது ஊழல்  குற்றத்தைச் சுமத்தும் தகுதி பிஜேபிக்குக் கிஞ்சிற்றும் கிடையாது. கருநாடக மாநிலத்தில் ரெட்டி சகோதரர்கள் சட்டசபைத் தேர்தலில் வாரி இறைத்த பண வெள்ளத்தில் மஞ்சள் குளித்து வெற்றிக் கனியைத் தட்டிப் பறித்த நிலையில், அந்த ரெட்டி சகோதரர்கள் இருவருக்குமே அமைச்சர் பதவியை அளித்து, அவர்கள் கைகளில் கோலினைக் கொடுத்து, பிஜேபி ஆட்சி குரங்காட்டம் போட்டது.

எடியூரப்பாவோ ஊழலைப் பஞ்சு மெத்தையாக்கிப் படுத்துப் புரண்டார்.

பிஜேபி மேலிடம் முதுகெலும்பு சிறிதுமின்றி என்னென்ன வகைகளில் எல்லாம் தாஜா செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்து பார்த்தும் எடியூரப்பாவை தம் வழிக்குக் கொண்டு வர முடியாத கையறு நிலைக்கு ஆளாகி விட்டது.

ஒரு மாநிலத்தில் உள்ள தன் கட்சியை, தன் கட்சி ஆட்சியை நிருவகிக்கத் துப்பு இல்லாத சோப்பலங்கித் தலைமைக்குப் பெயர்தான் பி.ஜே.பி. என்பது மக்கள் மத்தியில் நிரூபணமாகிக் கிழிந்து தொங்கியது.

ஸ்ரீராம் சேனை என்ற இந்துத்துவா காலிப்படை போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல! போட்டி அரசாங் கமாகவே தறி கெட்டு ஆடியது.

மதக் கலவரத்தை உண்டாக்க இவ்வளவுத் தொகை என்று அதன் தலைவர் நிர்ணயம் செய்தார் என்றால் தெரிந்து கொள்ளலாமே!

ஊழல் பெருச்சாளியான பி.எஸ். எடியூரப்பா கோயில் கோயிலாகத் திரிந்தார்; ஜோதிடர் பேச்சைக் கேட்டு நிர்வாணமாகவே படுத்துக் கிடந்தார். (பிள்ளை பிழைக்கவில்லை என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்தது இதற்கும்கூடப் பொருந்தக் கூடியதே!)

திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் இரண்டாவது கருத்தும் மிக மிக முக்கியமானது. அத்வானி, மோடி முதலிய பா.ஜ.க. தலைவர்களின் பிரச்சாரம் எடுபட வில்லை என்பதாகும்.

மூன்று முறை குஜராத் மாநிலத்தில் மோடி பிஜேபி ஆட்சியை நிறுவி விட்டார்; குஜராத் மாநிலத்தை இந்தியாவிலேயே முதல் இடத்திற்குக் கொண்டு வந்துவிட்டார். இவரிடம் இந்தியாவை ஒப்படைத்தால் - அதாவது பிரதமராக ஆக்கினால் இந்தியா வையும் முதலிடத்தில் முறுக்கேற்றி உயர்த்துவார் என்று குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள பார்ப்பன சக்திகளும், அவாளின் ஊடகங்களும் ஊதி ஊதி விளம்பரப் பலூனை ஆகாயத்தில் பறக்க விட்டன.

இராமச்சந்திர குகா போன்ற சிந்தனையாளர்களும் இந்தியாவின் பத்திரிகைக் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு போன்றோர் மோடியின் முகமூடியைக்  கிழித் தெறிந்துவிட்டனர்.

இந்தியா முழுமையும் உள்ள சிறுபான்மையினரின் ஒட்டு மொத்தமான வாக்குகள் மோடியைப் பிரதமராக்கத் துடிக்கும் பிஜேபிக்கு எதிராகவே திரும்பும் (கருநாடகத்தில் இப்பொழுது பார்த்து விட்டோமே!)

பி.ஜே.பி.யில் பெரிய மகானாகத் தூக்கி நிறுத்தப்படும் அடல் பிஹாரி வாஜ்பேயியின் கணிப்பு மோடியைப் பற்றி என்ன? ராஜதர்மத்தைக் கடைபிடிக்கத் தவறியவர் மோடி என்பதுதானே!

குஜராத் படுகொலையின் கதாநா யகன் மோடி! ஆயிரக்கணக்கான முசுலிம்களை மூர்க்கத்தனமாகக் கொன்று குவிக்க மூலகர்த்தாவாக இருந்தவர்? முதல் அமைச்சர் மோடி; அந்த நிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் செல்ல முடியும்? என்று முகத்தைக் கைகளால் புதைத்துக் கொண்டு வெட்கப்பட்டவர் வாஜ்பேயி அல்லவா!

முதலாளிகளின் செல்(வ)லப் பிள்ளையான மோடிக்கு முதலாளித் துவ நாடான அமெரிக்க விசா கொடுக்க மறுத்து விட்டதே!

இந்தியாவுக்குச் சுற்றுலா செய்ய வந்த சில அமெரிக்கத் தொழி லதிபர்களை பயன்படுத்தி, மோடியை அமெரிக்காவுக்கு அழைத்ததாக ஜோடனை செய்ததெல்லாம் எவ்வளவு கேவலம்!

இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழி தான் இந்தியாவுக்குப் பிரதமராக வர வேண்டுமாம்.

மோடியின் டுவிட்டர் சமூக வலை தளத்தில் 10 லட்சம் பேர் இணைத்துக் கொண்டுள்ளனர் என்ற ஒரு தகவல் பெரிய அளவில் பேசப்பட்டது.

இலண்டனைச் சேர்ந்த ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதளத்தில் பொறியாளர்கள் அதில் உள்ள மோசடியை நொறுக்கித் தள்ளிவிட்டனர். 50 சதவிகிதம் அதில் போலி என்பதை நிரூபித்துக் காட்டி விட்டனரே!

எத்தகைய அற்ப மனிதர் இவர் என்பதற்கு இன்னமுமா எடுத்துக் காட்டுகள் தேவை?

ஊழல் அற்றவராம் மோடி! பரிசுத்த யோவானாம் அப்பப்பா! எப்படி யெல்லாம் அய்ஸ் மழையில் குளிப்பாட்டுகிறார்கள்.

இவருக்குத்தான் மடியில் கனமில்லையே -_ லோக் அயுக்தாவை செயல்பட வைப்பதில் ஏன் தயக்கம்? இவரும் நீதிபதியை நியமனம் செய்ய மாட்டார். ஆளுநர் நியமனம் செய்தாலும் ஏற்க மாட்டார் என்றால் இதன் பொருள் என்ன?

மடியில் கனமிருக்கிறது. அதனால்தான் அச்சப்படுகிறார் என்பது வெளிப்படை அவ்வளவுதானே!

இப்பொழுது உப்பு சப்பில்லாத ஓர் அமைப்பை உருவாக்கி, உத்தமப் புத்திரன் என்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டிட முயன்றுள்ளார்.

தலைமைத் தணிக்கையாளர் (CAG) 2ஜி பற்றியும், சுரங்கத் தொழில் தொடர்பாக அறிக்கை கொடுத்தார். அவற்றை வைத்து அண்டத்தையே புரட்டும் இந்த பிஜேபி வகையறாக்கள், பார்ப்பன ஊடகங்கள் -இதே முதல் அமைச்சர் மோடியின் ஆட்சியின் அலங்கோலத்தை அம்பலப் படுத்தியதே - மூச்சு விட்டதுண்டா?

2009_-2010, 2010-_-2011 ஆண்டுக்கான தலைமைகணக்கு அதிகாரியின் அறிக்கை என்ன கூறுகிறது?

மோடி அரசின் நிருவாக அலங் கோலங்கள் காரணமாக 17 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற் பட்டுள்ளது என்று கூறி இருக்கிறதே.

இதைப்பற்றிய நிலை என்ன? இந்த விவரம் 3.4.2013 அன்று குஜராத் சட்டப் பேரவையிலும் தாக்கல் செய்யப் பட்டுள்ளதே! உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பனத்தியைப் போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொள்வது ஏன்?

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு ஆளானதில் இன்னொரு சோமாலியா குஜராத் மாநிலம் என்ற குற்றச் சாற்றுக்குப் பதில் என்ன?

மோடியின் முகவரியை குஜ ராத்தைத் தாண்டியும் வாக்காளர்கள் மிகச் சரியாகவே துல்லியமாகவே தெரிந்து வைத்துள்ளனர் என்பதற்கு சரியான அளவுகோல்தான் கருநாடக மாநிலத் தேர்தல் முடிவுகள்.

பா.ஜ.க., பகற்கனவு காணட்டும்! அதில் நமக்கென்ன நோக்காடு!

இராமாயணம் எழுதப் பட்டதே கி.மு. 400 என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது 17 லட்சத்து 25,000 ஆண்டுகளுக்கு முன் ராமன் பாலம் கட்டினான் என்பது அண்டப்புளுகு அல்லவா!

மனிதன் தோன்றியது எப்பொழுது? பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உண் டென்றாலும் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றவில்லை என்பது மட்டும் நிஜம். மனிதப் புல் பூண்டு முளைக்காத காலத்திலேயே ராமன் மனித அவதாரம் எடுத்துப் பாலம் கட்டினானா?

இலங்கைத் தீவு பிளவுபட்டது 9000 ஆண்டுகளுக்கு முன் என்று கூறப்படும் நிலையில், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டும் கேள்வியே எழவில்லையே!

பக்திக் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் அதனை நம்பும் மூடமக்கள் இருக்கக் கூடும். இது பகுத்தறிவு உலகமாயிற்றே. எதற்கும் நிரூபணம் கேட்கும் காலமாயிற்றே!

மதுரையிலே ராமசேது பாதுகாப்பு இயக்கம் எனும் பெயரால் கூட்டம் போட்டு விசுவ ஹிந்து பரிசத்தின் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியாவும், இந்து முன்னணி  மாநில அமைப்பாளர் ராம. கோபாலனும் என்ன பேசி னார்கள் (22.7.2007)?

ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை, அதைப் பற்றி கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று பேசினார்களே!

நம்பிக்கை என்பதை எல்லாம் வீட்டுப் பூஜை அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர  பொதுவுக்குக் கொண்டு வந்தால் ஏற்க முடியுமா?

காஞ்சி சங்கர மடம்கூட காத்தவராயனின் தாத்தாவுக்குச் சொந்தமானதுதான்; தாத்தா என் கனவில் வந்து சொன்னார் என்று காத்தவராயன் சொன்னால், காஞ்சி மடம் ஏற்றுக் கொள்ளுமா? பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் இரண்யாட்சதன் _- மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்துக் கடலில் குதித்தான் என்ற கதையை உங்கள் புராணத்துக்குள் பூட்டி வைத்துக் கூத்தடிக்கலாம்; அதுதான் உண்மை -_ பாடத் திட்டத்தில் வைத்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் வாயால் சிரிக்க முடியுமா?

ஏழு குதிரைகளைப் பூட்டி சூரியன் பூமியைச் சுற்றி வந்தான் என்பீர்கள் சூரியனைப் பழம் என்று கருதி அனுமான் விழுங்கினான் என்று கதை அளப்பீர்கள் _ குந்திதேவி சூரியனைப் புணர்ந்து பிள்ளை பெற்றாள் என்று எழுதி வைப்பீர்கள் இது எப்படி என்று கேட்டால் எங்கள் நம்பிக்கை _ - கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லுவீர்கள் _ பகுத்தறிவுள்ள மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

பகுத்தறிவா? கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் எப்படியோ நம்பித் தொலையட்டும்; அதனைப் பொதுக் கருத்தாகத் தீர்மானிக்க முண்டா தட்ட வேண்டாம் என்பதே நமது நிலைப்பாடு!

ஜெயங்கொண்டத்தில் தோழர்களே, ஜெயபேரிகை கொட்டப் போகிறோம்.

மே 2 ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் தமிழர் தலைவர் முழக்கமிடுகிறார்.

வட்டார மாநாடாக அது நடைபெறப் போகிறது.

மண்டல செயலாளர் தோழர் சி.காமராஜ், சுற்று வட்டார மாவட்டக் கழகத் தோழர்களின் அரும் ஒத்துழைப்பால் மாநாட்டின் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகின்றன.

எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - அவை செந்துறைவரை நீண்டு விட்டது. இந்தப் பக்கம் கடலூர் மாவட்டம் வரை நீள்கிறது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மாநாட்டு நடவடிக்கைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் அலை அலையான மண்டல மாநாடுகள், வட்டார மாநாடுகள் - புரட்சிப் பெண்கள் மாநாடு - அடுத்து ராஜபாளையத்தில் மாநில இளைஞரணி மாநாடு! (மே 4)

இயக்க வரலாற்றில் வேறு எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாநாடுகளின் அணிவகுப்புகள்.
ஒவ்வொரு மாநாட்டிலும் முத்து முத்தான தீர்மானங்கள் - உரை முழக்கங்கள் - கருத்தரங்குகள் - பட்டிமன்றங்கள் என்று கருத்துப் பிரச்சாரம் கனமழையாகப் பெய்து கொண்டிருக்கிறது.

ஜெயங்கொண்டம் மாநாட்டில் தமிழர் தலைவருடன் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன் முதலியோர் கொட்டு முழக்கமிடுகின்றனர்.

நமது இயக்க வரலாற்றில் இந்தப் பகுதிகளுக்கென்று தனித்த சிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் எல்லாம் சாதனைகள் பல புரிந்து, களங்கள் பல கண்டு வெஞ்சிறைகள் பல ஏற்று என்றென்றும் பேசப் படும் பெரியார் பெருந்தொண்டர்களாக - சுயமரியாதைச் சுடரொளிகளாக மறைந்தும் மறையாமல் நமது நெஞ்சங் களில் பசுமைத் தோட்டமாக நிறைந்து இருக்கிறார்கள்.

அந்தத் தலைமுறையோடு இயக்கம் முடிந்துவிட வில்லை. இப்பொழுதெல்லாம் அந்த வட்டாரங்களில் இளைஞர்களின் அணிவரிசை! இயக்கப் பொறுப்பாளர்கள் எல்லாம் இளைஞர்கள்.

இனமுரசு இயக்கம் இதுதான்!
சமூகநீதி இயக்கம் இதுதான்!
பகுத்தறிவு இயக்கம் இதுதான்!
பெண்ணடிமை ஒழிப்பு இயக்கம் இதுதான்!
ஜாதி ஒழிப்பு இயக்கம் இதுதான்!
சகோதரத்துவம் பேணும்,
சமத்துவ இயக்கம் இதுதான்!
நோய் வந்த பின் வைத்தியம் பார்க்கும் இயக்கமல்ல;
வருமுன் காக்கும் தொலைநோக்கு இயக்கம் இதுதான்!
அறிவை மட்டுமல்ல,
ஒழுக்கத்தை உயிரினும் மேலாக
ஓம்பும் கொள்கை
இதனிடம்தான் உள்ளது.

இது ஓர் உலக இயக்கம்;

மதமற்ற அமைதி உலகினைப் படைத்திடும் இயக்கம் இதுதான்!

இவற்றை உணர்வதால், இளைஞர்கள் இங்கே அணிவகுத்து வருகிறார்கள் - நேரில் காண வாருங்கள் தோழர்களே!

மதவாதம் தலைதூக்காமல் மானுடத்தை வழிநடத்துவோம்!

ஜாதீயம் தலை தூக்காமல் சமத்துவம் படைப்போம்!

ஜெயங்கொண்டத்தில் கொடுக்கும் குரல் ஜெகம் எங்கும் கேட்கட்டும்!

ஜெயபேரிகை கொட்டுவோம் வாருங்கள் தோழர்களே, வாருங்கள்!

மே 2 ஆம் தேதி மாலை உங்களுக்கான இடம் ஜெயங்கொண்டம்; ஜெயங்கொண்டம்;

கேட்கட்டும் ஜெயபேரிகை!

- மின்சாரம்